இன்று காசி என்னும் சொல் பற்றியும் தொடர்புடைய ஒருசிலவற்றையும் தெரிந்துகொள்வதுடன் இச்சொல்லைத் தமிழ் மூலங்களைக் கொண்டு, சற்று ஆய்வுசெய்தறிந்திடுவோம்.
"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்பது மிக்க வான்பொருளுய்க்கும் தேவாரப் பாடலாகும்.
இங்குக் கசிதல் என்ற வினைச்சொல் பொருந்திப் பொருள்மிகுக்கும் சொல்லென்க. ஒருவன் காசிக்குச் செல்வதே இறையை எண்ணிக் கசிந்துருகுவதற்காகத் தான்.
வெள்ளி போல் உருகி ஊற்றுமிடத்து அதில் ஒளிபடுமானால் வெண்மை மின்னி அழகுறுத்தும் என்பதில் ஐயமில்லை. ஒளியில் மின்னுதல் என்பது இதன் பொருள் என்று ஏனை மொழியினர் கொண்ட பொருளும் ஏற்புடையதே ஆகும்.
பட்டு மின்னுதல் என்பது மட்டற்ற மகிழ்வு தரும் பொருளாயினும், தேவாரம் தரும் பொருள் மனத்துக்கண் நிகழும் கசிவே ஆகுமாதலின். அம்மனத்தையே தளமாகக் கொண்டு பொருள் விளக்குதல் இன்னும் சிறப்புடைத்து என்பது மேம்பாடுடைய கருத்தெனக் கொள்க.
சுடு > சூடு என்று முதனிலை ( அதாவது முதலெழுத்து ) நீண்டு பெயர்ச்சொல் ஆவது போலுமே, கசிதல் - கசி > காசி என்று அமைந்து, மனம் கசிந்துருக இறைவணக்கம் இயற்றுமிடம் என்று பொருள் கொள்வது மிகுந்த சிறப்புடைத்து ஈண்டு என்று முற்றுவிப்போம்.
இப்பெயர் தென்காசி என்று தென்னாட்டிலும் மீள்வருகைகொள்வதால், தென் காசிக்கும் இப்பொருள் கொள்ள இடனாகின்ற தென்க.
காசி என்பது காக்குமிடம் என்று காத்தல் அடியாக நின்று, இருபிறப்பியுமாகும்.
மாசி என்பதில் மா (பெரிது) என்ற சொல்லுடன் சி விகுதி வந்ததுபோலும் இஃது விகுதிபேறு ஆகும். மாசி எனின் சிறப்புடைய மாதம். நாசி என்பது நாவின் மேலிருப்பது என்று பொருள்படும் உறுப்பின்பெயர். அதாவது மூக்கு, நாவொலிகட்குச் சிறப்புச்செய்வது. சி - சிறப்பு எனினுமாம். ஆசி என்பது ஆக்கம் சிறக்க என்பது. ஒப்பிட்டுக்கொள்க.
இதனைக் காஷி என்று எடுத்தொலித்தல் பின் வந்த மெருகூட்டல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக