மந்திரவித்தை என்பது எல்லாக் காலங்களிலும் மக்களிடைக் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது. இதை ஒரு கலையென்று கூறலாம். ஆங்கில உலகில் இதை ஓர் அறிவியல் என்று சொல்கிறார்கள். Occult Science என்னும் இதுபற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இது கலையா அறிவியலா என்பதைப் பற்றி நீங்கள் வாதத்தில் ஈடுபடலாம். தென் கிழக்காசியாவில் இது பயிலப்பட்டு பயன்பாட்டில் உள்ளதொன்றாகும்.
அசுரமாயம், பூதாசனம், சித்திரகருமம், இந்திரஜாலம், மாயாஜாலம், கர்மண, கிர்திஹாரம், மந்திரவித்யா, மந்திரரத்னா என்பவை முதல் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன. இந்தச் சொற்களை எல்லாம் வேண்டியாங்கு மந்திரவித்தையைக் குறிக்கப் பயன்படுத்துதல் கூடும்.
தமிழில் மந்திரம்செய்தல் என்று வழக்கில் சொல்லப்படும் இதற்கு, ஒட்டியம் என்றொரு சொல்லும் உள்ளது. சூனியம் செய்வோர் பூசனை செய்யும் காளிதேவிக்கு ஒட்டியக் காளி என்றும் சொல்லுவர்.
ஓர் உண்மை நிகழ்வை அறிந்தபின் அதை வேறுபடுத்தவே மந்திரங்கள் செய்யப்படுகின்றன. எ-டு ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள், அவளைப்பற்றி நிகழ்வறிந்த பின் செய்யப்படுவதே மந்திரவேலை. ஓடிப்போனவள் திரும்பவேண்டும் என்பது குறிக்கோள். இதனால் இந்த மந்திரம் ஒட்டியம் எனப்படுகின்றது. ஒட்டிச்சென்று இயல்விப்பது ஒட்டிய மந்திரம். ஒட்டுவித்தை. ஒட்டுமந்திரம். இரண்டாம் உலகப்போர் முடிந்துபின் துணிப்பஞ்சம் இருந்ததால் துணிகளை ஒட்டுப்போடும் தையல்காரர்கள் அதிகமிருந்தனர். இதழொலிகளால் ஆன கவியும் ஒட்டியம் எனப்படும்.
பில்லி, சூனியம் என்ற வழக்குகளும் உள்ளன. புல்லுதல் என்றால் ஒட்டிச்செல்லுதல் என்று பொருள். புல், மரம்போல் மேலெழாமல் தரையுடன் ஒட்டிவளர்வதால் (புல்லி வளர்வதால்) அஃது அப்பெயர் பெற்றது. புறக்காழனவே புல்லென மொழிப என்பது தொல்காப்பியம். ( மரபியல் காண்க). ஆனால் வரையறவுகள் இன்று வேறுபட்டுவிட்டனவால், தொல்காப்பியர் காலத்தின் "புல்லும்" இன்று நாம் குறிக்கும் புல்லும் வேறுபடுதல் கொள்க.
பில்லி என்பது புல் > புல்லி> பில்லி என்று திரிந்தது. உ-இ திரிபு.
சூழ்தல், உன்னுதல் என்ற இருசொற்களின் பகவொட்டாகத் தோன்றிய சொல்லே "சூனியம்" என்ற மந்திரவகை. சூழ் உன்னியம்.> சூ(ழ்) + (உன்)னியம். சூழ் ~தல் என்பது ஆலோசித்தல், ஊன்றி எண்ணுதல். உன்னுதல் என்பது அவ்வாறு எண்ணியன முன் கொணர்தல். உன்னுதல் என்பது தியானித்தலுமாகும். சூன்யமென்பது ஒன்றுமின்மை என்பது இங்குப் பொருளாகாது. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறள் நினைவிலிருக்கிறது. சூனியம் என்பது மிக்கத் திண்ணியனவாய் எண்ணி நிகழ்த்தப்படுவது. பில்லிசூனியம் என்பன இணைச்சொற்களாய் உலகவழக்கில் ஒருபொருட்குறிப்பின வாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
தொடர்புடைய மற்ற இடுகைகள்:
மந்திரம் 2 https://sivamaalaa.blogspot.com/2021/05/2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக