திங்கள், 10 ஜூலை, 2023

சம்பிரதாயம்

 சம்பிரதாயம் என்ற சொல்லைச்  சிந்தித்து உணர்வோம்.

முன்னர் நாம் வெளியிட்ட இடுகைகளில்,  தம் என்பதே சம் என்று திரிந்து உருக்கொண்டது என்பதை விளக்கியுள்ளோம்.

தம் என்பது ஒரு பன்மை வடிவமாகும்.  இரண்டு தன்-கள் கூடினால் ஒரு தம் ஆகிறது.  அதாவது ஒன்றுக்கு மேபட்ட  மனிதர்  தம்மைச் சுட்டிக்கொள்ள "தம்"  அல்லது தங்கள் என்பர்.   தாம் என்று நீண்டொலிக்கும் சொல்லும் இவ்வாறே பன்மை ஆகும்.  இணைப்பு என்பதைக் குறிக்க,  இந்தத் தம்மிலிருந்தே சம் என்பதைத் திரித்துப் பயன்படுத்தியது  அறிவுக்குப் பொருந்தியதே  ஆமென்க.

இருவர் போகம் செய்துகொள்வதை  "சம்போகம்"  என்றது இதனால்தான். ஒருவர் இன்னொருவரிடம் "போதல்",  போகமாகும்.  இந்த வழக்கு,  மக்கள் பேச்சினின்று வருவது ஆகும்.

தகரம் முதலாக வரும் சொற்கள் சகரமுதலாகத் திரியும் என்பதை முன்னர் இடுகைகளில் காட்டியுள்ளோம். மீண்டும் படித்து அறிந்துகொள்க.  எடுத்துக்காட்டாக ஒன்று: தனி > சனி.  சனிக்கிரகம் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த கிரகம்.  கிரங்களுக்குள் ஈசுவரப் பட்டம் உடையது சனி.

சிலவிடங்களில் மூலச்சொல்லை மறைத்துவிடுவது,   பொருளாக்கத்தடை இன்றி  ஒன்றைக் குறிப்பதற்கு ஏற்றதொன்றாம். இத்தகு பொருண்மையுணர்விற்குத் திரிபுகள் பெரிதும் உதவுவன.  தாய் போன்ற ஒருவரை  தாய் என்றே சொல்லலாம்,  அவர் பெண்ணாக இல்லாவிடினும்.  ஆனால்  அதைச் சாய் என்று திரித்து வழங்குவது இன்னும் சிறப்பு.  தாய்மை பற்றிய எண்ணங்கள் இடையில் நுழைந்து எந்தப் பொருண்மைத்தடைகளும் ஏற்படமாட்டா. சாயிமாதா என்ற சொல்லைக் கவனிக்கவும்.  தாய் > சாய்> சாயி. மேலும் இது ஈரானிலிருந்து வந்த சொல் என்று சொல்ல ஒரு வழி ஏற்படும்,  அது வேறு எங்கிருந்து வந்திருந்தபோதும்.  இவ்வாறு ஒரு பொருண்மை இடன்மாற்றுக்கும் வசதி ஏற்படுகிறது. 

நாம் கடைப்பிடிப்பதைத்  தம் வழியினின்றே பெற்றிருக்கலாம்,  பிற  குடும்பங்களி லிருந்தும்  பெற்றிருக்கலாம்,  எவ்வழியும் தரலாம்.   பின்பற்றப் பின்பற்ற,  அது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்ல்முறை  ஆகிவிடுகிறது.  தம்மவை என்பதற்கு  சம்;  பிறவழியின என்பது குறிக்க பிர.  தந்த செயல்முறை குறிக்க  தா-.  எல்லாம் சேர்க்கச்  சம்பிரதா  ஆகிறது.  இதில் அம் விகுதி கூட்டச் சம்பிரதாயம்  ஆகிவிடுகிறது.

தாமும் பிறரும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் செயல்முறைகளில்  நாம் தொடர்ந்து பின்பற்றுபவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: