புதன், 26 ஜூலை, 2023

சாகித்தியம் ( சாஹித்தியம் ) சொற்பொருள்.

 சாகித்தியம் என்பது இலக்கியத்தைக் குறிக்கும் சொல் என்றாலும்,  இது சிறப்பாகப் பாடுதற்குரிய வரிகளையே  பெரிதும் குறித்தற்குரியது.   சிலப்பதிகாரத்தின் பழைய உரையிலும் இச்சொல் வந்துள்ளபடியினால் இஃது தமிழர்கள் நன்கு  அறிந்துள்ள சொல் என்றே கூறவேண்டும்,  கருநாடக இசையினைக் கேட்டின்புறுவோருக்கு இஃது மிகுந்த பயன்பாடுள்ள சொல்லென்று கூறலாம்.  

நாம் இங்கு இச்சொல் எவ்வாறு தோற்றம் கண்டதென்பதையே கவனிப்போம். இச்சொல் தோற்றத்துக்குப் பல்வேறு மூலங்கள் காணப்பெறலாம் எனினும் நாம் இச்சொல்லைத் தமிழிலிருந்தே புரிந்துகொள்ளல் முயல்வோம்.இயற் சொற்களும் திரிசொற்களும் மிக்குடைய திரிந்தமைவே தமிழ்மொழியாகும்.

முன்னாட்களில் சொற்கள் பல நீட்டமுடையனவாக இருக்கவில்லை.  சங்க இலக்கியம் போலும் பழங்கால எழுத்துக்களைக் காணின்,  சொற்கள் பெரும்பாலும் நீட்டமில்லாதவையாய் இருந்தன.  எடுத்துக்காட்டாக,  ஆகாயம் என்ற சொல்,   தொல்காப்பியனார் காலத்தில்  " காயம் " என்றே இருந்தது,  சூரியன், நிலா இன்னும் ஒளிதரு தாரகைகள் பலவும் வந்து காயும் இடமே ஆகாயமாதலின்.  அது   காயம்  என்றே வழங்கிற்று.   காய்  +  அம்=   காயம்,  இவை காய்கின்ற பெருவெளி என்று அது பொருள் தந்தது,  வானத்திற் காயும் இவையே பெரிதும் ஆக்கம் தருவனவாய் இருந்தன.  ஆதலின்  காயம் என்பது ஆகாயம் என்று நீண்டது. காயம் என்பது புண்ணையும் குறித்தது.  புண்ணும் காய்தற் குரியது ஆதலின்,  அதுவும் பொருந்திவரும் பெயரே ஆகும்.  காயம் என்பது ஆகாயம் ஆனதனால்,  அது புண்ணாகிய காயத்திலிருந்து வேறாக அறியப்பட்டது காண்க.  இவ்வாறு பொருள்மயக்கம் தடுக்கப்பட்டது.

இவ்வாறு மாற்றப்பட்டபின்,  காயம் ( வானம்) என்ற சொல்,  வழக்கில் மறைந்தது. இந்தப் புதிய சொல்லுடன் கண்ணதாசன் கவி ஒன்று செவிக்கினிமை பயக்கின்றது:

" ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது, 

ஆகாசம் பூமி எங்கும்  அழகு* சிரிக்குது" என்று வரும்.  (*இளமை)

ஆகாயம் -  ஆகாசம்,  ய- ச  திரிபு.  போலி என்றும் சொல்வர்.

காயம் என்பது பெருங்காயத்தையும் குறிக்கும்,

பல நல்ல உடைகளை உடுத்துக்கொண்டு மயக்குபவள் வேயி.இந்தச்சொல் பின் வேசி என்று திரிந்துவிட்டது,  வேய்ந்த்கொள்ளுதலாவது,  உடுத்துக்கொள்ளுதல்.

இனி, சாகித்தியம் என்னும் சொல்லைக் காண்போம்.

இச்சொல்   ஆகு + இயற்றியம்  என்று அமைந்தது,

ஆகுதலாவது,  பயன்பாடு பெறுதல்.   நூல்கள் அல்லது சுவடிகள் பெரிதும் இல்லாமல் இருந்த காலத்தில்  ஒரு பாடலைப் பாகவதர் பாடுவார்.  அதன் வரிகளை பின்பு எழுதிக்கொடுப்பர்.    அவற்றைப் பாராயணம் செய்துகொள்ள இவ்வெழுத்துகள் உதவும்.  இயற்றிய  பாடல்  உதவுதலைக் குறிப்பதுதான்  ஆகுதல்.  ( ஆக்கம் )

இயற்றியம் என்பதுவும்   இயத்தியம் என்று திரியும்.  பற்றி ஒழுகுவதற்குரிய உணவுமுறை,   பற்று> பத்து >  பத்தியம்  ஆனது.  இது றகரத் தகர மாற்றீடு ஆகும்.  சிற்றம்பலம் > சித்தம்பலம் >  சித்தம்பரம்>  சிதம்பரம் என்பதுபோலுமே  ஆகும்.

ஆகு இயத்தியம்>  சாகியத்தியம்>  சாகித்தியம் .

அகர வருக்கம் சகர வருக்கமாகத் திரிதல்.

எளிமையான எடுத்துக்காட்டு:  அமணர் -  சமணர்.  இனி,  தனி> சனி என்று புதுச்சொற்களும் அமைவன. கிரகங்களும் தனிச்சிறப்புடைய கோள் சனி. அதற்கு மட்டுமே ஈசுவரப் பட்டம்.

ஒரு யகர எழுத்து  - குறைதல்.

கி என்பதை ஹி  என்று மெலித்தல்.

சாகித்தியம் என்ற சொல் அமைந்துவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.






கருத்துகள் இல்லை: