வெள்ளி, 2 செப்டம்பர், 2022

வரன், வரித்தல், வருதல் பொருள்.

இன்று வரன் என்ற சொல்லை அறிந்துகொள்வோம். இதை மாப்பிள்ளை என்ற சொல்லுடன் ஒப்பிடலாம்.

மாப்பிள்ளை என்போன், ( பிள்ளை- )பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தானுக்கு "வருபவன், " அவனுடைய மகன் போலும் ஒரு நிலையை அடைவோன்,  அவன்றன் மகன்களில் ஓர் பெருமை உடையவனாய்க் கருதப்பட்டவன் என்பவற்றை மனத்தில் இருத்தவே,  அவனை மாப்பிள்ளை என்று குறித்ததன் காரணத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.  மா - பெரிய,  பிள்ளை -  இங்கு மகன் என்று பொருள்.   மகனாய் மருவியவன் என்ற பொருளிலே மருமகன் என்ற சொல்லும் உண்டாயிற்று.

இதில் ஏன் வல்லெழுத்து மிக்கு வந்தது என்பதற்கு ஒருசொன்னீர்மைப் படுதலும் ஒரு காரணமாகும்.

வரன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். இதற்குக் காரணம் இவன் வேறு வீட்டில் பிறந்து வளர்ந்து, மணவினை மூலமாய்க் குடும்பத்தில் வந்து இணைதலால்.  இதற்குரிய வினைச் சொல்  வருதல் என்பதே ஆகும்.   வருதலால் வரன்.

வரித்தல் என்பது  வரு+ இ  >  இங்கு ( பெண்வீட்டுக்கு வருதல்) என்ற பொருள் தரும்  சொல்லே..அடுத்தல் என்ற சொல்லினின்று அடித்தல்  ( அடு+ இ)  என்பது தோன்றியது போலுமே இது. கோடு வரித்தலும்  முன்னுள்ள இடத்தினின்று தன் இடம் நோக்கி வரும்படியாக இழுத்துக் கோடு வரைதலால் ஏற்பட்ட சொல்லே ஆகும்.   மணமகளுக்கு வரிகள் வரைவதால் இச்சொல் மணத்தல் என்ற பொருளுடையதாயிற்று என்பர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

Edited: 13.11.2022. 0854




கருத்துகள் இல்லை: