வியாழன், 25 ஜூலை, 2019

கேழ்வரகும் கேவரும்.

செந்தமிழ்ச் சொற்களிலிருந்து  நம் பேச்சு மொழி எத்துணை திரிந்துள்ளது என்பதை, ஒப்பிடுங்கால் நாம் கண்டுகொள்ளலாம்.  பல இடைக்குறைச் சொற்களையும் பகவொட்டுச் சொற்களையும் நாம் சுட்டிக் காட்டியபோது இதை நீங்கள் உணர்ந்திருத்தல் கூடும்.

இன்று கேழ்வரகு என்ற பொருட்பெயரை  ஆய்ந்தறிவோம்.  இது  ஓர் உணவுப் பொருள்..  கேழ்வரகு என்பது ஒரு தானியம் அல்லது கூலம்.

விளைச்சலில் அரசுக்கு இறுத்தது போக குடியானவனுக்குத் தனக்கென்று தான் வைத்துக்கொள்வது " தானியம் ".  இஃது ஆங்கிலத்தில் வழங்கும் பெர்சனல் செட்டல்ஸ்,  பெர்சனால்டி முதலிய சொற்களைப் போன்று பொருளமைப்பு உடைய சொல்.  ஒன்றகக் கூட்டிச் சேர்த்து  எடுத்துச் \செல்லப்படும் காரணத்தினால் அதற்குக் கூலமென்றும்    பெயர்.   கு > கூ முதலிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் சில,  ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லப்படும் அல்லது பயன்பாடு காணும்  காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை.  கூ > கூலம்;  கூ> கூ ழ்  ( குழைந்து ஒன்று  சேர்வது ).  சேர்த்துவைத்தாலே கூலம் பொருளாகும்; இறைத்துவிட்டால் அல்லது  கொட்டிவிட்டு அள்ள முடியாவிட்டால் வீண்.   எறும்பு காக்கை குருவிகட்குப் பயன்படலாம்.

கூழ்வரகு என்பதுதான் கேழ்வரகு என்று திரிந்தது என்று அறிஞர் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இவை நிற்க.

இடைக்குறை என்னுங்கால் கேழ்வரகு என்பது கேவர் என்று பேச்சு மொழியில் திரிதலை நீங்கள் கேள்வியில் உணர்ந்திருப்பீர்கள். இத்திரிபில் உள்ள இடைக்குறையைப் பாருங்கள்:

கேழ்வரகு >  கேவர்.
ழகர ஒற்று மறைந்தது.
வரகு என்பது வர் என்று மாறிவிட்டது.

இதுபோல் வகரத்தின் முன் ழகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்
பாழ் >  பாழ்வம் >  பாவம்.

வரகு என்பது இன்னொரு தானியம்.  அது மென்மையும் வழவழப்பும் இல்லாமல்  (உண்ண அல்லது தடவ )  வரவர என்று இருப்பதால் அது வரகு என்று சொல்லப்பட்டது.
வறுத்ததும் கொஞ்சம் வரவர என்றுதான் இருக்கும்.   வர -  வற  - வறு - வறட்டு என்ற சொற்களின் உறவினைக் கண்டுகொள்க.  வரகை அறிந்தபின் தமிழர் கேழ்வரகை அறிந்தனர் என்பது தெளிவு.

கேழ்வரகு என்ற சொல்லமைப்பில் கு என்னும் இறுதி விகுதியை நீக்கிய பேச்சுமொழி,  வர என்று எச்ச வடிவிலின்றி வர் என்று இறுதிசெய்துகொண்டது திறமையே ஆகும். சொல்லிறுதிக்கு எது ஏற்றது என்பதைப் பேசுவோரும் அறிந்துள்ளனர்.  புலவர்பெருமக்கள் மட்டும் அல்லர்.

தட்டச்சுப் பிழை - பின் திருத்தம்.



கருத்துகள் இல்லை: