செவ்வாய், 23 ஜூலை, 2019

மா மை மயிர் மயில்

இன்று மை,   மா,   மயிர் என்ற  சொற்களைத் தெரிந்தின்புறுவோம்.

மை என்பது பல்பொரு ளொருசொல் ஆகும்.  இதன் பொருண்மையில் கருப்பு   என்பதும் ஒன்றாம்.

" மையிட்ட கண்மலர்ந்தாள்"  என்று கூறின்,  கருப்பு மையிட்ட என்பது பொருளாகக் கொள்ளின் சரியாகும்.  இப்போது வேறு நிற மைகளும் உண்டெனினும் இந்தச் சொற்றொடர் போந்த காலத்து இவை கவனத்துக்கு வராமை உணர்க.

மா என்பதற்கும் வேறு பொருள் உண்டெனினும்,   மா நிறம் என்பதுபோலும் தொடரில் கருமையையே குறிக்கும்.   ஆனாலும் பேச்சு வழக்கில் இஃது முழுக் கருமையைக் குறித்திலது என்பர்,  சற்று வெண்மையொடு  பெரிதும் கருமை கலந்த நிறத்தையே குறிக்குமென்பர்:  இதையும் மனத்தில் இருத்திக் கொள்வீர்.

மயிர் என்ற சொல்லில் இர் என்பதே விகுதி என்று கோடல் பொருத்தமாம். பகுதியாவது ம என்பதே.

இந்த ம என்பது மா என்ற சொல்லின் குறுக்கமாகும்.

மா என்பது சொல்;  ம என்பது தனித்து வாராமையின் சொல்லன்று என்றும் திரிபிற் போந்த வடிவம் என்றும் கூறுப.

இப்போது யாம் கூறவந்தது:

மா >  மா+ இர் >  மயிர்.   ஈண்டு மா என்பது ம என்று குறிலாய் நின்றமையின் முதனிலை குறுகி அமைந்த சொல்லென்று காண்க.

இதுபோலும்  எடுத்துக்காட்டு வேண்டின்:

சா +  அம் =  சவம் என்பதைக் கூறலாம்.  சாவு+ அம் =  சவமெனினுமாம்.
கூ + இல் =  குயில் என்ற ஒப்பொலிப் பெயரையும் காட்டலாம்.
மா + இல்=  மயில் எனினுமது.

வினைகளும் இவ்வாறு குறுகுதல்:  வா -  வந்தாள். வந்து.  வந்த.

இதுவே விதியாம். இது வாதத்தின் அப்பால்பட்டதாகும்.  பழைய இடுகைகளில் பரந்துபட்டு விளக்கமுற்றுள்ளது இது.

இனி,  மை + இர் =  மயிர் எனினுமாம்.

மயில் என்பது கரும்புள்ளிகள் உள்ள பறவை என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

வினையினின்று விகுதியேற்று அமைதலும் பிறவகையினின்று விகுதிபெற்றமைதலும் கண்டுகொள்க.

 பிழை புகின் பின் திருத்தம்,

கருத்துகள் இல்லை: