சனி, 30 ஜூன், 2012

பைக்குள் இருந்திடும் காசு கைக்குள் வயப்படல்


பைக்குள்  இருந்திடும் காசு -- நன்கு
பயன்பட வேண்டுமென் றெண்ணிடும் போதில்
கைக்குள் வயப்படல் இன்றி -- பிறர்
கண்களில் பட்டுக் கரைவதும் என்ன!


ஒன்றை நினைத்திங்கு வைக்க --மற்
றொன்றதன் முன்வந்து சென்றிட உய்க்க*
என்றுமெண் ணாததற் கெல்லாம் -- பணம்
ஏன்போகு தென்பதை இறைவனும் சொல்லான்.




*{சென்றிட உய்க்க,= செலவாகும்படி பணத்தை வேறு பாதையில் போகச்செய்ய}





இனிவரும் காலம்நற்  காலம் -- பணம்
இனிவரும் நின்றினி  ஏற்றமென் கின்றார்.
பனிவரும் ஞாயிறின் முன்போல் --அது
பறந்திடக் காண்பதில் மாற்றமொன் றில்லை.


இத்திங்கள் வேறில்லை போக்கு --- பணம்
இருக்கும் எனும்காலம் எண்பெறும்  நோக்கில்,
பத்தைந்து குரங்குகள் பாய்ந்து -- கூரைப்
பதிவினைப் பிய்த்தே எறிந்தன ஓடு.


கூரையை வேய்தொழி லாளர் -- தமைக்
கூப்பிட்டு மேல்சரி செய்கின்ற போதில்,
யாருக்கும் நேர்வதே என்றார்  -- இன்றேல்
யார்தாம் பிழைத்திடக் கூடுமென் கின்றார்.


யாரும் பிழைத்திட வேண்டும் -- பணம்
யாங்கும் உலாவி உழைத்திட வேண்டும்,
தீரும் பணச்சிக்கல் எல்லாம் -- இதே
தீர்க்க முடிவென்ற வார்ப்பினைக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை: