மேற்கண்ட அடிச்சொற்களை ஆராய்வோம்.
குருள் > சுருள்
சுருளுதல் என்ற சொல் குருளுதல் என்றும் திரியும். முன்னரே நாம் அறிந்துள்ள சகர ககரத் திரிபுகளை, இது மேலும் உறுதிசெய்வதாகும். இத்தகு திரிபுகட்கு இன்னொரு எடுத்துக்காட்டு முன்வைப்போம்: கேரளம் < > சேரலம். இது லகர ளகர பரிமாற்றுக்கும் உதாரணமே. இன்னொன்று: (இளகியம்) <> இலேகியம். இது அகர ஏகாரத் திரிபுக்கும் ஆகும்.
சுருளுதல் குருளுதல் இரண்டுமே வளைதல் ஆதலின், சுல் - குல் என்ற முந்து வடிவங்களுக்கும் இப்பொருள் இயற்கையாகவே உள்ளதென்று நாம் ஊகிக்கலாம். இந்த ஊகத்தை மெய்ப்பிக்க, குலவு என்பதன் பொருளை ஆய்ந்தால் அதற்கு வளைவு என்ற பொருளும் இருக்கின்றது. எனவே சுல் என்பதும் வளைவு, குல் என்பதும் வளைவு; பின்னர் லகர - ரகரத் திரிபினால் சுர் - குர் என்பதும் வளைவு என்பது தெளிவாகிறது. இனி. குலவுதல் என்பதை நோக்கினால் அதற்கு உலவுதல் என்ற பொருளும் உள்ளது. உலவுதல் என்பது சுற்றிவருதல்.
வளைவு - அடிப்படைக் கருத்து
இப்போது இந்த அமைப்பு விதியை நாம் அறிகிறோம்:
உல் - குல் - சுல். எல்லாம் வளைவு குறிக்கவல்லவையாகும்.
வு என்னும் தொழிற்பெயர் விகுதியை இணைக்க,
உலவு, குலவு, சுலவு ஆகும்.
ஆ என்னும் விகுதி இணைத்தால்:
உலா, குலா, சுலா என்று அடுக்கலாம்.
உலா, குலா என்ற சொற்கள் உள்ளன. குலா என்பது மகிழ்ச்சி என்று பொருள்படுவது. மகிழ்ச்சி வந்துவிட்டால் மனிதனும் விலங்கும் வளைவளைந்து ஆடுவதால் , இம்மகிழ்ச்சிப் பொருள் பெறுபொருள் என்பது தெளிவு.
சுல் அடிச்சொல் சிறப்பு
சுல் என்பதை எடுத்துக்கொண்டால், சுலவுதல், சுலாவுதல், சுளாவுதல் என உள்ளன. சோலையில் சுலாவினான் என்ற வழக்கு உண்டு. தேவாரத்திலும் உண்டு. சுளாவு = சுழலுதல். இங்கு லகர - ளகரப் பரிமாற்றமும் காணலாம். சுலாவுதல் என்பது சிலாவுதல் என்றும் திரிந்துள்ளதால், பொருள் அணுக்கமும் இருப்பதால் இங்கும் நாம் பெருவெற்றியை அடைகின்றோம். மனம் மகிழ்வு என்பதே வெற்றி.
இப்போது சொல்லாய்வு சுவைதருகிறது.
குலவு: புதுப்பதம் அமைவு - காரணம்: மறைவு
ஆனால் இது ஆடுதல் ( வளைதற்) பொருள் நாளடைவில் மறைந்துவிட்டதனால், குலா + ஆட்டு = குலாட்டு என்ற ஒரு சொல் ஏற்பட்டு, அது உற்சாகம் என்ற பொருளை அடைந்துள்ளது.
எடுத்துக்காட்டு: நீம் என்ற சொல்லில் பன்மைப்பொருள் மறைந்துவிட்டபடியால் கள் விகுதி சேர்த்து நீங்கள் என்ற சொல்லைப் படைத்துக்கொண்டது போலுமே இது.
இன்று கண்டுபிடிப்பதற்கு
இப்போது உல் என்பதனடித் தோன்றிய உல்லாசம் என்பதைக் கண்டறிவோம். இது தொடக்கத்திலே நுழைவாயிலைக் கொண்டுள்ளது என்னலாம். அதுதான் உல் என்பது. உல் என்பது சுற்றுதற் கருத்து - வளைதற் கருத்து இவற்றை உள்ளடக்கியுள்ள படியினால் அது குலவு, குலாட்டு என்பனபோல் மகிழ்வுக் கருத்தை வெளிப்படுத்தியது வியப்பு அன்று. உல் ஆயது > உல்லாயம் > உல்லாசம் என்று யகர சகரப் பரிமாற்றப்படி வந்துவிடுகிறது. உலவுதல் குலவுதல் எல்லாம் உள்ளடக்கமாய் இச்சொல் அமைகிறது. ஆயது எனின் ஆகியது. அவ்வளவே. சொல்லமைப்புக்கு அடிப்படை : உலவலும் குலவலும். மற்ற மகிழ் வகைகளை நீங்கள் உள்ளடக்குவதை இந்தச் சொல் தடுக்க அதனிடம் ஒன்றுமில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்..