புதன், 31 அக்டோபர், 2018

கடை வடையை நிறுத்து.

கடை தினம்தந்த வடை
காசுச் செலவினை உடை;
வடை தினம்வாங்கி நானும்
வாழ்வில் நொடித்தது காணும்

இனியேது செய்வேன் என்று
நான் ஏக்கம்கொண்டது முண்டு.
தனியாக நான்படு துயரைத்
தடுத்திட வேண்டேன் வடையை.

என்னினும் அவனுழைப் பாளி
எடுத்த வேலையில்பப் பாளி;
தன்னுள் பலவிதை வைத்தான்
தன்னையே மேல்வர உய்த்தான்.

மாலைதொறும் இனிப் பிசைவேன்
மாவொடு வடைசெய இசைவேன்;
காலையும் மாலையும் உழைத்தே
காசுச்செலவினைப் பிழைப்பேன்.

கடை என்பது  சீனா.  நான் என்பது அமெரிக்கா.
சீனாவின் பொருள்களை மிகுதியாக வரவழைத்து
அமெரிக்கா கடனாளி யாகிப் பலர் வேலையில்லாது
துன்புறுகின்றனர்.  அதைமாற்ற இப்போது வணிகப் போர்
நடைபெற்றுக்கொண்டு உள்ளது. கடனை அல்லது
கட்டவேண்டியதை எப்படிச் சமன்செய்வது. அந்தக் கேள்விக்கு
இந்தக் கவி பதில்தருகிறதா என்று பாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் பதிலைத் தாருங்கள்.

பிழைத்தல்:  இதன் பொருள் வேறுபடுதல் என்பதே.
அறிஞர் க.ப, மகிழ்நன் இதை விளக்கியுள்ளார்.
நூல்: தமிழ்களஞ்சியம் (1945 வெளியீடு). இங்கு மாற்றுவேன்
என்பது பொருள்.

உலகில் பிழைப்பதென்பதும் வறுமையை மாற்றிக்கொள்வதுதான்.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வாழ்த்துக் கவி

வருக வருக  தீ(பா)  வளியே
வருகவந்  தேற்றுக ஒளியே
மெருகு தரும் மனக் களியே----அருள்
மேனிலை வாழ்வெமக் களியே.

அன்புடன் யாவரும் இணைவோம்
அடுத்தவர் பண்பொடும் பிணைவோம்
அன்பு  மழைதனில் நனைவோம்
ஆழ்நண் புக்கலம் வனைவோம்,

பிரித்தியங்  கறாத தேவி----எமைப்
பேணி வளர்த்திடும்  துர்க்கை
உரித்தாம் நலமிகத் தருவாள்  ----- நாம்
ஓமெனக் காத்திட வருவாள்.

இனிப்புறு நற்பல காரம் ---- பல
ஏந்திப் பிறர்க்களித் திடுவோம்
கனிச்சுவை தன்னொடு தேறல்----மரக்
கறியுண வேமிசைந்   திடுவோம்.

ஆடைகள் பட்டென யாவும் --- நாம்
அணிந்து மகிழ்ந்திடு வோமே.
வீடெங்கிலும் ஒளி விளக்கு --- வைத்து
விழைந்து வணங்கிடு வோமே.

மக்கள் அனைவரும் தீமை --- அண்டா
மாகலைச் சீர்தனை மேவித்
தக்க பொருள்புக ழோடு ---தம்
தாய்மனை ஓங்கிட,   வாழ்வோம்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியவாகுக.




சனி, 27 அக்டோபர், 2018

நித்தியமும் பத்தியமும்

இற்று என்ற ஒலியுடன் உலவிய சொற்கள் பல இத்து என்று மாறிவிட்டனவென்பது இட்டுக்கட்டு  அன்று:   சொல்லாய்வில் ஓர் உண்மையாகுமென்றறிக.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் என்று திரிந்தது.   இற்று என்பது இத்து என்றானது மட்டுமின்றி  லகரமும் ரகரமாய்  அழகாக வேறு சொற்களில்போலவே திரிந்தமையைப்  பலரும் உணர்ந்துள்ளனர்.  பின் அது ஒரு தகர ஒற்றினையும் இழந்து சிதம்பரம் என்றானது.  இற்றை நிலையில் சிற்றம்பலம் வேறு, சிதம்பரம் வேறு என்று நினைக்கின்ற அளவிற்கு மக்கள் முந்து வடிவினை மறந்தனர்.  வேறு சிலர் மாற்றமான சொல்லமைப்புகளையும் உரைத்தனர்.

மொழிகளில் புதிய சொற்கள் தோன்றுதற்குத் திரிபுகளே உதவியாய் உள்ளன. இல்லையென்றால் ஆதிமனிதன்  பிள்ளை  நாலு சொற்களுடனே தாம் நானிலத்தை வலம்வந்திருப்பான். இதை உணர்ந்த தொல்காப்பிய முனிவர் இயற்சொற்களுக்கு அடுத்துத் திரிசொற்களைச் செய்யுளீட்டச் சொற்களாய் அறிவித்துச் சூத்திரம் செய்தார்

நித்தியம்:

நித்தியமென்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.  உலகில் நிற்பதும் நில்லாததுமென இருவகை உண்டு. நில்லாமல் ஓடிவிடுவதில் நித்தியம் எதுவுமில்லை.  காலம் கடந்தவுடன் உயிர் ஓடிப்போகிறது.   எங்கே போயிருக்கிறது என்பதுகூட நாமறியாததாய் உள்ளது.  "குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே"  என்று வள்ளுவனார் கூறுகிறபடி உயிர் பறந்தோடிவிடுகிறது. நிலை நில்லாதது இவ்வுலக வாழ்வு.    நித்தியம் இல்லை.

நில்+ து >  நிற்று + இ + அம் = நிற்றியம்  >  நித்தியம்.

நித்திய ஜீவன் என்ற தொடரில்  ஜீவனென்பது  யிர் > ஜிர் > ஜீ;     ஜீ + அன்= ஜீவன் என்று இலங்கை ஞானப்பிரகாச அடிகளார் விளக்கியுள்ளார்.  யிர் என்பது உயிர் என்பதில் உகரம் நீங்கிய தலைக்குறை ஆகும்.

உயிர் என்பதே மிக்க அழகுற அமைந்த சொல்லாகுமே!   உ =  உள்ளே;  இர் = இருப்பது,  உடலுக்குள் இருப்பது உயிர்.  ஆகவே,  யிர்> ஜிர் என்று எடுக்காமல் இர் > ஜிர் என்றே விளக்கலாம்.   இரு என்பதன் அடியே இர் என்பது.  ய  -  ச  - ஜ என்பதோ வழக்கமான திரிபுவகை.  பல உலகமொழிகளில் காணப்படுவது ஆகும்.   யூலியுஸ்  சீசர்  > ஜூலியஸ் சீசர்.    யேசுதாஸ் > ஜேசுதாஸ்.  யமுனா - ஜமூனா.  ஜாஸ்மின் - யாஸ்மின்.  இதைப் பல்கலையிற் சென்று படிக்கவேண்டுமோ!  காய்கறி வெட்டும்போதே கற்றறியலாம்.  எத்தனை வேண்டும் இப்படி?  யி என்பதில் இ என்பதையும் இணைக்கலாம்.

பத்தியம்.

தமிழ் உலக முதல்மொழி என்று வாதாடவரவில்லை. முதல்மொழியாகவும் இருக்கலாம். நேற்றைய மொழியாகவும் இருக்கட்டும். நேற்றுவந்தவனிடமிருந்து எடுத்துக்கொள்வதும் ஓர் எடுத்தலே ஆகும்.

நோய் தீரவேண்டுமென்றால் பத்தியம் பிடிக்கவேண்டும்.  பிடிப்பது என்று ஏன் கூறுகிறோம் என்றால் அது பற்றி ஒழுகுதற்குரிய ஒன்றாக இருப்பதனால்.

பற்று > பத்து > பத்து+ இ + அம் =  பத்தியம்.

பற்றுதற்குரிய ஒழுகலாறு என்பதே சொல்லமைப்புப் பொருள்.  வாத்துமுட்டை, கோழிக்கறி, கருவாடு, பச்சைமிளகாய், பாகல்  இவையெல்லாம் விலக்கவேண்டும் என்பதைப் பத்தியமென்ற சொல்லில் எதிர்பார்த்தல் கூடாது.  எத்தனை விடையங்களைத்தாம் ஒரு சொல்லுக்குள் அடைத்துவிட முடியும்?