புதன், 31 மே, 2017

முதிர்வு. முது > முத்து > முத்தி

நாம் ஏன் நெடுநாள் வாழவேண்டும்? அப்படி உலகில் என்ன இருக்கிறது?
நாள்தோறும் வேலைக்குப் போவது,  அது முடிந்து வீட்டுக்கு வருவது,
சாப்பிடுவது, குளிப்பது, உறங்குவது, மீண்டும் எழுந்து வேலை....இதில்
என்ன இருக்கிறது! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடவுள் ஏன் சிலருக்கு நூறு வயதையும் வேறு சிலருக்கு ஆறுவயதையும்
கொடுத்திருக்கிறான்? இதுவும் தெரியவில்லையா.......?

மனிதன் இறைவனை உணரவேண்டும். சிலருக்கு இவ்வுணர்வு ஏற்படுவதே
இல்லை. ஏற்பட நாள் ‍~   காலம் தேவைப்படுகிறது. இந்தக் காலத்தை
அவனுக்கு அருளி, இறைவனை உணரச்செய்தால்தான்  அவன் முத்தி பெறுதல் கூடும். எனவே அவரவருக்கு வேண்டிய கால அளவினை
அவனே அருளுகின்றான். இறைவனை உணர்ந்தவன் நெடுநாள் இங்கு
திரியவேண்டுவதில்லை. ஆகவே இறைவன் அவனை  எடுத்துக்கொள்கிறான்.

இவன் எப்போது கடவுளை உணர்ந்தான்? ஒன்றுமே அறியாதவன் ஆயிற்றே
என்று நீங்கள் கருதலாம்.  அது உங்கள் கருத்து. இறைவன் அறிந்த அனைத்தும் நீங்களும் அறிந்திருக்கவேண்டும் என நீங்கள் நினைப்பது தப்பு.

சிலர் விளம்பரம் உடையவராக இருக்கலாம்.  உண்மை அறிவுக்கு விளம்பரம் ஒரு சான்று ஆகாது. அறிந்தோனாகப் பலரால் நினைக்கப்படுபவர் ஒன்றுமறியாதவராக இறைவனால் தரம் அறியப்பட்டிருக்கலாம் அன்றோ?

இறைவன்பால் யார் உண்மைக் காதலுடையாரென்பதை அவன் அறிவான்.
அந்தக் காதல் இறையுணர்வின் முதிர்வு ஆகும். முது > முத்து > முத்தி.
இது பின் முக்தி என்று அழகுபடுத்தப்பட்டது ஆகும்.

செவ்வாய், 30 மே, 2017

கை தொடர்பாக எழுந்த சொல்வழக்குகள்

கை கால் தொடர்பாக எழுந்த சொல்வழக்குகள் உலகின்
எல்லா  மொழிகளிலும் காணப்படுவனவாகும்.. ஆங்கில
 மொழியில் கையை அடிப்படையாக வைத்து "ஹேண்டல்"
 (handle)  என்ற சொல் உள்ளது, ஊழியர்களைக் குறிக்க
மலாய் மொழியில்  "காக்கிதாங்ஙான்" என்ற‌ தொடர்
பயன்படுத்தப்படுகிறது. இதன் மொழிபெயர்ப்பு
 "கைகால்கள்" என்பதாகும். ஏனை மொழிகளையும் எண்ணிப்
 பட்டியலிட்டால் இன்னும் மிகுதியான செய்திகள் கிட்டும்.
 சில உதாரணங்கள்போதும்.

எண்ணம் நிறைவேறும்  என்பதற்கு " எண்ணம் கைகூடும்"
 என்றும் சொல்லலாம்.  ஒன்றைச் செய்தலைக் 
"கையாளுதல்" என்று  குறிக்கிறோம்.  இனி
 "கையகப்படுத்துதல்" என்ற வழக்கும்
கவனத்துக்கு உரியதாகும்,  ஒருவனைக்
 காவல் துறையினர்  பிடிப்பதை "கைது:" என்ற
 சொல்லாற் குறிக்கிறோம். இச்சொல் மிக்க எளிதாக 
து விகுதி மட்டும் சேர்த்து அமைக்கப்பட்டதாகும்.
பிடித்தல் என்பதும் கைது என்பதும் கை தொடர்பான
 சொற்களாகும். கைது என்பதை அரெஸ்ட்
 என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரானதாகப் 
பயன்படுத்துவர்.

கைம்மை, கைம்பெண் என்பனவும் கையடிப்படையில்
தோன்றியவை. கையறுநிலைத்துறை,  கையறவு என்ற
 இறப்பு, இரங்கல் குறிக்கும்பதங்களும் விளக்கத்துக்குரியவை.
 கை என்பது பக்கம் என்றும் பொருள்தரும்.   "அந்தக் கையில்
 இருக்கிறது" என்று குறிக்குங்கால் கை என்பது பக்கம் என்று பொருள்படுகிறது..

கைக்கூலி, கையூட்டு என்பன வழக்கில் ஊழல் குறிப்பவை.

கை என்ற சொல்லுடன் கூடிய சொற்கள் மிகப்பல.

அவற்றை அவ்வப்போது கண்டு மகிழ்வோம்.
அவற்றைப் பயன்படுத்தி இறவாமல் காப்பது
 தமிழறிவினார் கடன் ஆகும்.

ஞாயிறு, 28 மே, 2017

நேற்றுளார் இன்றோ இல்லை,

நேற்றுளார்  இன்றோ இல்லை,
நினைவினில் மட்டும் உள்ளார்!
கூற்றிலே பேரைக் கேட்டோம்
கூடிட வாய்ப்பே இல்லை!
ஆற்றிலே ஓடும் வெள்ளம்
அதுதனில் மூழ்கி மாய்ந்தார்!
ஈற்றிலே சென்று வீழ்தல்
இயல்பினுக் கென்ன செய்வோம்!

விளக்கம்:

கூற்றிலே ‍~  பிறர் கூறுதலிலிருந்து;
கூடிட ~ மீண்டும் கூடிப் பேச;
ஈற்றிலே ~  இறுதியிலே;
இயல்பினுக்கு ~  இயல்பு ஆகும்; அதற்கு....



Please note that our  internet postings are actively being blocked.
Please wait until current blocking activities cease.