வியாழன், 30 ஏப்ரல், 2015

On predicting quakes: "வெள்ளம் எதிர்வர"

வெள்ளம் எதிர்வர  வெல்லும் எறும்புகள்
வள்ளம் நிகர்த்த மிதவைகள் வேய்ந்திடும்,
மாய்ந்திடா வாழ்வு  மகிழ்வுற மேற்கொள்ளும்.
சாய்ந்திடும் தூணெனச் சற்றுமுன்  காண்குரங்கு
கூட்டமாய் ஓடிநிலத் தாட்டம் பிழைத்திடும்.
மாந்தனோ ஈடில்  பகுத்தறி  வுள்ளவனே!
ஏன் தம்  இடர்வர  வின்னவன்  முன்கண்டு
வாழ்ந்தான் மடிவின்றி வையகத் தென்றில்லை?
கோளும் குலுங்கிடக்   காலமாகி  னானென்று
மேலும் இதுவே நிகழுமோ  வரு நாள்?.

தொகுத்தறிந்  துய்வனோ தோமற்  றுலகில்
பகுத்தறி வாளன்மாந் தன்.




வெல்லும் எறும்புகள் :  வெள்ளம் வந்தாலும் எறும்புகள் தம் அணிய  (readiness, preparedness ) ஆற்றலால்  தப்பிப் பிழைக்கும் ஆற்றலுடையவை.
வள்ளம் :  படகு.
வேய்ந்திடும்:  புனைந்திடும், அமைத்திடும்.
 தம் இடர்:  தமக்கு இடர்.
நிலத்து ஆட்டம் :  நில  நடுக்கம்.
ஈடில்  :  இணையற்ற.
இன்னவன் :  இப்படிப்பட்டவன்
காண் :  அறிந்துகொண்ட.
மடிவின்றி :  மடிவு இன்றி:  மரணம் அடையாமல்
என்றில்லை :  என்ற வெற்றித்தன்மை இல்லை.
வையகத்தென்றில்லை::  வையத்தில் என்று இல்லை .  இல் உருபு  தொக்கது.
கோளும் :  பூமியும் .
வரு நாள்:  எதிர்காலத்தில்.
உய்வனோ:  முன்னேறுவானோ .
தோம் அற்று:   குற்றம் அற்று.

புதுக்கவிதை போல் எழுதி பின் மரபுக் கவிதையாய் மாறிவிட்டதே.

edited.




சனி, 25 ஏப்ரல், 2015

புத்தர் பூமியில்..............



நிலைமை யாதென்ற போதிலும்  புவிக்குத்
தலைமை தாங்குவள் இயற்கைத்  தேவி!
மலைகளைப் பிளப்பாள் கடலில் அளப்பற
அலைகளை  விளைப்பாள்  மனிதரைத் தொலைப்பாள்.
கேட்பதற் காருளர்  வாட்பெரு வீரியை?

கல்லும் மண்ணும் காற்றும் விண்ணும்
நெல்லும் புல்லும் அவட்கா  யுதமே.

புத்தர் பூமியில் வித்தையைக் காட்டினள்

*   *   *    *

நீயிரங் காயோ தேவி நின்னைத்
தாயெனப் பணிந்தனர் நீயணைக் கலையோ?

நின்கடை விழிக்கென ஏங்கியோர்
தம்முடல் உயிர்பொருள் இழந்தனர் காணே.

பத நீர்.

சில உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் (செய்யுள் வழக்கில்)  இடம்பெறாமல் இருக்கும்படி புலவர்கள் பார்த்துக்கொண்டனர்,  மக்கள் மொழியினின்று சற்று  வேறுபட்ட உயர்தர மொழியையே தாங்கள் பயன்படுத்துவதாகப்  புலவர்கள் பெருமை கொள்ள இது அவர்களுக்கு வசதியைத் தந்தது.  இது தமிழில் மட்டுமா?  Queen's English  என்ற ஆங்கிலம்  உயர்தர வழக்கையே குறிக்கிறது.  

நாமறிந்த மலாய் மொழியிலும்  அரசவையில் கடை ப்பிடிக்க வேண்டிய மரபுகளும்  அரசரிடம் பயன்படுத்தத் தக்க உயர்தர மொழி வழக்குகளும்  இன்னும் உள்ளன.  காமு, லூ,  அவாக்  முதலியவை விலக்கப்பட்டன . அக்கு என்பதினும்  ஸாய என்பதே விரும்பப்படும் சொல்.  
வணிக நிறுவனங்க்களும்கூட  "அண்டா " என்னும் சொல்லையே   பயன் படுத்துகின்றன. 

எல்லாம் மனித நாவினின்றும் எழும் சொற்களே அல்லவோ?

பத நீர் என்ற சொல்லை இப்போது பார்க்கலாம்.  இதைச் சங்க இலக்கியத்தில் தேடிக்  கண்டு பிடியுங்களேன்.  இதை மக்கள் பதனி என்பர்.

நீர் என்பது குறுகும்.

வாய் நீர் >  வானி,  வாணி.
பாய் நீர் >  பாணி.   (பாயும் நீர் :  ஆற்று நீர்.)
கழு நீர்  >  கழனி   (கழனிப் பானை).
தண் நீர்  >  தண்ணி.
வெம் நீர் >  வெந்நீர்.>  வென்னி .

பதம் என்பதும் தமிழே.  பதி + அம்  = பதம்.   இது இந்தோ ஐரோப்பியத்தில்  ( அவஸ்தான் முதலிய  " மேலை" ஆரியத்தில் )  உள்ளதா என்று கண்டுபிடியுங்கள்.  இல்லாவிட்டால்,  சமஸ்கிருதம் இதை உள் நாட்டில் (local)
மேற்கொண்டதாகும்.