சனி, 28 செப்டம்பர், 2013

Many beautiful poems in Tamiz..

எத்தனை எத்தனை இன்கவிகள்
என்னை வாசியென் றோடிவந்தே
ஒட்டிக் கொள்வன இதழ்களிலே‍‍‍............................
அவற்றை
ஒத்திக் கொள் வேன் நெஞ்சகத்தில்.

எண்ணி இருக்கையில் மணிப்பொறியின்
சின்ன முள்ளும் பெரிதினைப்போல்
தின்னும் முடிக்கும் நேரத்தினை!
பின்னும் இமைகள் உறக்கத்தினால்.

கவிமணி தேசிக வினாயகனார்
கவியை எழுத விழைந்ததுண்டு!
குவியும் பற்பல சோலிகளால்
 அவிய‌ ஒழிந்தன நாட்கள்பல.


வானொடு கொஞ்சும் வண்ண நிலா
வாய்த்த இரவினை வளர்த்திடுமேல்
தேனொடு குலவும் தெளிகவியைத்
தேடிப் பாடிடத் திகட்டிடுமோ?


எழுத = பல சுவைக் கவிதைகள் என்னும் திரியில் பதிய அல்லது இட.
மணிப்பொறி  = ‍  கடிகாரம்,   அவிய‌ -- பயனின்றி,  ஒழிந்தன--- ‍சென்றுவிட்டன. வளர்த்திடுமேல் -  நீளச்செய்யுமானால்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனோன்மணீயம் சுந்தரனார் பாடலுக்கு விளக்கம்

continued from a post on 23.09.13

மனோன்மணீயம்  சுந்தரனார் பாடலுக்கு விளக்கம் இங்கு தொடர்கிறது,

இப்போது  வருபொருள் உரைக்கும் வல்லபம் என்பதனைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் prophecy என்பதற்கு நேரான பொருளையே ஆசிரியர் வருபொருளுரைத்தல் என்று குறிக்கிறார். தமிழில், வரவுரைஞர், முற்றறிஞர் என்று குறிக்கலாம்.தீர்க்கதரிசி :  தீர்க்கமாக (தீர்மானமாகவும் முடிவாகவும்) யாவற்றையும் தெரிந்த இறைப்பற்றாளர். தீர்க்கம் ‍:  தீர அறிதலைக் குறிக்கின்றது. தரிசி ‍ : தெரிந்தவர். (தெரி+சி ). தீர்தல், இங்கு தீர்ந்தது எதுவெனில் ஐயப்பாடு தீர்ந்தது.

வல்லபம் ‍: வல்லவம், திறன். ஒன்றைச் செய்யமுடிந்த நிலை.

இத்தகு வரவுரை திறனைப்  பெற்றிருந்தால்தான் என்ன?  ‍என்கின்றார் ஆசிரியர்.


மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;

மண்ணிடை விண்ணிடை = மண்ணிலும் விண்ணிலும், அதாவது இவ்வுலகில் எங்கும் எதிலும்; மறைந்த =  நாம் அல்லது யாரும் அறியாமல் மறைவாக உள்ள;  பெரு ரகசியங்கள் யாவையும்= உணரவேண்டிய உள்ளுறைவுகள் எல்லாவற்றையும்; உணரும் பெருமையும் ஞானமும் = மனத்திலறியும் தகுதியும் தான் யார், உலகு எத்தகையது, இறைவன் யார் என்னும் அறிவும்; பெற்றால்தான் என்ன?

இரகசியம் என்பது, முதற்கண் அகத்தில் இருந்து வெளிப்படாததையே குறிக்க எழுந்த புனைசொல் ஆகும். இச்சொல்லில் முதல் மூன்றெழுத்துக்கள் "இரக" என்பது இரு+அகம் என்று பிரியும். நெஞ்சுக்குள்ளே இருந்து இன்னதென்று வெளியில் பிறர் அறியாத நிலை ஆகும். இரக(ம்)+ சி+அம், இங்கு சி,அம் என்பன விகுதிகள். இரகசியம் என்ற சொல்லின் இரகசியம் அதுதான். அறிந்து
இன்புறுங்கள்.

யார் மனத்திலும் இல்லாமல் யாருக்கும் புரியாமல் இருப்பது கூட ஒருவகையில் இரகசியம்தான். மனிதனின் அகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஒரு பொருளில் உள்ளுறைந்து கிடக்கலாம். அப்பொருளில் உள் என்பது அதன் அகமாகும். ஏவுகணை பாய்ச்சுதற்கான அறிவியல் ஆற்றலின் விதிகள் உலகம் தோன்றியது முதலே அவ்வப் பொருள்களில் அமைந்து கிடந்தாலும் அவற்றை இப்போதுதான் கண்டுபிடித்துப் பயன்பாடு காண்கிறோம். கண்டுபிடிக்கப்படும்வரை அவை உள்ளுறைவுகளாக இருந்தன.

பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே

பருவதம் :  மலை. பருவதம் எடுத்துப் பந்தென ஆடும் ‍  :   உலகை ஆட்டிப் படைக்கும்;  பத்தி  :  இறைப்பற்று.  சித்தி : தவ வலிமையால் அல்லது இறைப்பற்றாண்மையால் பெற்ற இயல்பு கடந்த ஆற்றல்கள். பரவனுகூல திருட்டி:  எங்கும் எதிலும் நன்மையே காண்பது.

எனவே அன்பு இல்லையெனில் மற்ற பேறுகளால் பயனொன்றும் இல்லை என்கிறது பாடல். அன்பு வேண்டும், அதில் பண்பும் கலந்திருக்க வேண்டும்  என்பதை அழுத்தமாகச் சொல்வது "அன்புறும் பண்பு"  என்னும் சொல்லாட்சி. ‍


0-0.0-0

.

தெரிசனம்


Ref: post entitled "root word "ther" " :   http://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=5864195661364


"(தெர்)" என்ற அடிச்சொல்லைப் பற்றி, முன் இடுகையில் கண்டோம்.

இங்கு தெரி என்ற முதனிலையடியாய்ப் பிறந்த ஒரு சொல்லைச் சற்று பார்ப்போம்.

தெரி >( தெரிசு.)

ஒப்பு நோக்குக:  பரி >  பரிசு.    வினைச்சொல்: பரிதல்

(தெரிசு )+ அன் +  அம் =  தெரிசனம்.

இச்சொல்லில் சு,அன், அம் என்னும் மூன்று விகுதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன.

இது பின் தரிசனம் என்று திரிந்தது.