புதன், 31 டிசம்பர், 2008

2009 வாழ்த்து

ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஒருதலைக் காதல் ஒழிக.

ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க:

"எவரறிவார் யான்கொண்ட அன்புன்மேல் இங்கே
எதையறிவார் என்பற்றி ஏனோ் --- இவையொன்றும்
மானிடர் தானறியார் மாறாதுன் மேல்கொணர்ந்த
வானருட் காதலிறை வா."

என்று ஒரு வெண்பாவாக்கிவிடலாம். ஒருதலைக் காதல் இறைக்காதல் ஆகிறது.

"மானிடர் தானறியார் மாதவனுன் மீதிசைந்த
வானருட் காதலிறை வா."

எனினுமாம்.
ஒருதலைக் காதல் பாடலில் வரவேண்டும் என்றால்:

"மானிடர் தானறியார் மாறாதே ஓர்தலையாய்
யானிடர்க் காதல் படும்."

இலக்கியங்கள் பழித்த ஒருதலைக் காமம் ஒழிக.

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

தகப்பன் > தோப்பன் > தேப்பன் : திரிபுகள்.

மகன் > மோன்.

இந்தத் திரிபில், மக என்பது மோ என்று திரிந்த அமைப்பை ஒட்டி,

தகப்பன் > தோப்பன் என்று திரியும்,. தோப்பன் பின் ஆர் விகுதி பெற்று, தோப்பனார் ஆகும்.

மகன் என்பது மான் என்றும் திரியும்.

அதியமான், பெருமகன் > பெருமான்.

அதியமானில் வரும் மான், ம்+ஆன் என்பதன் கூட்டாகவுமிருக்கலாம்.

அதிய(ன்)+ம்+ஆன்.
மலைய(ன்)+ம்+ஆன்.
தொண்டை+ம்+ஆன்.

ஏ - ஓ திரிபு:

வந்தேம் - வந்தோம்.
விகுதி "ஏம்" - ஓம் என்று திரிந்தது.

ஏம் > ஏமம் (பாதுகாப்பு)

மேடு > மோடு
பெடை - பெட்டை > பொட்டை(க்கோழி)
பெண் > பொண்ணு

எனப் பல பேச்சு வழக்குத் திரிபுகள்.


தகப்பன் > தேப்பன் > தோப்பன் (அ>ஏ>ஓ) மற்றும் எ-ஒ திரிபுகள் காண்க.