தலைப்பில் கண்ட சொற்களை இன்று ஆய்ந்து அறிந்து கொள்வோம்.
அகர வருக்க முதலாயின சொற்கள் சகர வருக்க முதலாய் ஆகித் திரியும் என்பதைச் சொற்களை ஆய்வோன் அறிந்திருக்க வேண்டும். இக்கருத்துக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் காட்டும் உதாரணம் : அமணர்> சமணர் என்ற சொல்தான். அடுத்தடுத்து மண் குழைத்து இறுக்கமாகச் செய்யப்படுவது அடு> சடு> சட்டு> சட்டி என்போம். அடு> சடு> சடு+ இ> சட்டி என்று சுருங்கக் கூறிவிடலாம். பொருள்விளக்கம் தானும் முன்செய்தபடியே செய்தல் கூடும்.
அகம் என்பது உள் என்று பொருள்தருவது. மேற்கூறிய விதியின்படியே, அகம் என்பது சகம் ஆகும். சகோதரர்கள் தமக்குள் ஒத்தவர்கள். ஒருதாய் உடைமையால் பிள்ளைப் பருவத்திலிருந்து வளர்ந்தவர்கள். ஒரு வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றும் விளக்கினும் இழுக்கில்லை. அக > சக என்றாகிறது. சக + ஒ > சகொ > சகோ என்று திரித்தாலும் சகோ என்றாகும். ஒ+இயம் > ஓவியம் என்ற இன் தமிழ்ச் சொல்லையும் கண்டுகொள்க. உண்மைப் பொருளை ஒத்து இருப்பதுதான் ஓவியம். ஓ+ அம் > ஓவம் என்றுமாகும் என்றறிக.
அக+ ஓ .> அகோ> சகோ. தரு + அன் > தரன். தரப்பட்டவன், அதாவது தாயினால் தரப்பட்டவன். பிள்ளைகளைத் தருவதனால்தான், தா> தாய் என்ற சொல்லும் பொருள் சிறக்கிறது.
சகோதரி என்பது பெண்பால் எனல் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இவ்வாறு சுருங்கச் சொல்வதால் அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை உடையது.