திங்கள், 10 மார்ச், 2025

குறைபட்ட இந்தப் புவி வாழ்வு

 இரவொன்று வாராமல் பகலே வந்த

இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,

தரவேண்டும் என்றெண்ணும்  பகலோன் தானும்.

தகவளந்து   தருதற்கோ இயல்வ தில்லை!

பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்

பரந்துவாழும்  மக்களிடை  நிலவும் சூழல்,

குறைவாழ்ந்த திலையென்று  நினைத்திட்  டாலும்

குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.   

\

உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை.  அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும்.  இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம்.  பாவம் இவள்.  இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது. 


பொருள்:

தகவளந்து -  தகுதியை அளந்து அறிந்து 

பரவு ஓங்கும்  -  மிகுந்த பரப்புடைய

குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து 

குறைவு ஆழ்ந்த -  குறைகள் பலவுடைய

இலை என்று - இல்லை என்று

தலைசாய்ந்தார் -  தற்கொலைக்கு ஆட்பட்டார்  ( இடக்கரடக்கல்)

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 



மகமும் மிருகமும்


மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும். இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல், கு - சேர்க்கை, அ - சேய்மை விரிவு, இவற்றைக் குறுக்க, மக என்பது கிட்டுகிறது. கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

மக என்ற  மகவு, மகன்,  மகள், மக்கள்  எனற் றொடக்கத்து  பல சொற்களிலும் மகரமே முன்னிற்க,  ஏன் அம் என்பது முதலில் நிற்கிறது என்று சொல்லுகிறோம் என்றால்,  அம் + அ  என்பது  ம + அ  எனில் மக என்ற சொல்லாகும்.  அம் அ கு என்பது ம அ  கு என்றாகி  மக என்று சொல்கிறோம்!  அமைப்பில் அங்கு சேர்ந்தது என்பது பொருள். இதுவே பிறப்பு ஆகும். இது ஒரு Reverse Formation through which certain words were formed. இதைப் பல ஆண்டுகட்கு முன்னே எழுதியிருக்கிறோம்.  ஆனால் இடைக்குறை முதலியவற்றுக்கு விரிவு கொடுத்ததுபோல் இந்தச் சொல்லமைப்பு முறைக்கு அவ்வளவு விரிவு கொடுக்கவில்லை. காரணம் ஒன்றுமில்லை, இடைக்குறைகள் அதிகம் இருந்தன என்பது தவிர.    தொகுப்பும் இங்கு இடைக்குறையில் அடக்கியே
சொல்லப்படுகிறது. அமக என்று அமைத்து அது சொல்லுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது கண்டு,  அமக என்பதை மக என்று நாளடைவில் வழங்கினர் என்க.  இவ்வாறு செய்வது முதற்குறை என்பதால், இதில் இலக்கணத்தில்கூட இடமிருக்கிறது. நீங்கள் ஒரு கணக்கு எடுங்கள். மூன்று  குறில்கள், உயிராயினும் மெயயாயினும் தொடர்ந்து வரும்படியாக எத்தனை சொற்கள் உள்ளன என்று பாருங்களேன். இரண்டு உயிர், உயிர்மெய் வர அடுத்து ஒற்று வந்த சொற்கள் மிகுதியாக இருக்கவேண்டும்.  யாம் கணக்கெடுக்கவில்லை. ஓர் உய்த்துணர்வாகச் சொல்கிறேன்.

மகன் என்ற சொல்லைப் படைக்கும் முனைப்பு,   அமைவு  குறிக்கும் அம் என்ற தொடக்கத்திலிருந்து தமிழன் அமைத்தான் என்றாலும்,  வீண் நீட்டத்தை விரும்பாமல் ஒரு முறையைக் கையாண்டு சொல்லைக் குறுக்கினான்.  அதனால்  அதனால் சொல்  அமகன் என்று அமையாமல் மகன் என்றே சுருங்கி அமைந்தது.  அமைகன் என்றும் அவன் அமைக்கவில்லை.
 ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஒலிமுறை அமைப்பைப் புரிந்துகொள்ளூங்கள்.

சமஸ்கிருதத்தில் இன்னும் முன்னேற்றமாக,  ம, இர், உ, கு  அம் என்று அமைத்து மகம் என்பதை ம்ரு கம்  >  ம்ருகம் என்று அமைத்துக்கொண்டனர்.

நனகு சிந்த்தித்து  எனக்கு எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 

 
















சனி, 8 மார்ச், 2025

வந்தனமும் வணக்கமும்.

 வந்தனம்,  வணக்கம் என்ற இரண்டு சொல்லையும்  இன்று ஆய்வு செய்வோம்.

வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந்  என்பது.  வணக்கம் என்ற சொல்லின் வண  என்பது  உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது.   இதை  ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால்  வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும்.   ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு.  வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி.  வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய்  அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று  தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான்.    யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை.  அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப்  பதிவுகொண்டு  அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.

வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால்  :

வந்  >  வந்தனம்,

வண் >  வணக்கம் என்னும் போதுதான்.

வந்,  வண்  உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.

எப்படி முடியும். :இணக்கம்

அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும்   அணுக்கம்  என்ற சொல்லில் உள்ள அண்  என்ற  அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம்  வண் என்பதும் வந்  என்பதும்  வளைவு காட்டுபவை.  இரண்டும் ஓரின எழுத்துக்கள்.  ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை.  இவை பெரிய வேறுபாடு  உடையவை அல்ல.

இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல்,  வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான்  அன்றி வேறில்லை.  வண் என்பதும் அது.  இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்)  வந்தனம் ஆகிவிடுகிறது.  எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..

இவ்வாறு  இவை உறவுச்சொற்கள்.  சமஸ்கிருதம் என்பது  தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்,

Copyright for this post is waived.

You may share this through any social media.

[ This post had been attacked and errors had been found.  Now it has been re-edited ]