சனி, 8 பிப்ரவரி, 2025

சாரம் அபச்சாரம்

 இன்று சாரம், அபச்சாரம்  என்பவற்றைத் தெரிந்துகொள்வோம்.  அவற்றுடன் சொல்லாக்கத்தையும் அறிவோம்.

அபச்சாரம் என்ற சொல்லில்  அப என்பதையும் அறிக.   இவ் அப என்பது  அவ என்று அறிக.   அவ> அப என்பது வகர பகரப் போலி. இது எவ்வாறு என்பது பழைய இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது,  ஒருமுறை விளக்கியதை இன்னொரு முறை சொல்லலாம்.  நீங்கள் அப்போது இவ்விடுகையைப் படிக்கவில்லை என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னால் அதை ஒன்றுடன் இரண்டான முறை வாசித்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுமாகையால் இம்முறையில் கூறியது கூறுவதைத் தவிர்த்துவிடுகிறோம். நேரம் இருக்கும்போது பழைய இடுகைகளையும் படித்துக்கொள்ளுங்கள்.

அவ என்பதன் முழுச்சொல் அவம் என்பதுதான்.   அவ் என்பது  மூலம்.  இது கிழித்து வேறாக்கி விடுதல், பிரித்துவிடுதல் என்று பொருள்தரும் மூலம். ஒன்றைப் பலவாறு விளக்கலாம் ஆதலின், நீங்கள் சற்று வேறுபட்டும் விளக்கிக் கொள்ளலாம்.  இறுதியில் பொருளை விளக்கம் செய்து இதே நிலைக்கு வருவீரானால் அதுவும் ஏற்றுக்கொள்ளற்குரியதே ஆகும்.  அவ்+ இழ் என்ற சொல்லும் அவிழ் என்றாகும் பின் அவிழ்தல் வினை.  ஒன்றை அவிழ்க்குப்போது கட்டுகளை வேறாக்கிவிடுகிறோம்.  அதனால் இந்த அவிழ்தல் என்ற சொல்லையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இதற்குமேல் பல சொல்லாமல் அபச்சாரம் என்ற சொல்லைப் பார்த்தால்,  சாரத்தைப் பிரித்துவிடுதல். சாரத்தை இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளைத் பெறுகிறோம். இப்போது அறிதலுக்கு நெருங்கிவிட்டோம். ஆனால் அவ் > அவி என்பதில் நீரில் போட்டு ஒன்றை அடுப்பில் வைத்து வேவிப்பதை அல்லவா உணர்கிறோம்.   ஆம், அதிலும் ஒன்றைப் பிரிப்பது, வேறாக்குவது, வேறு உருவிற் படுத்துவது என்று சொல்லி முன் கூறியவற்றுடன் பொருத்த முடிகிறது. அரிசியை வேவித்துச் சோறாக்கினால் அரிசியை வேறுபடுத்திவிட்டோம் என்பதற்குப் பொருந்துகிறது.  குளிர்நீரைச் சூடாக்கினால் சுடுநீர் வேறுபொருள்தான்.  ஆனால் சுடுநீர் குளிர்ந்து மீண்டும் தண்ணீர் ஆனால் அப்படி ஆவது நீரின் தன்மை. அவி என்ற சொல்லின் பொருளை அது பாதிக்கவில்லை 

அவ். அவ. அவி, அவிழ். அவிர்.  அவ> அப என்பன கண்டோம்.

திரைத்தவிர்தல் என்று ஒரு கூட்டுவினைச் சொல் இருக்கின்றது. ஒரு பொருள் விட்டுவிட்டு ஒளிசெய்தால் அது திரைத்து அவிர்தல் ஆகும்.  ஆகவே திரைத்தவிர் பன்மணி என்று குறித்தது ஒரு ஒளிசெய் மணியைச் சொன்னதுமுண்டு. திரைத்துணி சுருங்குவதும் பின் விரிவதும் உடையது.  அதனால் அதைத் திரை என்றனர். 

திரைந்த தோலுடைய தவளை  போன்ற உயிரி, தேரை எனப்பட்டது, திரை> தெரை என்று திரிந்து பின் முதல் நீண்டு தேரை என்று மாறிவிட்டது. முதலெழுத்து இவ்வாறு நீள்தல் தமிழில் பலகாலும் நிகழ்வதுதான்.

சாரம் என்ற சொல் ஒன்றைச் சார்ந்து இருத்தலையும் இருக்கும் தன்மையையும் குறிக்கும். சார்தல் என்பது சேர்தல் என்பதன் திரிபுதான்.  சார் என்ற வினைசொல் உகரம் பெற்று சாரு என்று வராமல் சாறு என்றே வரும். சொல்லிறுதிக்குச் ரு பொருந்தாது. சார்ந்து எழும் விளக்கங்கள், நெறிகள், உள்ளீடுகள் என எவையும் சாரம் ஆகும். இந்தச் சொல்லும் அதன் திரிபுகளும் மற்ற மொழிகளிலும் வருவதில் வியப்பு ஒன்றுமில்லை. அந்த மொழிகளை இங்கு விரித்தல் வேண்டியதில்லை.

சார்ந்து உள்ளவற்றை நிலைகுலையச் செய்யும் ஒரு செயலைத்தான் அபச்சாரம் என்கிறோம்.  ஒழுக்கமுறை அறநெறிகள் என எதையும் சார்ந்து எழுவன சாரம் ஆகும்.  சாறு என்பது சார்ந்து உள்ளிருக்கும் நீர்ப்பொருளைக் குறிப்பது காணலாம்.

சாறு என்ற சொல்லைச் சோறு என்ற  சொல்லுடன் ஒப்பிடுக.  அரிசி அவிக்கப்பட்டுத் தன் திடநிலையிலிருந்து சோர்ந்து விடுகிற காரணத்தால் - அதாவது மெதுவாகிவிட்ட காரணதால் - சோர் > சோறு என்றானது.  இவை அமைப்பில் ஒன்றான சொற்கள்.  பொருள் வேறு.

ஆகவே சாரம் அபச்சாரம் பொருளும் அமைப்பும் அறிந்தோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  







புதன், 5 பிப்ரவரி, 2025

அரட்டுதல் மிரட்டுதல் அடிச்சொற்கள்: அரசன் முதலியவை.

 அரசன் என்ற சொல்லுக்கு  அரட்டு என்ற சொல்லே அமைதற்கு உதவியுள்ளது என்பதைக் கூறுகிறோம். கீழ்க்கண்ட இடுகையையும் படித்து ஆராயவும்.

https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html 

அரட்டு என்பது மிகுந்த ஒலிசெய்தலுடன் அதிகாரம் செலுத்துதலையும் குறிக்கும். இதிலிருந்து அரட்டன் என்ற சொல் பிறந்தது.  அரட்டன்  என்ற சொல் முன்னாளில் அரசனையும் குறித்தது.  தொடக்கத்தில் அதிகாரம் செலுத்தினவன் அரட்டன் என்ற குறிப்பிடப் பட்டாலும்  அரட்டி உருட்டுவதையே ஒரு செயல்முறையாகக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் முறைப்படி ஆய்ந்து உதவிக் குழுவினருடன் கலந்தாய்ந்து அரசு நடத்தியவனுக்கு  நாளடைவில் வேறு சொல் தேவைப்பட்டது. அதுவும் அர என்ற அடிச்சொல்லையே பயன்படுத்திப் புனையப்பட்டது. அரசு என்ற சொல் நடப்புக்கு வந்தது. இதிலிருந்து அரசன், அரசி என்ற சொற்களும் தோன்றின. இளவரசன் இளவரசி முதலியவையும் உண்டாயின.

அர என்ற அடி  : அரவம் என்பதும் ஒலியே யாகும். வேறு பொருட்களும் உள. அர என்பதன் முன் உரு "அர்".  அங் எனபதும் ஒலி   எழுவதே. அர்ச்சித்தல்  ஒலி யால் நடை பெறுவது ஆகும். அர லி என்பதே அரஹர என்று மாறுகிறது. ஒ லியால் உணரப் படு வோன்  இறைவன். மந்திரங்கள் ஒலியால் அமைந்தவை.

சனி, 1 பிப்ரவரி, 2025

தேசத்துரோகம் சொல்

 தேசத்துரோகம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.

இஃது இணைப்புற்ற சொல் என்பது யாவரும் எளிதில் அறிவதே ஆகும்.

தேசம் என்ற சொல் இப்போது இந்தியாவிலும் பிற இடங்களிலும் அறியப்பட்ட சொல்லாயினும் இது முன்னர் தேயம் என்று இருந்தது.  அதற்கும் முன்பு அது தேம், தேஎம் என்று அளபெழுந்தும் அளபெழாமலும் வழங்கியது.இதன் அடிச்சொல் தேய் அல்லது சிற்றூர் வழக்கில் தே என்பதே ஆகும். இதற்குரிய வினைச்சொல் தேய்தல் என்பதுதான்.  ஏன் இந்த அடியிலிருந்து இது வழங்கவேண்டு  மெனில்,  எந்த நாடும் நாளடைவில் தேய்ந்துவிடக் கூடியது என்பதனால்தான். அரச னொருவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகள் அரசன் இறந்தபின் நாட்டைப் பங்குவைத்துக் கொள்ளுதல் உள்ளது. ஐந்து பிள்ளைகள் ஐந்து பங்காகக் கொண்டனர் எனின் நாடு உடைந்து சிறு துண்டுகளாகிவிடும். இவ்வாறு நடவாவிட்டால் எதிரி நாட்டினர் வந்து தாக்கி நாட்டின் பகுதிகளைத்  தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வர். அப்போதும் நாடு துண்டுகளாகித் தேய்வுறும். இயற்கைப் பேரிடர்களாலும் நாட்டின் பகுதி அழிவுறுவதுண்டு. உள்நாட்டுக் கலகங்களையும் தேய்வுக்குக் காரணமாகக் கொள்ளலாம்.  கலகத்தால் ஒரு பகுதி விடுபட்டு தனியாட்சி அமைதல்.

தே அல்லது தேய் என்ற இரண்டையும் தொடர்புடைய வினைகளாகக் கொள்க.

துரோகம் என்ற சொல்லின் துருவுதல், ஓங்குதல் என்ற இரண்டு வினைகள் தொடர்புபட்டுள்ளன. துரோகம் செய்பவன் எப்படி ஒரு தீவினை செய்வது என்று துருவி ஆராய்ந்து செய்வான்.  இதை துரு என்ற சொல் தருகிறது.  அடுத்து ஓங்குதல் என்ற சொல் ஓங்கு> ஓகு> ஓகு அம் > ஓகம் என்று பெயரைப் பிறப்பிக்கிறது.

இரு முழுச்சொற்களையும் இணைத்து,  தேசத்துரோகம் என்றாகிறது. துரோகம் என்ற சொல் சிற்றூரில் வழக்குடையதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்