வியாழன், 16 ஜனவரி, 2025

பவுதிகம் என்ற சொல் அமை

 இன்று பௌதிகம் என்ற பழைய சொல்லைக் கண்டாய்வோம்.

புவியில் உள்ள பொருள்கள் உண்மையில் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் பரவிக் கிடக்கின்றன.  ஆகாயவெளி எனப்படும் வான்வெளியிலும் உள. இதற்கு விசும்பு என்றும் பெயர். தீயில் எரிந்து அழிந்தும் சாம்பலாகின்றன. இவ்வாறு பரவு பொருள் என்று உணரப்பட்டு,  அதற்கு  பரவுபொருள்    என்றே பெயரிடுதல் எளிதாய் இருக்கும் என்று எண்ணினாலும் எதையும் வெள்ளிடையாகச் சொன்னால் பெயர் மக்கள் மனத்தில் திறமான பெயராய் அமையாது எனக்கருதி,  பரவித் திகைவது  என்ற பொருளில் பரவு+ திகை+ அம் > பரவுதிகையம் என்ற சொல்லமைக்கு வந்து சேர்ந்தனர்.  திகைதல் என்ற இங்கு உரு, உள்ளடைவு, நிறம், மற்றும் தன்மை என்னும்  இன்ன பொருட்களால் ஒரு தோற்றம் அல்லது மேனி உடையதாதல்.  திகை அம் என்பது திகம் என்று மாற்றப்பட்டு,  பரவு என்பது இடைக்குறையாக்கப் பட்டு பவு என்று மாற்றப்பட்டது. இதுவே "பவு+ திகம்" என்று ஆயிற்று.

இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.  ஆர்க்கிமீடிஸ் அடைந்த மகிழ்ச்சியை இவர்களும் அடையலாம்.  யூரிக்க என்று கத்தி ஆரவாரிக்கலாம்,  ஏன் மகிழக்கூடாது,  பவுதிகம் என்ற சொல் எதோ இல்லாமல் வந்த சொல் போல மருட்டும்,

இதை இன்னும் மாற்றம் இழைத்து பௌதிகம் என்று சொல்லிவிட்டால் தமிழில் இல்லாத வேறு சொல் என்று அச்சுறுத்தவும் ஆகும்,

உங்களுக்குத் தெரிந்தவை இது சமஸ்கிருதம்.  அவர்களுக்கும் அமைந்த விதம் தெரியும்.

இடைக்குறை கடைக்குறை முதற்குறை என்பவற்றால்  மருட்டற்கு உள்ளான சொற்கள் பல. கழுமலர்,  அதாவது தண்ணீரால் கழுவப்படும் மலர் என்று ஆகி அது கமல என்று ஆகி கமலம் என்று அம் விகுதி பெற்று ஆட்சியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.

பரவு திகை அம்>  பரவுதிக அம் >     பவு திக அம் > பவுதிகம் : பௌதிகம்,

இயற்பியல் என்ற சொல்லை எப்படி அமைத்தனர்?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


                                                                                               

செவ்வாய், 14 ஜனவரி, 2025

எங்கே செல்லுபடி ஆகவில்லை? மூழ்குதல், அலைகுதல்.

 பண்டைத் தமிழைத் தெளிவாகக் கண்டறிந்து கூறும் ஆராய்ச்சிகள் நம்மிடையே உண்டு என்று கூற முனைவதினும் அஃது இல்லை என்று கூறுவதே உண்மையாகும். எனினும் அதன் தேடல்கள் அவ்வப்போது நம் தமிழரிடையே ஏற்பட்டு ஏற்பட்டு அடங்கிப் போயின. சில எழுதிச்சேர்ப்புகள்  அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கலாம். இதனால் நாமறிவது என்னவென்றால், எதையும் எடுத்துக்காட்ட இயல்வதில்லை என்பதுதான்.

ஓர் இரண்டெழுத்துத் தமிழ்ச்சொல்லை   எடுத்து, அதில் ஏதும் பண்டைத் தமிழ்க் கூறுகள் கிட்டுமா என்று நோக்குவோம்

இன்று  "அலை" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் இன்றுவரை வழக்கில் இருக்கும் சொல்தான். இச்சொல் பழங்காலத்திலும் இருந்த சொல் என்றே இதை நாடுவோம்.  இச்சொல் அலைதல் என்று வினைவடிவத்திலும் இன்று தமிழில் கிட்டுகிறது.  கடல் இன்று ஓயாமல் அலைகிறது என்று சொல்லும்போது  இச்சொல் இன்னும் பொருளுடன் இலங்குசொல் என்பது வேறு சான்றுகள் வேண்டாமலே தெரிகிறது. இச்சொல் மட்டுமேயன்றி,  அலைகுதல்  என்ற சொல்லும் உள்ளது.  அகரவரிசைகள் கோத்தளித்தவர்கள் இதையும் பட்டியற்படுத்தி யிருப்பதால், இச்சொல் இவ்வடிவிலும் உள்ளது என்றே முடிவுசெய்தல் வேண்டும். மூழ் என்ற சொல்  மூழ்கினான் என்றே இறந்தவினை காட்டுவதாய் இன்று இருப்பதால் மூழ்கு(தல்) என்பதே இற்றை வினைவடிவம் ஆகும். ஆனால் மூழ்தல் என்ற சொல்லும் குகரத் துணை இன்றி வருவதால்,  மூழினான் என்று பண்டைத் தமிழில் சொல்லமுடிந்துள்ளது என்பது தெரிகிறது. இன்னும் மூழ்ந்தான் என்று இறந்தகாலம் சொல்வது சரியாகவே கொள்ளப்படும்.  ஆழ்ந்தது என்பது சரி எனின் மூழ்ந்தான் என்பது சரிதான். சொற்கள் போகப்போக துணைச்சொற்கள் பெற்று நீள்வது சிறப்பு ஒன்றுமில்லை.  மொழியானது வீண் ஒலியடுக்குகளில் காலம்கடத்துகிறது என்பதே உண்மை. பேச்சுத்தமிழ் தேவையற்றுச் சொற்களை நீட்டி, மக்கள் மகிழ்வாய் இருந்துள்ளனர். பிறமொழிகளிலும் இவ்வாறு சொற்கள் நீட்சி பெற்று இருத்தல் கூடும். சமஸ்கிருதம் முதல் எல்லா இந்திய மொழிகளிலும் இவ்வாறு நீட்சிகள் ஏற்பட்டிருத்தல் இயல்பு.  ஆனால் மேற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.

அலைகு என்ற வினையாக்கத்தில்  இன்று   அது என்பவை சென்று இணந்தன. இது நிகழ்காலம் காட்டுதல்.  இன்று என்பது  இடைக்குறைந்து இறு என்று ஆகி, அலைகு+ இறு+ ஆன் > அலைகிறான் என்றானது. இவற்றுள் அலை என்பதை மட்டும் அறிந்துகொண்டு,  கிறான் என்பது தனியாக்கி, கிறு+ ஆன் என்று பிரிந்ததால்,  நிகழ்காலம் கண்டுகொண்டனர். சிலர் கு என்பது இல்லாமல் அலை என்பதை மட்டும் வினையாகக் கையாண்டனர்.

ஆனால் மூழ்கு என்ற சொல்லில் குகரம் எட்டிய ஒட்டு உயர்வை,  அலைகு என்பது அலை என்னும் சொல்லில் பெற்று தக்கவைத்துக்கொள்ள இயல்வில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

திங்கள், 13 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்துக்கள்

 நம் நேயர்கள் அனைவருக்கும்  எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் உண்டு மகிழ்வாகச் செய்வன செய்து தவிர்வன தவிர்த்துச்  சிறப்புடன் வாழ்க.

இன்னிசைப் பஃறொடை வெண்பா.


செந்தமிழர் வாழ்வினிலே பொங்கல் புதுநாள்

சிறப்பாம்   இடனுடைய இன்பத் திருநாளே

உந்தி  அனைவருக்கும் ஊக்கம் தருநாள்

உலகுக் குணவூட்டும் உய்வோன் உழவனே.

வந்தனம் செய்வீர் வருந்தனப் புன்னகையே

வாழை  யிலையிலே வண்பொங்கல் சோறுண்டு

மந்தமிலா நன்னிலையால் மாண்பே அடைந்திடுவீர்

மாநில மக்களுடன்  ஆநிரைகள் தாம்வாழ்க

காணுறும் இன்பம் உலகு,


இது பொங்கல் பண்டிகைக்கு யாம் இன்று இயற்றியது.


இடன் -   இடம்.  தலம்.

உய்வோன் - முன்னேற்றம் உடையோன்

காணுறும் -  கண்டு தெளியக் கூடிய

உந்தி -  முன் செலுத்தி

இன்பம்  -  இன்பமுடையது

வந்தனம் -  இது தமிழில் வந்தோம் என்று பொருள் பெறும்.  தனம் என்னும் 

தன் செல்வம் வரும் என்பதும் இடைக்குறையாய்ப் பொருள்தரும்.

இதை விளக்குமுகத்தான் வரும் செல்வம் என்றும் பொருள்.

வண்பொங்கல் -  வளமான பொங்கல் உணவு.

வளத்தினால் சமைத்த (பல பட்சணங்களும் சேர்த்த) பொங்கல். தேன் சர்க்கரை எனப்பல.

ஆநிரைகள்  ஆடுமாடுகள்


இங்கு எதுகைகளை வேறு விதமாக அமைத்திருக்கிறோம்.


வணக்கம் வணக்கம்