வெள்ளி, 11 அக்டோபர், 2024

அரசுரவோர் லீகுவான்யூ திருமகள் மறைவு. துயரப்பாடல்.

 சிதைவிடத்தும்  ஒல்காத சீரியர் குவான்யூ

சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளை,

எதைஎதையோ யாஉயர்வும் பேறாய்க் கொள்க

என்றுபல கனவிடையே தவழ்ந்த பிள்ளை,

பதைபதைத்தோம்  ஈங்குயிரை நீங்கிச் சாய்ந்தே

பாரோர்கண் ணீர்வடிக்கும் தேரா நாளும்

உதயமாகும் சூரியனும் மறைந்து நோக்கும்

ஒருநாளாய்  ஆனதடி  என்னே துன்பம்.


பிரிந்துசென்ற உரவோர்லீ  சொரிந்து கண்ணீர்

பிரிவாற்றா நிலையில்நாம் இங்கே உள்ளோம்;

விரிந்தகல்வி மருத்துவராம் லீவெய் லிங்கின்

வெள்ளியசே வைதன்னைப் புகழ்ந்து சொல்வோம்;

சிறந்தசேவை இனும்பத்து  வருடம் கூடி

இருந்திருந்தால் பொருந்துமது என்றும் எண்ணும்

வருந்துதலும் பலரிடையே  கண்டோம்; நின்றே

அஞ்சலிசெய் கின்றோமே அமைதி கூர்க.


Condolences, RIP.


சிதைவிடத்தும்  ஒல்காத----  துன்பங்கள் வந்தாலும் துவண்டிடாத.

யா உயர்வும் -  எத்தகைய சிறப்பும்.

பேறு -  பாக்கியம்

கனவு - பெற்றோரின் கனவு

உயிர் நீங்கிச் சாய்ந்தே -  இறந்துவிட்ட,  காலமான

தேரா நாள் - பொல்லாத நாள்

சூரியன் மறைதல் -  துயரத்தின் குறிப்பு

உரவோர் -  சிறந்த அரசியல் அறிஞர் எனல் பொருட்டு

அவர் லீ இல்லையாதலால் அதற்குப் பதிலாக மக்கள் கண்ணீர் சொரிந்தனர்.

வெள்ளிய -  தன்னலமற்ற

நின்றே -  எழுந்து நின்று.

இனும் - இன்னும்.  தொகுத்தல் விகாரம்.

யா என்பது:   யாவை,    (எந்தப் பொருள்.)

யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. தொல். சொல். 654

அறிக.





வியாழன், 10 அக்டோபர், 2024

இரத்தன் தாத்தா என்றும் நம்முடன் இருப்பவர். ( இரங்கல்)

 இரங்குக தெருநாய்  அணுகிடில் என்றவர்

உறங்கிடம் தருவாய் எனவே பணித்தவர்

மறந்திட இயல்வதோ இரத்தன் தாத்தனை

இறந்தவர் அவரலர்  இருப்பவர் என்றுமே


பெரும்பணம் உறுநிலை வருதக  வெனினுமே

இரும்பென நெஞ்சுறாத்  தரும்பண் புடையவர்

கரும்பெனக் கனிவுடன் காத்தவர் பிறர்தமை

அருங்குணத் தவரவர் இருப்பவர் என்றுமே.



ஏழையர் எனினுமே  ஏறிநல் லுந்தினில்

ஊழினை வெல்வராய்ச் செல்கென நினைத்தவர்

ஆழுறு  கடல்புரை அகல்மனம் படைத்தவர்

வீழிறப் பிலாதவூழ் வெல்பவர் என்றுமே.


இரத்தன் தாத்தா அவர்களுக்கு இப்பாடல் இரங்கல்.

அவர் என்றும் மக்கள் மனத்தினில் இருப்பவர்.

இறந்தாலும் இறவாப் புகழுடையார்.


தகவு -  தகுதி சான்ற பெரும்பண்பு
கடல்புரை -  கடல்போல்
நெஞ்சுறா -  உள்ளத்தில் ஏறாத
வீழிறப்பு  -  இறந்து வீழ்தல்
ஊழ் - விதி
ஆழுறு -  ஆழமான

புதன், 9 அக்டோபர், 2024

கடம்பர் என்பவர் - சொல்

 கடம்பர் யாரென்று தெரிந்துகொள்வோம்.

கடம்பர் என்போர் சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடியினர். இதைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்துகொள்கிறோம். கடம்ப மரத்தின் பழங்களும் கடினமானவை. ஆனால் பழுத்தபின் உண்ணப்படுபவை ஆகும்.

கடு> கடம் > கடம்பு >  கடம்பர் என்று வந்து இதைக் காவல்மரமாகப் பராமரித்து  வந்த அந்த மக்களைக் குறிக்கும்.

அம். பு, அர் என்பன விகுதிகள்.

இம்மக்கள் தங்கள் வாழ்நாளில் கடினமான செயல்பாடுகளுடன் கடினமான பொருள்களையும் கையாண்டனர் என்பது கடம் என்ற முதற் பகவிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும், கடம் என்பது கடந்து செயல்படும் கடின வாழ்வு என்று பொருள்படுகிறது. கடம் என்னும் சொல் வேங்கடம் என்ற சொல்லிலும் உள்ளது.  வெப்ப மிகுதியும் நடந்து கடப்பதற்கும் கடுமை உடைய இடம் என்றும் அதற்குப் பொருள்.  இன்னும் இதுபோல் பல உள. சங்கடம் என்பது தாம் தாண்டிச் செல்லக் கடினமான நிலை என்று பொருள்படும்..  தங்கடம்> சங்கடம் என, இது திரிபு ஆகும். கடம்ப மரங்களைக் காவல் மரங்களாக வைத்திருந்தமையால் இம்மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள நாடொறும் முயற்சி மேற்கொள்ளவேண்டி யிருந்ததை பு  என்ற விகுதி குறிப்பால் உணர்த்தும். வேறு சில சொற்களில் இவ்விகுதி வெறும் பொருளற்ற விகுதியாகவும் இருத்தலுண்டு, அர் என்பது பலர்பால் விகுதி.\

இம்மக்கள் பழங்காலத்தில் விளக்கவேண்டாத நிலையில் அவர்கள் வாழ்வு எத்தகையது என்று பிறமக்கள் அறிந்திருந்த ஒன்றாக இருந்திருக்கும்.  ஆனால் இற்றை நிலையில் நாம் அவர்களின் வாழ்வைச் சொல்லாய்வின் மூலம் சிறிது அறிந்துகொள்ளலாம். நாளடைவில் இவர்கள் வாழ்வு மாறியிருத்தல் இயல்பே.  இப்பெயரும் புழக்கத்திலிருந்து குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை

பிற்காலத்து, மண்ணை இறுக்கிக் காயவைத்துப் பாத்திரங்கள் செய்வோரும் கடம்பர் எனப்பட்டனர் என்று முடித்தல் உண்மையோடு படுவதாகும்.

கடு அம்பு அர் என்று பிரிப்பின்,   பெரிதும் அம்பு விடுதல் முதலிய வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும்  அறியலாம்.  அவர்களுக்குக் காவல் மரங்கள் பயன்பாட்டிலிருந்து கொடிய விலங்குகளை வீழ்த்திப் பிழைத்தனர் என்பதும் அறிக.

கடம்பு என்பது  ஓர் இருபிறப்பிச் சொல்.( இருவேறு (வேறுபட்ட) சூழல்களுக்கும் சொல்லாக்கத்திற்கும்  ஒப்ப இயலும் சொல் இருபிறப்பி ( அல்லது பல்பிறப்பி.)

இவர்கள் தமிழ் மன்னர்களின் குடிகளாக வாழ்ந்தவர்கள்.

கடம்பு என்பது கதம்பு  என்றும் திரியும். கலவை குறிக்கும் கலம்பு என்பதும் இதிற் கலந்து,  கதம்பம் என்பது கலவையைக் குறிக்கும்.  ( பூக்களின் கலவை)

கதம்பம் என்பது பல்பொருளொரு சொல்.

அம்மன் கடம்பவனப் பிரிய வாசினை எனப்படுவதால் ஆதியில் தேவியை வைத்து வணங்கியவர்கள் கடம்பவனத்தினரான கடம்பர்களே என்பது புலப்படும். தங்களைக் காப்பதற்கு அம்மனும் கடம்ப மரத்திற் தங்கினாள் என்று அவர்கள் பாராட்டினர்,  அது இன்றளவும் பாடப்படுகிறது.

துர்க்கா என்றால் எத்தடைகளையும் கடந்து துருவிச் சென்று - கா என்றால் காக்கும் அன்னை என்பதாம்.   துருவுதல்::  துரு = துர்,  கா - காப்பவள். என்று தமிழிற் பொருள்தரும்.  பிற மொழிகளில் வேறு விதமாகவும் பொருள்வரும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.