வெள்ளி, 7 ஜூன், 2024

வாக்குக் குறைந்ததால் மோடிக்கு என்ன? - வெண்பா

 மோடிப்  பெருமகனார் முன்னணியில் நிற்பவரே

ஆடும் அரசியலில் வாக்கு  வரண்டென்ன?

ஈடில் அகல்வானம் இல்லாப் பெயலாலே

கூடாய்க் குறுகுமோ கூறு.


வாக்கணித்  தேர்தலில் வாழ்வைப் பெறுநர்தாம்

நோக்கறிந்து தொண்டில் சிறந்தாலே ---- போக்குறா

ஏற்புறு உள்ளுறைவாய் ஆவர்  உயர்பணிப்

பாற்படவே தள்ளரிய ராம். 


எண்ணிக்கை இந்நிலையில் கண்டாலும் வீழ்ச்சியே

பண்ணார்மன்  னர்மோடி  பற்றாதே ----அண்ணாகேள்

சங்கு சுடும்போது  சார்பொன்று கார்பெறினும்

வெண்கண்மை பங்கமுறா தாம்.



இவற்றால் தேர்தல் இருக்கை எண்ணிக்கை குறைந்தது விசுவாமித்திரர்

மோடியின்  தூயதொண்டினை எவ்வாற்றானும் பாதிக்காது

என்பது கூறப்பட்டது,


அரும்பொருள்

மோடிப் பெருமகனார்  - இந்தியப் பிரதமர் மோடி

வரண்டென்ன -  குறைந்தால் என்ன

ஆடும் -  பலரும் சூழ்ச்சிகளும் நல்லவைகளும் கலந்து செய்யும் அரசியல் விளையாட்டில் இயங்குவது.

பெயல் - மழை

கூடாய் - பெரிதும் மூடிய சிறிய இடம்.

வாக்கணி - வாக்களிக்கும் அழகிய முறை

வாழ்வு -  வெற்றிபெற்றுச் சம்பளம் பெறும்  சீரான உயிர்பிழைப்பு

பெறுநர் - பெறுகிறவர்கள்

நோக்கறிந்து -  சனநாயக முறைப்படியான திட்டங்கள் அடைய வேண்டிய எல்லைகள் முதலியன தெரிந்து

போக்குறா - தோல்வி அடையாத (  போய்விடாத)

ஏற்புறு - மக்கள் ஏற்றுக்கொள்ளும்

உள்ளுறைவாய் -  அவை உறுப்பினராய்

உயர்பணிப் படவே -  தொடர்ந்து அங்கு சபையில் இருந்து

பாற்படவே - செயல்படுதலுக்கு 

தள்ளரியராம் -  தம் பதவி இழக்கமாட்டார்கள்

இந்நிலையில் - தேர்தலில்

எண்ணிக்கை கண்டாலும் வீழ்ச்சியே -  எண்ணிகை வீழ்ச்சியே கண்டாலும் என்று மாற்றி அறிக.

பண்ணார் மன்னர் - சிறந்த ஆட்சி செய்பவர்.  \

பண்ணார் என்றால் பண் ஆர்ந்த

பற்றாதே  -  அவரை அது பற்றிக்கொள்ளாது  

ஏ - தேற்றம். ( தெளிவு)

சார்பு - சங்கின் பக்கத்தில் உள்ளது  எதாவது ஒன்று

கார் - கரிந்துவிட்டாலும்

வெண் கண்மை - வெளிப்பான தன் நிறத்தின் தன்மையில்

பங்கம் - கெடுதல்

உறாதாம் - ஏற்படாதாம்

அறிக மகிழ்க

பொருள் எழுதியுள்ளோம்.  08062024 1809


வியாழன், 6 ஜூன், 2024

சிந்தனை - சொல்

இந்தச் சொல்லின் தோற்றத்தை இன்று சிந்திப்போம்.

சிந்துவது என்றால் கொஞ்சம் கொட்டிப்போவது.   வீட்டுக்கு வந்த விருந்தினர்க்குக் கொஞ்சம் காப்பி ( குளம்பி)  கொண்டுசெல்கையில் சில துளிகள் தரையில் விழுந்துவிட்டால்,  சிந்திவிட்டது என்று சொல்கிறோம். இச்சொல் சிறுமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று பாடினால் அது சிந்துகவி. அளவாக இல்லாமல் மும்மூன்று சீர்கள் ஒரு வரிக்கு வருமாறு பாடுவது.

ஏறாத மலைதனிலே --- (இ)ரண்டு

எருது நின்னு தத்தளிக்க, 

பாராமல் கைகொடுத்த ----  எங்க(ள்)

பழநி மலை  ஆண்டவனே

இதுவும் சிந்துதான் .  சிந்து என்பது சிறுவகை நூலையும் குறிக்கும்.  சின்+து> சிந்து  . சில்> சின்.  சில்> சிறு.  சில்> சிறு> சிறு+ அமி(ழ்)+ அம் > சிறு அம் அம் > சிரமம்,   அமிழ் என்பதில் உள்ள இழ் என்ற இறுதி நீங்கிற்று.  எதையும் நீக்காவிட்டால் ஒருவேளை சிரமிழம் என்றோ சிற்றமிழ்வம் என்றோ வந்திருக்கலாம்.  அமிழ் உமிழ் என்பவற்றில் இழ் என்பது சொல்லாக்க ( வினையாக்க) விகுதி.  விகுதி தேவையில்லை. இதே விதியமைப்பை முன்னர் வேறு சொற்களைக் கொண்டு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இது ஒன்றைச் செய்வதில் உள்ள சிறு இடையூறுகளைக் குறிக்கும். சிற்றிடர் என்னலாம்.   நூலுக்கு வருவோம், இந்தச் சிறு நூல்கள் சிந்து நதிக்கரையில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுபோய் விற்கப்பட்டன என்று பி டி சீனிவாச ஐயங்கார் கூறி இது தமிழ்ச்சொல் என்றார்.  எம் பழைய இடுகைகளில் காண்க.   சிந்தடி என்பது ஒரு யாப்பியல் குறியீடு.

ஆங்கிலக் கவி டென்னிசனின் கவியை மொழிபெயர்த்து ஓடை என்ற தலைப்பி இங்கு இடுகை செய்துள்ளேம்.  சிந்துகவி தான்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

இது ஓடை என்ற தலைப்பில் வெளியிட்டோம். நீங்கள் ஒரு சிந்து எழுதி ஓடை என்னும் கவிதைக்குப் பின்னூட்டம் செய்யுங்கள்.  அதை இடுகையாகப் பின் வெளியிடுவோம். நம் நேயர்களுடன் பக்ர்ந்துகொள்ளவும். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்





தவறுதல் இடைக்குறை: தவல்

தமிழைப் படிக்கமாட்டேன் என்று விலகிச் செல்லும் மாணவர்கள் இன்று நிறைய உள்ளனர். சாதம், சோறு என்ற சொற்களைக் கூட விலக்கிவிட்டு,  Rice போடு, அல்லது serve rice என்றுசொல்லி முடிப்போர் பலர்.  தமிழைப் போதிக்கும் முறைகளில் சில இக்கால மாணவர்களுக்குப் பொருந்திவராமல் போனதனாலே இவ்வாறு நேர்ந்துள்ளது. இலக்கணம் உரைப்பதைவிட எப்படிச் சொன்னால் புரியும் என்று சிந்தனை செய்து சொற்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் காட்டினால் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகலாம். அவ்வப்போது இத்தகையை முறைகளை எழுதுவதில் கடைப்பிடித்திருக்கிறோம்.

இந்த முறையைப் பயன்படுத்தி, தவல் என்ற சொல்லை விளக்குவோம்.

தவறு(~தல்)  இதில்   று என்பதை எடுத்துவிட்டால் தவ என்பதே மிச்சம். இதில் தவ என்பதைப் பாவித்துக்கொள்வோம். தவ+ அல் >  தவல்,  இரண்டு அகரங்களில் ஒன்று கெட்டது. தவயல் என்றோ தவவல் என்றோ வருவதில்லை. தவல் என்பதன் பொருளென்ன என்றால் தவறுதல் என்பதுதான்.

தவல்அருஞ்  (செய்வினை)  - தவறிவிடாத செயல்.

தவல் அருந்  ( தொல்கேள்வி)  -  கெடுதல் இல்லாத பழைய கேள்வி யறிவு ( கேள்விஞானம்.)

தவல்  -  (தவறுதல் )  மரணம்

தவல் -  வறுமையால் வருத்தம்.  ( பொருளின்மையால் கெட்டுப்போவது). செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் கெட்டுப்போவது என்க

தவல் -   ( வினைச்சொல்)  நீங்குதல்.  [ தவலுதல் ]

இவை எல்லாம் தவறுதல் என்ற சொல்லால் பொருள் சொல்லக்கூடியவைதாம்.

சுட்டடிச் சொற்கள் வளர்ந்த பண்டைக் காலத்தில் ஒருவன் அங்கு போய்க் கெட்டான் என்பதற்கு   த அ ( தா  ஆ)  என்று ஓரசைகளைக் கொண்டு பேசியிருப்பர் என்று தெளியலாம். பண்டை ஓரசைச் சொல்லாக்கத்தில் த அ அல் து எனக் கலந்து தவறு என்ற சொல் உருவாகியுள்ளது தெரிகிறது.  இது புரியவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். அல் இடைநிலை. து வினையாக்க விகுதி.

தபுதல் என்ற சொல்லை இங்கு விரிக்கவில்லை. தப்புதல் என்பதும் தொடர்புடைய சொல். இதை விளக்கவில்லை.

கவிதையில் இடைக்குறை, தொகுத்தல் எல்லாம் உண்டு. இங்கு சொல்வது சொல்லாக்க இடைக்குறை. அதாவது இடைக்குறை முறையால் இன்னொரு சொல் உண்டாகுதல் அல்லது அறியப்படுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.