திங்கள், 15 ஜனவரி, 2024

பொங்கல் வாழ்த்து

1.

தங்கள் குடும்பத்தில் தாய்பிள்ளை தங்களுடன் 

பொங்கும் வளம்பெறுக இன்று.

2.

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப்

பெண்கள்பிள்-   ளைகள் உடன்.

3.

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;

கனிக்கோநல்  வாழைப்  பழம்.

4.  

வெல்லா  தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச்

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

5

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்


6

இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்


7

பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கல் வாழ்த்து: பொருளுரை.

 1 

தங்கள் குடும்பத்தில்  -  உங்களுடைய குடும்பத்தில்   ,   தாய்பிள்ளை - உள்ளவர் கள்,  தங்களுடன்-  உங்களுடன் , பொங்கும் வளம்பெறுக இன்று - இந்நாளில் நிரம்பி வழியும் வளத்தை அடைவார்களாக. 

2. 

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப் 

பெண்கள்பிள்-ளைகள் உடன்

இந்த நல்ல  பொங்கலை பெண்கள் பிள்ளகளோடு உள்ள

மகிழ்வுடன் நீர் உண்பீராக.

3  

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;  

_அது இனிக்கும் என்றாலும் உணணுங்கள்,  

கனிக்கோநல்  வாழைப் பழம்-  கனி விழைந்தால், நல்ல வாழைப்பழம் உள்ளது,  உணணுவீராக.

வெல்லா தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச் 

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

நல்ல வாழ்த்துதலைப்  பெற்று விட்டீராயின்,  இனிப்பு நீர் நோயும் அதற்கு அடங்கிவிடும்.

5.

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்

 "
பொங்கலை ஒருவராக உண்டிடுதல் கூடாது.  

பொங்கலைத் தானாக உண்ணாமல் இருப்போருடன் பகிர்ந்துண்க. காரணம் பின்னாளில் அது இன்பம் தரும் சூழ்நிலைகள் உருவாகும்.

இங்கு "இன்பொங்கலே பகிர், மேனாளில் இன்பம்" என்று இயைத்துக் கொள்க.


இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்

 இன்று விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டுக்குக் காத்திருக்க வேண்டுமாதலால்
இன்றே பொங்கலை உண்டுவிடுதல் நலம்.




பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கலன்று வாழ்த்துகளை நல்லபடி பெறுவீரானால். உலகத்தாராகிய நீங்கள் பொன்னான உள்ளத்துடன் வாழ்வீர்கள்.

என்றபடி.

உண்+தல் > உண்டல் : உண்ணுதல்

தங்கம்+ உள்ளம் --- தங்க உள்ளம் : பொன்னால் ஆன உள்ளம்.

அன்பர் தங்குதலுக்குரிய உள்ளம் என்றாலும் ஏற்க.

[இந்த இடுகையில் குழப்பம் விளைந்தது. இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.]

வருந்துகிறோம்.


மெய்ப்பு பின்னர்.








சனி, 13 ஜனவரி, 2024

அச்சாரம் - சொல்.

 உங்களுடன் வணிகத் தொடர்பும்* வரத்தக உறவும்** வைத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், தொடக்க அணுகுதலுக்குப் பின் வேண்டாமென்று நகர்ந்து விடலாம்; அல்லது ஒரு சிறு தொகையைச் செலுத்தி அவ்வணிகத்தைத் தொடரலாம். ஓர் ஒப்பந்தம் தொடங்கி விட்டதா என்பது சட்ட ஆய்வுக்கு உட்பட்டது.

*தொடர்பு என்பதை ஒருமுறையே நிகழும் ஒன்றுகூடலையும் **உறவு என்பதை பல உடன்படிக்கைகளில் ஈடுபடும் நெடிய  செயல்தொகுப்புகளையும் சுட்டுமாறு இங்கு எழுதியுள்ளோம்.

மேற்கூறிய இந்தச்   சிறு தொகையை நம் தமிழில் அச்சாரம் என்போம்.

அடுத்துச் சேர்வது அல்லது சார்வது என்பதுதான் அச்சாரம். சேர்><சார். இச்சொற்கள் ஒரு பொருளன.

அடுச்சாரம் என்பதில் டுகரம் வீழந்தது.  வல்லின எழுத்து களைவுண்டது. இதற்கான காட்டுக்கள் முன் இடுகைகளில் காண்க.

நம் முன்னோர் ஒப்பந்தச் சட்ட நுணுக்கங்களை அறிந்திருந்தனர் என்பதையே இது காட்டுகிறது.

அச்சாரம் என்பது உடன்பாடு நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்று  (evidence) ஆகும்.  உடன்பாடு என்பது இரு சாராரிடமும் ஏற்பட்டுள்ள சட்டவியல் உறவுமுறையை உணர்த்தும் ஓர் மனவொருமையைக் குறிக்கும். கொடுக்கப்படும் அச்சாரம் இதைக் காட்டும்.  அச்சாரம் என்பதை அடுத்துத் தொடர்தல் என்று பொருள்விரித்தல் ஏற்புடைத்தாகும். இதனால் அடு+ சாரம் என்பது பொருட்பொதிவுள்ள சொல்லாகிறது.  அடு என்பது முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.  அதாவது விகுதி ஏலாமல் பெயராவது. சார்+அம் என்பது சார்தல் என்று பொருள்தரும் அம் விகுதித் தொழிற்பெயர்.  டுகர மறைவு இடைக்குறை ஆகும். தமிழர் என்போர் இறப்பிலும் பாடித் தன் இரங்கலை உணர்த்தும் பண்பாட்டினர்.  இன்று நாணம் காரணமாக யாரும் ஒப்பாரி வைப்பதில்லை. சொற்களை நீட்டுதலும் குறுக்குதலும் பாவலர்க்குத் தொல்காப்பியமுனிவர் வழங்கிய உரிமம் ஆகும்.  இஃது அவர்கள் அமைத்த சொற்களிலும் காணக்கிடக்கின்றதென்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குறிப்பு:

அச்சாரம்  ( இன்னொரு முடிபு)  https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_3224.html பார்க்க.  ( also  அச்சகாரம்).

(ஆக, இது  ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கப்படலாம்).




வெள்ளி, 12 ஜனவரி, 2024

சீத்தா என்னும் புலிவகை -- சொல்

 இந்த வகைப்  புலிகட்குத் தமிழில் சிறுத்தை என்று பெயர்.

சிறு -  சிறிய வகை.

சிறு + தை (விகுதி)  -   சிறுத்தை.

இச்சொல்லில்,  று என்பது வல்லின எழுத்து.  பெரும்பாலும் தமிழ் மூலச்சொற்கள் வேறு மொழிக்குப் போனால், வல்லின எழுத்து மறையும்.  கட்டுமரம் > கட்டமாரான் என்பது போலும் சொற்கள் இதற்கு விதிவிலக்கு.  வல்லின எழுத்து மறையவில்லை.

சிறுத்தை >  சி (று) [ த் ]  ஐ

சிறுத்தை >  சி (றுத்) தை

சி > சீ.  நெடிலாகிவிட்டது.

தை >  தா.  

ஐகாரத்தில் முடியும் எழுத்துக்களை அயலார்  ஆ என்று நீட்டி முடிப்பர்.  எடுத்துக்காட்டு:

சின்னையா >  சீ-நா-யா

சிறுத்தை என்பது சீ(த்)தா என்ற புலிப்பெயருக்கு மூலம்.

றுகரம் மறைந்த இன்னொரு பழஞ்சொல்:

சிறுசு  >  சிசு.  ( குழந்தை ).  இங்கு று என்ற வல்லின எழுத்து மறைந்தது.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.