திங்கள், 18 டிசம்பர், 2023

இலக்குவன்

 இன்று இலக்குவன் என்ற பெயரைத் தெரி ந்து  கொள்வோம் 

இது இலட்சுமணன் என்றும் எழுதப் படுவதாகும்.

இதிலுள்ள தமிழ் மூலங்கள்: இல், அ, கு, அன் என்பன.

"இடத்திலே அங்கு  சேர்ந்து அல்லது கூடி இருந்தவன்.". என்பது இம் மூலங்களின் பொருள்.

இல்   - இடம்,   நெஞ்சில் (இல்) என்பதுபோல். வீட்டில் என்றுமாம்.

அ - அங்கு.

கு - சேரந்து

அன் இருந்தவன்.

இலக்கு என்ற தனிச்சொல்லுக்கும் இடம் என்பதே பொருள்.

வகர உடம்படு மெய். 

வனவாசத்தில் கூடி இருந்தவன் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 





ஞாயிறு, 17 டிசம்பர், 2023

இராமர் வெளிநாட்டுக் கடவுள் அல்லர்.

 பல ஆண்டுகட்கு முன்பே இராமர் ஆரியர் அல்லர் என்பதை எழுதியிருக்கிறோம்.அதற்கான ஆதாரத்தை எங்கும் தேடி அலையவேண்டாம்.  சொல்லிலே அதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டால் அப்புறம் அலையவேண்டியதில்லை.  ஆரியர் என்று யாரும் வெளியார் இல்லை.  ஆர் விகுதிச் சிறப்புடைய தமிழ்ச் சங்கப் புலவர்களே  ஆரியர்.  வாத்தியம் வாசித்தவர்களுக்கும் இப்பெயர் உண்டு.

[ வாழ்த்து இயம் >  வாழ்த்தியம் > வாத்தியம்,  இடைக்குறைச் சொல்]

இர் என்பது அடிச்சொல்.

இர்:  இருள். இரவு, இரா.

இர்+ உள்:  இருள்.  உள் என்பது ஒரு விகுதி.  கட+ உள் > கடவுள் என்று ஆகும்.  கடந்து நிற்பதாகிய பேரான்மா என்று பொருள். இன்னும் உள் விகுதி பெற்ற சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டு:  செய்+ உள் > செய்யுள்.  உயிருடன் ஆகி வாழும் நாள் ஆயுள்.  ஆ+ உள் > ஆ(ய்) + உள் >  ஆயுள்.  இஃது ஆயுசு என்றும் திரியும்.  மூலச்சொல்:  ஆயுள் என்பது தான்.

இருளின் நிறம் கருப்பு.  இரா என்பது ஆ விகுதி பெற்ற சொல். நிலா, பலா என்பன போல.  நிலா என்பது இறுதி ஆ விகுதி.  பல் > பலா:  பல சுளைகள் உள்ள பழம். விகுதி இதுவுமது.

இர்+ ஆம்+ அர் > இராமர்.   இருளாம் நிறமுடைய அவர் என்று பொருள்.

இராமரும் நீலம்.

இப்போது வெள்ளை நிறம் கொடுத்தால் அது சேர்த்தி இல்லை.  அவருடைய நிறம் நீலம் அல்லது கருப்பு.

தென்னாட்டில் இராமர் தென் கோடி வரை பயணம் செய்துள்ளார்.  அறந்தாங்கி  ( அரண் தாங்கி)   வழி  சென்றதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன என்று அறிகிறோம். எம்மிடம் இப்போது இதற்கான குறிப்புகள் இல்லை.

அயோத்தி என்பதும்  அய(ல்) + ஒத்தி .  முன்னாளில் தென் திசையில் ( அயலில்) இருந்த தம் நகரை ஒப்ப எழுப்பப்பட்ட இன்னொரு நகரம்.  அய ஒத்தி> அயோத்தி.  இது காரணப்பெயர்.

அ= அங்கு.  வேறிடத்தில்.

அ அ > அய  , யகர உடம்படுமெய்.  அங்கு அங்கு என்று பொருள்.

அல் என்பதன் இறுதி எழுத்து மறைந்த கடைக்குறையுமாகும்.

அ அல் . > அயல்.  ( அங்கு அல்லாதது என்றும் பொருள்.)  வேறிடத்தது என்பதாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

மங்கை என்ற சொல்.

 2020ம் ஆண்டில் எழுதிய எம் சொந்தக் கவிதையில் இப்படி எழுதினோம், ( உண்மையில் எழுதினேம் என்று எழுதுவதுதான் இன்னும் சரியானது).  அந்தக் கவிதையின் பகுதி வருமாறு:

சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே
சீருடன் வாழ்கவென்று பாடி யாடுவோம்
கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி யாடுவோம்.

இந்தக் கவிதை இங்கு இன்னும் இருந்தாலும்,  அதை நீங்கள் மறந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் பலவற்றையும் மறந்துவிடுவதால்தான் நம் வாழ்க்கையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாலையில் வண்டி ஓட்டுகின்ற பொழுது,  முன் கண்ட வண்டிகளை மட்டுமே நினைத்துகொண்டிருந்தால் இப்போது எதிரில் வரும் வண்டியுடன் மோதுவதும் விபத்துக்குள்ளாகுவதும் நேரும். நீங்கள் மறந்துவிட்டதும் சரிதான். இப்போது நினைவுக்குக் கொண்டுவருக.

இப்பாட்டில் மங்கை என்ற சொல்லால் சிங்கையைக் குறித்துள்ளோம்.

சிங்கை ஓர் இளம் நாடு ஆகையால் எதையும் எளிதில் செய்ய அரசால் முடிகிறது என்று சொல்லலாமோ?   தெரியவில்லை.  இருக்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை வயதிற் குறைந்த பெண்களைத் தாம் தமிழர்கள் பண்டை நாட்களில் மணந்துகொண்டனர்.  அதற்கு முன் குழந்தைகளைத் திருமணம் செய்துகொள்ளும் முறையும் இருந்திருக்கிறது.

பத்துப் பன்னிரண்டு அகவையில் பெண்மக்கள் எளிதில் மடங்கிச் சொல்கிறபடி கேட்டு நடப்பர்.  அதனால் ஆடவர்கள் பெரிதும் இவ்வயதுப் பெண்களையே மணந்துகொண்டனர் என்று தெரிகிறது.

இதற்குரிய வினைச்சொல் மடங்கு என்பதுதான்.

மடம் என்ற சொல்லும் ஒருவகையில் இதையே குறிக்கும்.

இதை மிக விரித்து எழுதாமல் சுருக்கி வரைவோம்.  ஐயப்பாடு உண்டாயின் கருத்துரை மூலம் கேட்டறியுங்கள்.

வினைச்சொல்: மடங்குதல்.   மடுத்தல் என்பதுமாம்.

மடங்கை  ( இதைத் தங்கை என்ற சொல்லுடன் ஒப்பிடுக)

இச்சொல் வழக்கற்று ஒழிந்தது.  இஃது மீட்டுருவாக்கம்.

மடங்கை என்பது இடைக்குறைந்து  மங்கை ஆகும்.

டகர முதலிய வல்லெழுத்துக்கள் குறைதல் முன் பலமுறை கூறியுள்ளோம்.

ஓர் எடுத்துக்காட்டு:  கடக்கும் பலகை மிதப்பு ( பழங்காலத்தில்)  
கடப்பு> கடப்பல்> கப்பல்.  டகரம் கெட்டது.  இதுபோலவே:

மடங்கை >  மங்கை.

மடந்தை என்பது இன்னொரு திரிபு  அல்லது இணையான சொல்.

அதாவது, மங்கை என்பதன் அடிச்சொல் மங்கு(தல்) என்பதன்று. மடங்கு(தல்) என்பதே. மடு(த்தல்) தொடர்புடையது..*

அறிக மகிழ்க.

மெய்ப்பு:: பின்னர்.

மெய்ப்பு 16122023 1805

மெய்ப்பு 18122023 0942