வெள்ளி, 15 டிசம்பர், 2023

மங்கை என்ற சொல்.

 2020ம் ஆண்டில் எழுதிய எம் சொந்தக் கவிதையில் இப்படி எழுதினோம், ( உண்மையில் எழுதினேம் என்று எழுதுவதுதான் இன்னும் சரியானது).  அந்தக் கவிதையின் பகுதி வருமாறு:

சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே
சீருடன் வாழ்கவென்று பாடி யாடுவோம்
கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி யாடுவோம்.

இந்தக் கவிதை இங்கு இன்னும் இருந்தாலும்,  அதை நீங்கள் மறந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் பலவற்றையும் மறந்துவிடுவதால்தான் நம் வாழ்க்கையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாலையில் வண்டி ஓட்டுகின்ற பொழுது,  முன் கண்ட வண்டிகளை மட்டுமே நினைத்துகொண்டிருந்தால் இப்போது எதிரில் வரும் வண்டியுடன் மோதுவதும் விபத்துக்குள்ளாகுவதும் நேரும். நீங்கள் மறந்துவிட்டதும் சரிதான். இப்போது நினைவுக்குக் கொண்டுவருக.

இப்பாட்டில் மங்கை என்ற சொல்லால் சிங்கையைக் குறித்துள்ளோம்.

சிங்கை ஓர் இளம் நாடு ஆகையால் எதையும் எளிதில் செய்ய அரசால் முடிகிறது என்று சொல்லலாமோ?   தெரியவில்லை.  இருக்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை வயதிற் குறைந்த பெண்களைத் தாம் தமிழர்கள் பண்டை நாட்களில் மணந்துகொண்டனர்.  அதற்கு முன் குழந்தைகளைத் திருமணம் செய்துகொள்ளும் முறையும் இருந்திருக்கிறது.

பத்துப் பன்னிரண்டு அகவையில் பெண்மக்கள் எளிதில் மடங்கிச் சொல்கிறபடி கேட்டு நடப்பர்.  அதனால் ஆடவர்கள் பெரிதும் இவ்வயதுப் பெண்களையே மணந்துகொண்டனர் என்று தெரிகிறது.

இதற்குரிய வினைச்சொல் மடங்கு என்பதுதான்.

மடம் என்ற சொல்லும் ஒருவகையில் இதையே குறிக்கும்.

இதை மிக விரித்து எழுதாமல் சுருக்கி வரைவோம்.  ஐயப்பாடு உண்டாயின் கருத்துரை மூலம் கேட்டறியுங்கள்.

வினைச்சொல்: மடங்குதல்.   மடுத்தல் என்பதுமாம்.

மடங்கை  ( இதைத் தங்கை என்ற சொல்லுடன் ஒப்பிடுக)

இச்சொல் வழக்கற்று ஒழிந்தது.  இஃது மீட்டுருவாக்கம்.

மடங்கை என்பது இடைக்குறைந்து  மங்கை ஆகும்.

டகர முதலிய வல்லெழுத்துக்கள் குறைதல் முன் பலமுறை கூறியுள்ளோம்.

ஓர் எடுத்துக்காட்டு:  கடக்கும் பலகை மிதப்பு ( பழங்காலத்தில்)  
கடப்பு> கடப்பல்> கப்பல்.  டகரம் கெட்டது.  இதுபோலவே:

மடங்கை >  மங்கை.

மடந்தை என்பது இன்னொரு திரிபு  அல்லது இணையான சொல்.

அதாவது, மங்கை என்பதன் அடிச்சொல் மங்கு(தல்) என்பதன்று. மடங்கு(தல்) என்பதே. மடு(த்தல்) தொடர்புடையது..*

அறிக மகிழ்க.

மெய்ப்பு:: பின்னர்.

மெய்ப்பு 16122023 1805

மெய்ப்பு 18122023 0942

வியாழன், 14 டிசம்பர், 2023

சிதைவு, சிதிலம் - சொற்கள்.

 ஒரு கல்லை எடுத்துக்கொண்டால் அது சிதைவு அடைவது தேய்வதன் மூலமாகவோ உடைதல் முதலிய காரணங்களாலோ இருக்கலாம். எப்படியானாலும் கல் சிறிதாகிவிடும் அல்லது சிறிய துண்டுகளாகிவிடவும் கூடும்.

சிதை என்ற சொல் சிது+ஐ என்று பிரிய,  சிது என்பதே அடிச்சொல். ஐ என்பது விகுதி.  விகுதி என்ற சொல் மிகுதி> விகுதி என்று திரிந்தது. மி - வி திரிபுகள் பல. முன் இடுகைகளில் அறிக.

சிது என்பதன் மூலத்தோற்றத்தை சிறிது என்பதன் குறையிலிருந்து அறியலாம். சிறிது என்பதில் றி குறைந்தால் மீதமிருப்பது சிது தான். சிது என்பதன் மூலம் சில் என்பதுதான்,  இப்போது அதுவரை செல்லவேண்டியதில்லை.

ஒரு மரம் ( கட்டை )தேய்ந்து விடுமானால் சிறியதாகும். எவ்வளவு சிறியதாகும் என்பது அதன் தேய்மானத்தைப் பொறுத்ததாகும். எப்பொருளுக்கும் இது பொருந்துவதாகும்.

சிறுசு என்பதே சிசு என்று இடைக்குறைந்தது.   று மறைவு.

இனிச் சிதிலம் என்ற சொல்:  சிது + இல் + அம் >  சிதிலம் ஆகும்.  இல் என்பது இடம் என்று பொருள்படும்.  மூக்கில் என்றால் மூக்கிடம் என்று பொருள் என்பதைக் காண்க.   கல் சிதிலம் அடைந்துவிட்டதென்றால் தேய்ந்து அல்லது உடைந்து சிறிதாகிவிட்டது அல்லது உருக்குலைந்து விட்டதென்று பொருள்.

இங்கு கூறப்பட்ட சொற்களில் உள்ளீடுகள் யாவும் தமிழென்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்


புதன், 13 டிசம்பர், 2023

சேட்டைகள் செய்வோர்.

கண்டதே காட்சி கொண்டதே கோலமென்று

கண்டதும் செய்வோர் பற்பலர் ஞாலமேல்.

உண்டபின் வேலை ஒன்றுமில் லாததால்

ஒன்றும் பயனிலாச் செய்கைகள் செய்தார் .

மண்டைப் பைத்தியம் மண்டிய காரணி

மன்றினில் ஏறினர் நன்மதி வற்றவும்

காவலர்  கவன்றிட  மேவியே 

தாவியங்  கோடினர் தகுதியில் செயலே.


இது இன்றைக்குச் சிலர் செய்யும் சேட்டைகளைக் குறிக்கிறது.

காரணி =  காரணம்.  மன்று =  சபை.  வற்றவும் - குறைவுறவும்.

மேவி - மேற்கொண்டு   கவன்றிட -  கவலையுற

தாவியங்கு    -  தாவி  அங்கு,  மண்டிய -  கூடின

அறிக மகிழ்க

மெய்ப்பு  - பின்னர்