ஞாயிறு, 10 டிசம்பர், 2023

Leah and the spectacle in her mouth

 




வாய்திறந் தாளே வண்ண  இலியா
வான மண்டலம் உள்ளே இழைந்தது!
வாய்திற மீண்டும் என்று சொல்லவே
வண்டமிழ் நாவும் இன்றும் விழைந்தது.

Notes:
இலியா - பிள்ளையின் பெயர்.
நாவும் என்றதனால் மனமும் என்பது பெறப்படும்.
இழைந்தது -  சென்று நகர்வு கொண்டது.
வண்டமிழ் நாவு -  தமிழில் பேசுதல் குறித்தது.


Leah slowly opened her mouth,
And appeared in there, a galaxy;
"Once more" said we in language of the South.
Whilst she winked as star of the sea.



வியாழன், 7 டிசம்பர், 2023

[அ]வித்தை - சொல்லும் தொடர்பினவும்.

சொல்லமைப்பு :  வித்தை அவித்தை.

வித்தைக்கு  எதிர்ச்சொல்  அவித்தை என்பது நீங்கள் அறிந்தது.  வித்தை என்பது கல்வி ஆயின்,  அவித்தை என்பது கல்லாமை,  படிப்பறிவு இன்மை என்று பொருடரும்.  இடனுக்கேற்ப,   ஆன்மிக அறிவின்மையும் இதன் பொருளாகலாம்.  அதாவது, இறையியலிலும்  ( theology  ) இச்சொல்லே பயின்றுள்ளது.

அல் என்பது அல்லாதது.  அல் என்பது அ என்று குறைந்தும் குறையாதும்  அன்மைப் பொருளில் வரும்.  அல் >  அ >  அ+ வித்தை >  அவித்தை ஆகும். அன் என்றும் வருதல் உளது.  எ-டு:  அன்மொழி (த் தொகை).  அன்முறை என்பதில் னகர ஒற்று புண:ர்ச்சித் திரிபு.

அவித்தை என்பது  அவிச்சை ( த - ச திரிபு),  அவிஞ்ஞை,  அவித்தியை என்று   சில வகைகளில் திரிதல் உள்ளது. இவற்றுள் மூல எதிர்மறை வடிவம் அவித்தை என்பதே.  ஐந்து வகை மாயைகளில் அவித்தையும் ஒன்று.  

இறையியல் பொருண்மை  அடைவு:

மற்றவை தமம், மோகம், அநிருதம் என்ப. தமம் என்பது தன் "அம்" விகுதியை இழந்து  சு விகுதி பெற்று. தமசு என்று மாகும். தமம், தமசு ஒரு பொருளன; இருள் என்பதே அது.  சு  :  இது தமிழ் விகுதி:  எ-டு: பரி(தல்) > பரிசு.   மனிதனின் சொந்த மனத்து இருளால் பிறழ உணர்தல். ஒன்று வேறொன்றாய்த் தெரிவது. தம்மிலிருந்தே தோன்றுவதால் தமம் ஆகிறது. அநிருதம் என்பது அல்+ நில்+ உரு+ து + அம் = அ( ல்) + நி ( ல் ) + ( உ) ரு + து அம் > அனிருதம் அல்லது அநிருதம். என்றால்: நில்லாதது, இல்லாதது, பொய்யானது. உருநிலை அற்ற ஒன்று.  அ என்ற முன்னொட்டு அன் என்றும் வரும்.  அன் என்பதைப் பயன்படுத்தினால் பிற ஏற்றபடி மாற்றிக்கொள்க.  இறையியலுக்கான சொற்களைப் படைக்கும்போது,  சொல்லாக்கத்தில் திரிபுகளை உய்த்துக்கொளல் தேவையே ஆகும்.  இவையெல்லாம் இவ்விறைக்கொள்கையில்  இவர்கள் தாமே கண்டு புனைந்தவை ஆதலின்,  சொற்களைத் திரித்தே அமைத்தல் இயலும்.

வித்தை, சொல்லும் முடிவும்:

இனி வித்தை என்ற சொல்லை அறிவோம்.

 அவித்தை என்பது 'வித்தை இன்மை' என்பதால் வித்தை என்பது எப்படி அமைந்தது என்பதையும் அறிதல் வேண்டும். 

இங்கு இது விளக்கப்பட்டுள்ளது.  விரிவு வேண்டின் கருத்து இடுக. 

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

உசிதம் சொல் தரவு

 இச்சொல்லை ஆய்ந்து இன்று வருவழி கண்டறிவோம்,

உய்தல் என்ற சொல் ஓரளவு பயன்பாடு கண்டுள்ள சொற்களில் ஒன்று. இந்த வினையிலிருந்து உசிதம் என்பதை அடைவுசெய்வோம். உய்தல் என்பதன் பொருளாவன: 1. உயிர்வாழ இயலுதல் 2 காப்பாற்றப் படுதல்  3  இடரின் அல்லது துன்பத்தின் நீங்குதல்  என்பது நாம் இயல்பாய் அறிபொருளாம்.  உசிதம் என்பது உய்தல் சொல்லடி வரவினது ஆயின்,  இடர் அல்லது துன்பமின்றி முடித்தல் (3) என்பது மிகப் பொருந்திய சொல்லாக்கப் பொருளாகும்.

இதன் அமைப்பு இவ்வாறு:

உய் + (இ )+ து + அம் எனின் உயிதம் என்றாகும் (அல்லது உய்தம்.)

இ = இங்கு

து =  உடையது  ( உரிய)

அம் -  அமைப்பு.

இதை வாக்கியப்படுத்தினால்:  இந்தச் ( சூழ்நிலையில் )  துன்பம் நீங்கிவிட உரிய அமைப்பு  என்று பொருள் கிட்டுகிறது.

உயிதம் என்ற மூலவடிவு இல்லாதொழிந்தது.  தமிழன் தன் நூல்களனைத்தையும் பாதுகாத்து வைத்திருக்க இயன்றவனாகில்  இருந்திருக்கும். ஆனால் சிறிது காலத்தின் முன் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானதாகச் செய்தித்தாள்களில் வந்ததே!  என்னென்ன சொற்கள் அழிந்தன என்று  இப்போது சொல்லமுடியுமோ? இவ்வாறு தமிழன் என்ற இவனுக்கு ஏற்பட்ட வரலாற்று இடர்களுக்கெல்லாம் விளக்கம் எவ்வாறு காண்பது.  தென்னாட்டுப் போர்க்களங்க ளெல்லாம்  அளவற்றவை ஆயினவே.  ஆதலின் "உயிதம்" என்பதே மீட்டுருவாக்கம். யகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பதை முன் இடுகைகளில் கொடுத்துள்ளோம்.

உயிதம் -  உசிதம்  ஆகும்.  உய்தம் > உசிதம் எனினும் ஏற்புடைத்து என்க.

இனி, மிக்க உயரத்தில் வைத்துப் போற்றக்கூடியது என்ற பொருளில்:

உச்சி  > உச்சி + து + அம் >  உச்சிதம் , பின் சகர மெய் இடைக்குறைந்து உசிதம் எனினும் சரிதான்.

உ(ச்)சி >  உசி து  அம் > உசிதம் எனினுமாம்.

இங்கு இது அமையும் என்பது இங்கு+ இது + அம் > இங்கிதம் ஆனது நினைவுக்கு வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 07122023 2037

Please refrain from making any changes.