சனி, 4 நவம்பர், 2023

காசி என்னும் சொல்.

 இன்று காசி என்னும் சொல் பற்றியும் தொடர்புடைய ஒருசிலவற்றையும் தெரிந்துகொள்வதுடன் இச்சொல்லைத் தமிழ் மூலங்களைக் கொண்டு, சற்று ஆய்வுசெய்தறிந்திடுவோம்.

"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்  தமை நன்னெறிக்கு  உய்ப்பது  வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"   என்பது மிக்க வான்பொருளுய்க்கும் தேவாரப் பாடலாகும்.

இங்குக் கசிதல் என்ற வினைச்சொல் பொருந்திப் பொருள்மிகுக்கும் சொல்லென்க. ஒருவன் காசிக்குச் செல்வதே  இறையை எண்ணிக் கசிந்துருகுவதற்காகத் தான்.

வெள்ளி போல் உருகி ஊற்றுமிடத்து அதில் ஒளிபடுமானால் வெண்மை மின்னி அழகுறுத்தும் என்பதில் ஐயமில்லை.  ஒளியில் மின்னுதல் என்பது இதன் பொருள் என்று ஏனை மொழியினர் கொண்ட பொருளும்  ஏற்புடையதே ஆகும்.
பட்டு மின்னுதல் என்பது மட்டற்ற மகிழ்வு தரும் பொருளாயினும்,  தேவாரம் தரும் பொருள் மனத்துக்கண் நிகழும் கசிவே ஆகுமாதலின்.  அம்மனத்தையே தளமாகக் கொண்டு பொருள் விளக்குதல் இன்னும் சிறப்புடைத்து என்பது  மேம்பாடுடைய கருத்தெனக் கொள்க.

சுடு > சூடு என்று முதனிலை ( அதாவது முதலெழுத்து ) நீண்டு பெயர்ச்சொல் ஆவது போலுமே,  கசிதல் -  கசி >  காசி என்று அமைந்து,  மனம் கசிந்துருக இறைவணக்கம் இயற்றுமிடம்  என்று பொருள் கொள்வது மிகுந்த  சிறப்புடைத்து ஈண்டு என்று முற்றுவிப்போம்.

இப்பெயர் தென்காசி என்று தென்னாட்டிலும் மீள்வருகைகொள்வதால்,  தென் காசிக்கும் இப்பொருள் கொள்ள இடனாகின்ற தென்க.

காசி என்பது காக்குமிடம் என்று காத்தல் அடியாக நின்று,  இருபிறப்பியுமாகும்.
மாசி என்பதில்  மா (பெரிது) என்ற சொல்லுடன் சி விகுதி வந்ததுபோலும் இஃது  விகுதிபேறு ஆகும். மாசி எனின் சிறப்புடைய மாதம். நாசி என்பது நாவின் மேலிருப்பது என்று பொருள்படும் உறுப்பின்பெயர். அதாவது  மூக்கு, நாவொலிகட்குச் சிறப்புச்செய்வது.  சி -  சிறப்பு எனினுமாம். ஆசி என்பது ஆக்கம் சிறக்க என்பது.     ஒப்பிட்டுக்கொள்க. 

இதனைக் காஷி என்று எடுத்தொலித்தல் பின் வந்த மெருகூட்டல்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்.

புதன், 1 நவம்பர், 2023

மந்திரவித்தை வேறுபெயர்கள்

 மந்திரவித்தை என்பது எல்லாக் காலங்களிலும் மக்களிடைக் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது.  இதை ஒரு கலையென்று கூறலாம்.  ஆங்கில உலகில் இதை ஓர் அறிவியல் என்று சொல்கிறார்கள். Occult Science என்னும் இதுபற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இது கலையா அறிவியலா என்பதைப் பற்றி நீங்கள் வாதத்தில் ஈடுபடலாம்.  தென் கிழக்காசியாவில் இது பயிலப்பட்டு பயன்பாட்டில் உள்ளதொன்றாகும்.

அசுரமாயம்,  பூதாசனம், சித்திரகருமம், இந்திரஜாலம்,  மாயாஜாலம், கர்மண, கிர்திஹாரம், மந்திரவித்யா, மந்திரரத்னா  என்பவை முதல் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன. இந்தச் சொற்களை எல்லாம் வேண்டியாங்கு மந்திரவித்தையைக் குறிக்கப் பயன்படுத்துதல் கூடும்.

தமிழில் மந்திரம்செய்தல் என்று வழக்கில் சொல்லப்படும் இதற்கு,  ஒட்டியம் என்றொரு  சொல்லும் உள்ளது.  சூனியம் செய்வோர் பூசனை செய்யும் காளிதேவிக்கு  ஒட்டியக் காளி என்றும் சொல்லுவர்.

ஓர் உண்மை நிகழ்வை அறிந்தபின்  அதை வேறுபடுத்தவே மந்திரங்கள் செய்யப்படுகின்றன. எ-டு   ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள்,  அவளைப்பற்றி நிகழ்வறிந்த பின் செய்யப்படுவதே மந்திரவேலை.  ஓடிப்போனவள் திரும்பவேண்டும் என்பது குறிக்கோள்.  இதனால் இந்த மந்திரம் ஒட்டியம் எனப்படுகின்றது.  ஒட்டிச்சென்று இயல்விப்பது ஒட்டிய மந்திரம்.  ஒட்டுவித்தை. ஒட்டுமந்திரம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்துபின் துணிப்பஞ்சம் இருந்ததால் துணிகளை ஒட்டுப்போடும் தையல்காரர்கள் அதிகமிருந்தனர். இதழொலிகளால் ஆன கவியும் ஒட்டியம் எனப்படும்.

பில்லி,  சூனியம் என்ற வழக்குகளும் உள்ளன.  புல்லுதல் என்றால் ஒட்டிச்செல்லுதல் என்று பொருள். புல்,  மரம்போல் மேலெழாமல் தரையுடன் ஒட்டிவளர்வதால்  (புல்லி வளர்வதால்)  அஃது அப்பெயர் பெற்றது. புறக்காழனவே புல்லென மொழிப என்பது  தொல்காப்பியம்.  ( மரபியல் காண்க). ஆனால் வரையறவுகள் இன்று வேறுபட்டுவிட்டனவால், தொல்காப்பியர் காலத்தின் "புல்லும்"  இன்று நாம் குறிக்கும் புல்லும் வேறுபடுதல் கொள்க.

பில்லி என்பது புல் > புல்லி> பில்லி என்று திரிந்தது.  உ-இ திரிபு.

சூழ்தல், உன்னுதல் என்ற இருசொற்களின் பகவொட்டாகத் தோன்றிய சொல்லே "சூனியம்"  என்ற மந்திரவகை.  சூழ் உன்னியம்.> சூ(ழ்) + (உன்)னியம்.  சூழ் ~தல்  என்பது ஆலோசித்தல்,  ஊன்றி எண்ணுதல்.  உன்னுதல் என்பது அவ்வாறு எண்ணியன முன் கொணர்தல். உன்னுதல் என்பது தியானித்தலுமாகும்.   சூன்யமென்பது ஒன்றுமின்மை என்பது இங்குப் பொருளாகாது.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறள் நினைவிலிருக்கிறது.  சூனியம் என்பது மிக்கத் திண்ணியனவாய் எண்ணி நிகழ்த்தப்படுவது.  பில்லிசூனியம் என்பன இணைச்சொற்களாய் உலகவழக்கில் ஒருபொருட்குறிப்பின வாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


தொடர்புடைய மற்ற இடுகைகள்:


If these connections do not take you to the post,  there may be a fault in connection.
You have to search manually to reach these posts. We are sorry about that.





சனி, 28 அக்டோபர், 2023

பாண்டு, பாண்டியர், மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 தலைப்பிற் கண்ட சொற்களுடன்  சிறிது நேரம் செலவிட்டு அவற்றை அறிந்துகொள்வோம்.

பாண்டியன் என்ற சொல்லைப்  "பண்டு " என்ற சொல்லுடன் சேர்த்துக் கவனித்த சில தமிழறிஞன்மார்  பாண்டிய அரசகுலம்  மிக்கப் பழமைவாய்ந்த  மரபாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  இது மிகவும் சரியானதாகவே தோன்றுகின்றது.  எப்படி என்று வினவலாம்.   மூன்று முடியுடை வேந்தருள் ஒருவரே ஆதியில் இம்மரபினைத் தோற்றுவித்தவராக இருந்திருக்கவேண்டும். பாண்டியர்களே அவ்வாறு செய்து நிலைநாட்டினர். மேலும் முச்சங்கங்கள் நிலவின என்ற வரலாறும் பாண்டிய மன்னர்களை  முன்னிலைப்படுத்திய  வரலாறாகவே சொல்லப்படுகிறது. மேலும்  தென்னாடு என்பது நீண்ட கடற்கரையை உடையதாகவே இருந்துள்ளது.  இந்தியாவின் ஆதிக்குடிகள் என்போர்  பெரும்பாலும்  கடல்நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு,  மீனுணவு உட்கொண்டு வாழ்ந்தவர்களே. அவர்கள் தெய்வம் மீனவப் பெண்தகையான மீனாட்சியே.  அது உண்மையில் கடல்நாகரிகமே, அதாவது மீன்நாகரிகமே.  அவர்கள் நாட்டைப் பிடித்து ஆண்டாலும் மீனே அவர்களை ஆட்கொண்டு சிறந்தது.  நீரிலிருந்து துள்ளி எழுந்து விழும்போது,  இந்த மீன்கள் மின்னின,  மின்னுதல் >  மின் > மீன் என்பது முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.  தகைமையில் இம் மீன்கள் விண்மீன்களை ஒத்தன.  ஆறுகளிலும் மீன்கள் கிடைக்குமென்றாலும்  நிலம்சார்ந்து வாழ்ந்தோருக்கு  மற்ற உணவுகள் ஒத்த அளவிலோ மேலாகவோ கிட்டின.  இம் முன் மரபினரோவெனின் மீனைத் தம் கொடியிற் பொறித்தது இயல்பானதே ஆகும். இவர்களின்  முதல் ஆட்சித் தலைமை ஒரு பெண்ணாகவே இருந்தமையால்,  அவர்  மீனாட்சியம்மை யாகினார்.  வாழ்க மீனாட்சியம்மை மகிமை.

பாண் அடிச்சொல் வந்த மற்ற சொற்பயன்பாடுகள்: 

கேரளத்து மலைகளில் தமிழ்ப் பேசிய குறவர்கள்,  பாண்டிக்குறவர் எனப்பட்டனர்.  பாண்டி என்பது அவர்கள் பழங்குடிக் குறவர்கள் என்ற பொருட்டாகும்.  இதன்மூலம் பாண்டி என்ற சொல்லுக்குப் பழமைப் பொருள் உண்மை தெளிவாகிறது.  அதேபோல் பசு வகைகளிற் பழமையானவை பாண்டிப் பசு எனப்படுகிறது.  பாண்டிப்பசுவின் பால், மிக்க இனிமையுடையதாகும். 

பாண்டல்  ( பாண்டு+அல்)  என்பது பழையதாய் உதவாமற் போன பொருட்களைக் குறிக்க வழங்கும் சொல் .(  எடு:  பாண்டல்நெய்,  பாண்டல்கருவாடு, பாண்டல்மீன் எனக் காண்க.)  

இவற்றில் அடிச்சொல்:  பாண்டு. பாண்டு என்பது பண்டு என்பதன் நீட்சியே ஆகும்.  

பாண்டிகன் என்ற சொல்லோ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பாடுவோனைக் குறிக்கிறது.  இச்சொல்லில் வரும் பாண் என்ற அடிச்சொல் பண் > பாண் என்ற என்று பாட்டினைக் குறிக்கும் சொல்லுடன் பொருளியைபு உடையதாகின்றது.  இவ்வகைப் பாட்டுக்காரர்கள் நம் எண்ணத்திற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வேலையைச் செய்துவந்தவர்களாய் இருக்கவேண்டும் என்று கூறுவதன்மூலம்  "பண்டு"   (பழங்காலம்) என்பதனோடு இணைக்கலாம். இம்முயற்சிக்கு  வேறு அடைவுகள் ஒன்றுமில்லை.  படித்தவர் சொல்கிறார் என்பதே தவிர, இதுவா அதுவா என்று முற்றுறக் கூற முடியாத நிலைமையே மிஞ்சும்.  இருபிறப்பி  இது என்றும் கூறி முடிக்கலாம்.  கொண்டுவந்த பண்களை கோயிலில் வீழ்த்திச்செல்பவர்கள் என்பது இச்சொல்லின் பொருளாதல் கூடும். இகுத்தல்  வீழ்த்துதல்,  இ - இங்கு, கு-  சேர்(ப்போன்).

பண்கள் அல்லது பாட்டுகள் முன்னரே எழுதப்பெற்று அல்லது புனையப்பட்டு மெட்டு அல்லது இராகம் அமைத்துப் பின்னரே பாடப்படும்.  புதிய பாடல்கள் புனைந்து பாடுவோர் பெரும்பொருள் வரவை எதிர்பார்ப்பதே இயல்பு.   ஆதலின் இயல்பான நிலையில் பண்கள் பழையவை.  இந்தப் பழமையிலிருந்து பண் -  பண்டு என்பதற்கு பழையது என்ற பொருள் வந்திருகிறது  என்பது தெளிவு.  பண் என்பது பண்ணுதல் அல்லது செய்தல் என்னும் வினையிலிருந்து வருவதால், பண்ணும் நேரம் வேறு,  அது உணவாயின் தின்னும் நேரம் வேறு.  பண்ணப்பட்ட நேரம்  முன் செல்கிறது. பயன்பட்ட நேரம் பின்வருகிறது.  இதுவே பெரும்பான்மையும் இயல்புமாம்.  ஆதலின் பண்+ து >  பண்டு என்று அமைக்க ப்பட்டது  முன் பண்ணினதையே பெரிதும் குறிக்கும்.  ஆதலின் பண். பண்டு என்பதன் பழமைத் தொடர்பை உணர்ந்துகொள்க.  ஆகவே பாண்டு என்பதும் அது.  பல பண்கள் நல்லனவாய் அமைந்தவை.  ஆதலின் பண்ணாகும்  என்று சொன்னால் நன்றாகும் என்பதும் பொருளாம்.

பண் பாண் பாண்டு என்பன தொடர்பில் பல உள்ளன.  எல்லாவற்றையும் இங்குக் கூற இயலவில்லை.  சிலவே கூறினோம்.'

வாக்கியம்:   பண் அது பழைமை:   இப்போது அது என்பதற்குத் து என்ற இறுதியை மட்டும் விகுதியாக்கினால்:-  பண் + து >  பண்டு, (பழமை). பண்டு > பாண்டு.  பண் பாடுவோர் பாணர்.  ( பண்- பாண் கண்டுகொள்க.)  பாண்டு+ இ+ அர் >  பாண்டியர் ஆகும்.  ( பழங்காலத்திலிருந்து , இ - இங்கு,  அர் - இருப்பவர்(கள்).  )   பண்ணுதல் -  வினைச்சொல்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்