அண்முதல் என்ற சொல்லின் பொருள் : நெருங்கிச்செல்லுதல் என்பதாம். இஃது அண்ணுதலென்றும் வடிவம் கொள்ளும். அணத்தல், அண்வருதல். அணவுதல் என்பனவும் இணைப்பொருண்மையன ஆகுமென்றறிக.
இப்போது தேர்தல் களம் நெருங்கிக்கொண்டுள்ளது. தேர்தலிற் கூட்டணிகள் ஏற்படுதல் இயல்பு. ஓர் அணியினர் இன்னொரு கூட்டத்தாரை அணுகி, ஒன்றாக களப்பணிகளில் இறங்க முனைவராயின், அவர்கள் ஒரு கூட்டணியினர் என்று சொல்கிறோம். இவற்றிலெல்லாம் அண் என்ற அடிச்சொல்லே சொற்களை நமக்குத் தருகிறது.
அண்முதல், ( வினையாக்கம்: அண்+ ம் + உ , இவற்றுள் ம் என்பது இடைநிலை, உ என்பதுதான் வினையைப் பிறப்பிக்கும் விகுதி ), இதில் தல் என்னும் பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்தால் தொழிற்பெயர் என்று கூறுவோம். வினையிலிருந்து உருவான பெயர். அதாவது ஒரு செயலுக்குப் பெயராவது.
பிராந்தியம் என்ற சொல்லிலும் இந்த அண் என்பதைக் கண்டுகொள்ளலாம். ஓர் அரசுக்குட் பட்ட பகுதிக்குள் முறையாகவோ தொடக்கத்திலிருந்தோ உள்ளடங்காமல், தனியாக ஆளப்படும் நிலப்பகுதியை இவ்வாறு குறித்தல்கூடும். இது:
பிற + அண் + தி + அம்
என்று பகுத்தறியப்படுவது சிறப்பாம். பெரும்பான்மை இத்தகு நிலப்பகுதிகள் அண்மி இருப்பவை. தி அம் என்பன தேயம் என்பதன் திரிபாக அறியப்பட்டுள்ளதனை இங்குக் காணலாம். அன்றி தி விகுதி என்று எண்ணப்படுதலும் இழுக்காது என்று அறிக.
https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_25.html
பிராணி என்ற சொல்லும் மனிதரல்லாத பிற அணியில் உள்ள உயிர்கள் என்று பொருள்பட்டுத் தமிழாதல் காண்க. இதை முன்னைய ஆய்வாளர்கள் இவ்வாறு சிந்திக்க மறந்தனர். இவ் வாறு சிந்தித்தல் தமிழுக்கும் பிறவுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகும், இத்தகைய பல்வேறு ஒற்றுமைகள் வெறும் உடனிகழ்வாதல் (mere coincidence) இயலாமை உணர்க. அதனால்தான் சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் அன்று என்று கூறலானோம். இப்பூசை செய்வார் மொழி உண்மையில் வெளியிலிருந்து வரவில்லை என்பதே உண்மையாகும். வெள்ளைக்காரன் உரையை வெற்றுக்கட்டு (புனைவு) என்பதால் நாம் ஏற்கவில்லை.
பிற என்ற சொல் சொல்லாக்கத்தில் ஒரு பகுதியாக வருங்கால், அது பிர என்று மாறிவிடும், றகரம் ரகரமாகும். வல்லொலி இடையின ஒலியாய் மாறி மென்மை பெறும், இதை முன் சுட்டிக்காட்டி யுள்ளோம். இதை அறிவதும் முதன்மையாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்