மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழ் தமிழரிடையே, ஒரு சீன நண்பரைக் குறிக்க " சீனிவாசன் எங்கே போய்விட்டார், இன்னும் காணவில்லையே," என்று பேசிக்கொள்வதுண்டு. இத்தகைய உரையாடல் தமிழ்நாட்டில் நடைபெறுதற்கில்லை அல்லது அதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும். எங்கும் பரவலாக இருப்பவன் சீனிவாசன் என்றால், அந்த வருணிப்பு அவர்களுக்கு மலேசியாவில் பொருந்துவதே. அகரவரிசையில் குறிப்பிட்ட பொருளிலேதான் ஒரு சொல்லைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. காளமேகம் போன்ற கருத்தாளர்கள் - புலவர்கள், வேண்டியவாறு பயன்படுத்திக்கொள்வர்.
சீனி என்பது ஓர் இனிப்பரி ஆகும், ஆதலின் இனிமையாகப் பேசுபவர்க்கு அவர்தம் பேச்சுக்கள் இனிமையுடையவை என்ற பொருளில் " சீனி வாசகர்" என்றும் சொல்லலாம்., வாசகர் வேறு வாசர் வேறு என்று பொருள்வேறுபாடு கண்டு, சீனிவாசகர் என்பதை வேறுபடுத்திக் காட்டுதலும் கூடும். சீனி வாசகர் என்பது " மணிவாசகர் " என்பதுபோலும் சொல்லமைப்பு ஆகும்.
அடையாள அட்டைகளில் பெயர்கள் வேறுபட எழுதப்பட்டுள்ளன வென்பதும் யாமறிவதே.
இனிச் சீனிவாசன் என்பதன் பதிவுபெற்ற, வேறுபட்ட வடிவங்களின் பொருள் கண்டறிவோம்.
ஸ்ரீ என்பது திரு என்பதற்கு நேரான வடிவம். திரு> த்ரி> ஸ்த்ரி > ஸ்ரீ என்பதில் தொடர்பினை அறிந்துகொள்க. வேங்கடம் என்பது திருவேங்கடம் என்று அடைமொழி கொடுத்தும் விள்ளப்படுவதாகும். வேங்கடத்து இறைவன் போற்றிக்கொள்ளப்படுபவன் என்பதை இதனாலறியலாம்.
அடுத்து உள்ள சொல் நிவாசன் என்பது. நி என்பது நித்தியத்தை அறிவுறுத்துவதாகும். நிலைபெற்ற தென்று பொருள். மாற்றமில்லாதது. வாசன் என்பது எளிதான சொல்தான். வசிப்பவன் என்பது பொருள். எனினும் இதற்கு சற்று மாறுபட்ட பொருளும் உண்டு. அஃதாவது, இலக்குமி வேங்கடத்துள் வாழ்கிறாள் என்பது. இந்தப் பொருள் வெளிப்பட, அன் விகுதி இன்றிச் சொல்வதானால், அது பொருந்துவதாகும். சீனிவாசு, (சீனிவாஸ்) என்பது காண்க.
திருவேங்கடத்தில், திருவாக நிலையாக வாழ்பவன் என்று பொருளுரைக்குங்கால், இடக்குறிப்பினை வருவித்துக்கொள்ளவேண்டும்.. கடவுள் எங்கும் இருப்பவன் ஆதலின், அஃதின்றியும் உலகில் எங்கும் இருப்பவன் என்று விரித்துரைத்தலும் ஒப்பதே ஆகும். உலகில் வேங்கடமும் உளது ஆதலின் இதில் பொருள்திரிபு ஒன்றுமில்லை. எனினும், இடங்களில் சில உயர்வுடையவாகக் கருதுதல் மக்கள் வழக்கு ஆகும்.
வாஸ் என்பது வாழ் என்பதே ஆதலின், நிலைத்த திரு வாழ்நன் (நிலைத்திருவாழ்நன் ) என்பது இதன் தனித்தமிழ்.ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.