காட்சிச் சிறப்பாகப் பேசும் சீமான் வெற்றி பெறவில்லை.பாவம் அவர் எதுவும் கொடுக்கவில்லை. அதுதான் காரணம். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு திட்டம் வைத்திருப்பார். வாக்கு யாருக்கு என்பதில் மக்கள் ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். அது காசு வேண்டும் என்பது. இந்தத் திட்டங்கள் பொருந்தாத நில்லையில் வெற்றி கைவசமாவதில்லை. அதைத்தான் இக்கவிதை கூறுகிறது. இந்தத் திட்டங்களை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.
நோக்கங்களையும் திட்டங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா என்பது அவர்கள் பாடு. நாம் கூறும் காரணம் சரியானதன்று என்று ஏற்படும் போது,
அதைத் தள்ளுபடி செய்துவிட வேண்டியதுதான்.
எண்சீர் விருத்தம்.
யாருக்கும் யாதொன்றும் தாரா விட்டால்
யார்வந்து போடுவரோ தேர்தல் வாக்கு
போருக்குப் போவதுபோல் குதித்தெ ழுந்து
போற்றுதற்குப் பற்பலவே புகன்ற போதும்
பாருக்குள் கைதட்டல் பயனொன் றில்லை
பழக்கமுண்டு பரம்பரையாய் இறைஞ்சி வாங்கி!
நாருக்கு மணம்வேண்டின் பூவைப் பற்று
பூவுக்குள் புழுநின்றால் மறைந்து போகும்.
புகன்ற - பேசிய
போற்றுதற்கு - புகழ்வதற்கு
பாருக்குள்- உலகில்
இறைஞ்சி - கெஞ்சி
பற்று -- பற்றிக்கொள்
மறைந்து போகும் - ஊர்ந்து எங்காவது போய்விடும்
நார் என்பவர் வேட்பாளர். அவர் சொல்லென்னும் பூவைப் பொழிகிறார் மக்கள் மேல். அதற்குள் இலஞ்சம் என்னும் புழுவிருந்தால் அந்த நாடுகளில் தெரிவ தில்லை. யார் வெற்றிபெற வேண்டுமென்பது மக்களுக்கு உரியது ஆகும்.
அதை இக்கவிதை சொல்லவில்லை. கொடாமையால் தோல்வி என்பதுதான்..