தாக்கல் செய்தல், சொல்வழக்கு
ஏதேனும் அலுவலகம் போன்ற அமைப்பில் சில சான்றேடுகளைக் கொண்டுபோய்ப் பதிந்து வருவதை, " தாக்கல் செய்தல்" என்னும் வழக்கு, பெரிதும் பேச்சு வழக்கில் காணப்படுகிறது. " வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் பண்ணிவிட்டோம்" என்பதைச் செவிமடுக்கின்றோம். இச்சொல், தாளிகைகளிலும் வழக்குப் பெற்றுள்ளது. ஆனால் இப்போது ஆங்கிலச் சொற்களின் மிகுதிப் பயன்பாட்டால், இத்தகு சொற்பயன்பாடு குன்றிவருதல் அறியலாம். இதனிடத்தில் submit, file, tender(ing) எனப் பல ஆங்கிலச் சொற்கள் வந்துவிடுகின்றன.
முழுமையாக ஆங்கிலத்திலே பேசி முடித்துவிடாமல், கொஞ்சமாகவாவது ஆங்கிலம் கலந்து பேசிமுடித்தல், தாய்மொழிப்பற்று இன்னும் இருப்பதைக் குறிக்கலாம். இதை விருத்தி செய்துகொள்தல் வரவேற்கத்தக்கது.
தாக்கல் என்பது தாக்கு என்ற வினையினடியாக எழும் சொல்லாகும். பதிந்திடுதலைக் குறிக்குங்கால், இது "அடித்தல்" (தாக்குதல் ) என்று பொருள்படும் சொல்லினின்று வேறுபடும் சொல்லாகும்.
பதியத் தருதல் என்று பொருள்தருகையில், இது தரு~ என்னும் வினையினோடு தொடர்புடைய கருத்தே ஆகும். தரு என்ற வினைப்பகுதி, தா என்றும் திரியும். தா என்ற திரிபுநிலையை அடைந்தபின், இச்சொல் மீ ண்டும் வினைவிகுதி பெற்று, தாகு( தாக்கு) என்றாகி, அல் விகுதியும் பெற்று, தா + கு+ அல் > தாக்கல் என்ற வடிவை அடைந்தது. கணிப்புக்கு ஏற்றல், பதிந்திடத் தருதல், முன்வைத்தல், அறியத்தருதல் என்று பல நுண்பொருள்களை விரிக்கலாம்.
வினையானபின் மீண்டும் வினைவடிவம் அடைதல் தமிழில் காணப்படும் அமைப்பு ஆகும். பழைய இடுகைகளில் இதனை விளக்கியிருக்கிறோம். முயலுதல்> முயற்சித்தல் என்பதும் சிலர் வழங்கும் இத்தகைய வினைச்சொல்லே ஆகும். அடுத்தல், அடு+இ > அடி > அடித்தல் என்பதும் காண்க. நொண்டு(தல்) > நொடு> நொடி > நொடித்தல் என்பதுமாம். கடு> கடு+இ > கடித்தல் என்பதும் அது. கொள் > கொள்தல், கொள் - கொடு, கொடுத்தல் என்பன பொருள்மாற்றத்துடன் வருகின்ற திரிபுகள்.
தாக்கல் என்பது உருது அன்று.
அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக