நாம் இன்று தாய் பற்றிய தமிழர் சிந்தனை, எத்துணை அளவு மொழியில் (அதாவது சொல்லைமைப்புகளுக்குள் ) அடைவுகண்டு கிடக்கின்ற தென்பதை அறிந்துகொள்வோம்.
தமிழ்மொழியைப் பேசியோர், தாய்மேல் உள்ள பற்றுதலால் தாய் என்ற சொல்லையும் அம்மா என்ற சொல்லையும் எப்படி இணைத்து, இருசொல் பகவொட்டாக அமைத்தனர் என்பதை விளக்கியுள்ளோம்.
அம்மை > அம்மா ---- மா. (முதற்குறை).
தாய் > தா ( கடைக்குறை )
மா+ தா = மாதா.
பன்முறை அம்மா என்பது அன்பின் திண்மை காட்டும்.
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் என்பது தமிழர்பண்பாடு.
பெற்றதாய் தனை மகமறந்தாலும். ( வள்ளலார்).
தெய்வத்தைக் குறிக்கும் அம்மன் என்ற சொல்லும், அம்மை என்ற சொல்லினடியாய் வந்தது நீங்கள் அறிந்தது.
அம்மன் என்ற சொல் அன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று முடிந்தாலும், அவ்விகுதி பெண்பாலையே பொருட்குறியாய்க் கொண்டது, அன் என்னும் விகுதி அணுக்கம் என்னும் பொருளிலிருந்து புறப்படுதலின், வெகு பொருத்தமாம். அன் என்பது அன்பு என்பதன் அடிச்சொல்லுமாகும்.
குறுக்கினும் நீட்டினும் ஒருபொருள் தரும் சொற்கள் உள, எ-டு பதம் - பாதம். (கால் கீழ்).
அம்மைக்குப் பின்புதான் அப்பன் என்பதால், பிதா என்ற சொல் அவ்வாறே அமைந்தது.
தாய்ப்பின் > (முறைமாற்றாக ) பி(ன்) + தா(ய்) > பிதா.
முறைமாற்று அமைப்புக்கு இன்னொரு காட்டு : இலாகா < இல்லாமாக அல்லது இடத்திலமைந்த காப்பு இயக்கம். இல் - இடம். ஆ : ஆகிய அல்லது ஆக்கம்; கா- காப்பு. ( காப்புக்காகிய இடம் ). இல் என்பது இடப்பொருள் உருபு. இது திறம்பட அமைக்கப்பட்ட சொல். உருது அன்று.
மேற்கூறிய பதங்கள் பூசாரிகள் வழக்கில், திறம்பட அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரித்தாகும்.
பின் என்பது பி என்று கடைக்குறைவு எய்திற்று, எ-டு இன்னொன்று: தன் பின் > தம்பி. பின்பு அம் > பிம்பம் என்பதும் அது . ( பின்னிழல்).
இத்தகு சொற்கள் பல, தாய்தரும் அன்பைக் காட்டத்தக்கவை.
யார் பின் - யார் முன் என்பது ஒருவகை மனந்தரு தகுதியே ஆகும்.
அப்பனைக் காட்டிலும் அன்பு மிக்கவள் தாயே ஆவாள். அப்பனிடம் அத்துணை மென்மை இல்லை. கைபார்த்த ஒரு புத்தபிக்கு, நீ உன் " "அம்மாக் கடவுளிடம்" போய் வணங்கு" என்று வந்தவரிடம் சொல்லியனுப்புகிறார் என்றால் அம்மாவின் ( அம்மனின்) அன்புதான் எத்துணை என்று அளவிடல் அரிதேயாகும்.
தாய் > தய்+ அண் + கு> தயங்கு. ( விரைந்து ஒறுக்காமல், நின்று நிதானிக்கும் தன்மை).
தாய் > தய் + அ + கு + அம் .> தயக்கம்.
தாய்> தய்+ ஐ > தயை ( அன்பு, கருணை)
சொல்லமைப்பில் சொற்கள் குறுகிப் புதுச்சொற்கள் உண்டாகும். இது முன் நீங்கள் அறிந்தது. தய் = தை.
எ-டு: சா > சா+அம் > சவம்; தோண்டு+ ஐ> தொண்டை. காண் > கண்.
சொல் குறுகி வினையும் பெயரும் அமையும்: நாக்கு > நக்கு; காது>கத்து.
காண் - கண், (மேற்கண்ட இரண்டிலிருந்து இஃது முறைமாற்று)
தயை, தாய் என்பவற்றின் சொல் திறம் கண்டீர். தயை என்பதன் தொடர்புகள் கொண்டாடத்தக்கவை.
தாயாகி நிற்போன்: தாய் + ஆ+ நிதி > தயாநிதி. பூசை ஆர்வோர் இலக்கணம், இஃதொரு வடமொழிப் புணர்ச்சி எனினும், உண்மை இதுதான் . தாய் ஆ = தாய் ஆகும் என்பது பொருள்.
ஒரு புதிய இலக்கணம் சொல்லும்போது மாற்றுரையாகச் சொல்வதில் குற்றமொன்றுமில்லை. அவ்வாறு தமிழிலக்கணியரும் கூறியுள்ளனர். தமிழில் "மாட்டிக் கூறாமல்," தனியாக்கிக் கூறுவது ஓருத்தி.
தயை என்பது தைத்தல் வினையோடு தொடர்புடையது. இனியொருநாள் காண்போம். மக்களை இணைக்கும் மாதமும் தை எனப்பட்டது. தோலில் ஒட்டும் மருந்தெண்ணெயும் தைலம் எனப்பட்டது. அடிப்பொருள் ஒட்டுதல், மனவொட்டுதல். இணைப்பு. [ மனத்துள் தைக்கவேண்டும்.] குழந்தையை ஒட்டிநிற்பவள் தாய்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
சில சேர்க்கப்பட்டன. மீள்பார்வை பின். 27022022