அடியர் உனையே வணங்கி மகிழ்ந்தனர்
அடுத்திருந் துன்னைப் பாடிப் பரந்தனர்
மடியில் மழைபொன் னானதிம் முறுவலில்
வடியும் கருணை உலகுக் களித்தனை.
அடியர் ---- அடியார்கள், பற்றர். ( பக்தர் என்பது திரிபு)
உன்னையே ---- அம்மனையே
வணங்கி - பணிந்து
அடுத்திருந்து - உன்முன் ( அம்மன்முன்) அமர்ந்து
பாடிப் பரந்தனர் --- பாடலால் புகழ்ந்தனர்,
மடியில் மழை பொன்னானது ---- மடியில் பொன்மழை பெய்தது போலாம்,
முறுவலில் - ( உன்) புன்னகையில்
கருணை வடியும் - நெஞ்சிரக்கம் வடிந்தது,
உலகுக் களித்தனை --- இதனை உலக மக்கட்குப் பகிர்ந்தனை, பகிர்ந்தாய்.
யாம் அம்மனிடம் வைத்த விண்ணப்பங்கள் கேட்டுக்கொண்டபடி நடந்துள்ளன. சில வேளைகளில் அம்மன் கோபமாய் இருப்பதாகத் தெரியும். வேறுசில சமயம் புன்னகையாய் இருப்பாள் அம்மை. இது யாமே கண்டது.
இது ஒரு நேரடி நிகழ்வு, யாம் அறிந்துகொண்டது. இதை யாம் யாரிடமும் நிறுவ வேண்டியதில்லை. அம்மன் முறுவலிக்கும் போதெல்லாம் நல்லதாய் இருக்கும். பொருள்வரவு போலும் எதையும் யாம் முன் வைத்ததில்லை. பிறர்பொருட்டுச் சில வேண்டியுள்ளமை நினைவுக்கு வருகிறது. எவனிடமும் எப்பொருளும் வேண்டியதில்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்