திங்கள், 5 டிசம்பர், 2022

கார்த்திகைத் தீபம்

 தீபம் மறுமலர்ச்சி,                                                                                                                      தேனினிய மீள்சுழற்சி,                                                                                                            காவந்துக் கனிவளர்ச்சி,                                                                                                    கல்லுருகும் தமிழுணர்ச்சி                                                                                                கார்த்திகை இறைநிகழ்ச்சி                                                                                              காலமெல்லாம் நம்புகழ்ச்சி.


கார்த்திகைத் தீபம் என்றால் அண்ணாமலையார்க்கும் மிக்கச் சிறப்புகள் மகிழுறுமாறு நடைபெறும்.  இந்தக் காலக் கட்டத்தில் ஒரு வாழ்த்தைத் தெரிவித்தலும் மிகுசிறப்புத் தருவதே ஆகும்.  எமக்கு அன்பர் ஒருவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  அவர்க்கு யாமெழுதிய பதிலெழுத்து,  எழுதுகோல் சென்றபடி வரைவுகண்டது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்குப் பொருள் ஏதுமுண்டா என்று வினவுங்கள். பொருள் சொல்லத் தெரிந்தவன் எதற்கும் ஒரு பொருள் சொல்வான்.  தெரியாதவனுக்குப் பொருளிருந்தாலும் ஒன்றும் தோன்றுவதில்லை. உலகம் அவ்வாறானதே ஆகும். உங்களுக்குத் தோன்றும் பொருளை நீங்கள் மேலெடுத்து உரைகொள்க. 

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கலம், கலன் என்பது கப்பலைக் குறிப்பதெப்படி.

 கலன் என்ற சொல்லுக்கு நம் முன் தோன்றும் உள்ளுறைவுகள் பலவாகும்.

கலன் என்பது அணிகலன்களையும் குறிக்கும்.  இஃது  "கலன் கழி மடந்தை" என்ற தொடரில் கண்டுகொள்ள  இயல்கின்றது.  இதன்பொருள் "விதவை" என்பதாகும்.  கையறு நிலைக்கு வருந்தி நிற்கும்  பெண்,  கைம்பெண். இதனைக் கையறவு  எனலும்  ஆகும். 

கடிஞை என்பதும் கலம்தான். இது கடு என்பதனடியாகத் தோன்றியது காணத் தெரிகின்றது. கடு> கடி.  கடினமான ஓட்டாலானது.

கலம் - கலன் என்பவை வெவ்வேறு   அடிச்சொற்கள் பொருந்தி அமைந்து உருவாகி ஓர்முடிபு கொண்ட சொல்லாகும் வாய்ப்பினையும் ஆய்வு செய்தல் வேண்டும்.  கடிஞை என்பது கடு என்பதடித் தோன்றியதால், கலன் என்பதற்கும் அஃது அடியாய் இருக்குமா என்று நோக்குக.

கடத்தல் என்ற சொல்லுக்கும் கடு > கடு+ அல் என,  கடு எனல் அடியாதல் முன் உரைக்கப்பட்டது.  கடல் கடத்தல் ஆதிநாளில் கடத்தற்கரியது,  அதற்கு அல்லாதது என்று மக்கள் எண்ணினர்.  இந்த அச்சத்திலிருந்து நாளடைவில் பல் இனங்களும் விடுபட்டன. முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டன.

அன் என்ற சொல்,  அணுகி நிற்றலைக் குறிக்கும்.  அன்-பு என்ற சொல்லின் பொருளில் இவ்வணுக்கம் தெளிவாகிறது.   அன்  என்பது அண் என்பதற்கு இணை நிற்பதான சொல்.

கடு> கட.

கட >  கட + அல் > கடல்.

கடு>  கடி > கடிஞை.  பிச்சைக்கலம். இரப்போர்கலம்.

கடு>  கட + இல் + அன்  >  கடிலன் >  இடைக்குறைந்து,  கலன்.

கடு > கட > கடப்பு+ அல் > கடப்பல் > கப்பல்

கடப்பதற்கு ஓர் இல்லம்போலும் அமைந்தது,  கலம் என்பது தெரிகிறது.

நீருடன் ஒட்டி மிதக்கும் இல்லம் என்பதை அன் என்ற ஈறு  தெளிவாக்கும். விகுதியாகவும் இரட்டித்த பயன் தரும் இது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

புதன், 30 நவம்பர், 2022

கு, கூ. குடு, குவ, குவி முதலான அடிச்சொற்கள் விளக்கம்.

 கு என்ற ஒலிக்கு மிகப் பழங்காலத் தமிழில்  " கூடியிருத்தல்",  "சேர்ந்து(வாழ்தல்)"   "ஒன்றாகவளர்தல்"   என்றிவ்வாறான பொருண்மைகள் அடிப்படையாக இருந்தன என்பதை இற்றை நாள் ஆய்வுகள் தெரிவித்தல் தெளிவு.  இப் பொருண்மை தெரித்தலில்,  குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடுகள் இல. கூடு என்பதும் இணைந்திருத்தல்  குறிக்கின்றது.  குடு  ( குடும்பம்,  குடி)    என்பதும் அவ்வாறே இணைந்திருத்தலைத்தான் குறிக்கின்றது. கூடு என்பது குருவிகள் கூடிவாழ் இடத்தினைக் குறிக்கிறது என்பதையும்,  மனிதன் செய்துவைத்த கூண்டு என்பது இவ்வடிச்சுவடுகள் பற்றியமைந்த சொல் என்பதையும் அறிய எறிபடை  அறிவியலைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் சொற்கலை* ( சொல்லின் கலை அல்லது கல்வி )  நமக்கு நுகர்பொருளாயும்  பரிமாணம் அடைந்துள்ளது.  

குவி(தல்).  குவவு(தல்), 

குவிந்த வேர்வகை,  குவா என்று  ஆவிறுதி பெற்றமைந்ததுடன்,  கூவை என்றும் நெடின்முதலாயும் அமைந்தது காண்க.   குவி > குவா,  இது  கல் > கலா என்பதுபோலும்,  காண்க.

குவிந்ததுபோலும் ஒரு சிப்பி,  குவாட்டி என்னும் பெயரினதாயிற்று.

குவியுருவினதாய பாக்கு,  குவாகம் ( குவி+ அகம்).

குவளை -  குவியுருவக் கடுக்கன்.

குவளை - குவியுருவின் மலர். 

குவளை மாலை யணிந்தார்,  வேளாண்மக்கள்,  எட்டியணிந்தார் செட்டிகள் போலுமேயாகுவர்.

இனிக் கூடி யிருக்கும் , வாழும் ஊர் குவலிடம் எனப்பட்டது.

நாம் வாழும் ஊர் . நம் ஊர்.   அப்பால் உளளது உலகம்.   அப்பால் என்பதை "அ" என்ற சேய்மைச் சுட்டு உணர்விக்கும். 

குவ >  குவல் >  குவல்+ அ+ அம் (விகுதி) >  குவல+ய்+ அம் > குவலயம்.

குவ> குவல்  ( குவ+ அல் )  - அல்:  சொல் இடைநிலை.

ய்  -  யகர உடம்படு மெய்.

அம் -  அமைந்தது குறிக்கும் இறுதிநிலை ( விகுதி).

குவலிடம் -  குவிந்து வாழும் ஊர்.

குவலயம் -   சூழ் உலகு..

குறிப்புகள்

பரிந்து மாணுதலே பரிமாணம்.  பரிதலாவது உள்ளிருந்து புறம்வருதல் (  சிறந்து விரிதல்.பின் மாணுறுதல் ).  இச்சொல் எழுத்து முறைமாற்று அமைப்பில் விசிறி > சிவிறி என்றமைதல் போல்,  பரிணாமம் என்று மாகும். இன்னோர் எ-டு:   மருதநிலம்சூழ் நகரம்:    மருதை > மதுரை.  இதைப் பண்டை மக்கள் மருதை என்றே அழைப்பினும்,  மதுரை என்று சொன்னது கல்வியுடையார் செய்த திரிபு என்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.

எழுத்துப் பிழைகள்  - பின்னூட்டமிட்டு உதவுக.

திருத்தம்: சொற்கலைதான், " சொற்களை"  அன்று. கற்கப்படுவது எதுவென்றாலும் அது கலை. கல்( கற்பது என்பதன் வினைச்சொல்) > கலை.