புதன், 30 நவம்பர், 2022

சடிதி, மற்றும் சடுதி, ஜல்தி

 அடு >  அடுத்தல் என்பதன் வினை எச்சம்  அடுத்து என்பது.

அடுத்து நடைபெறும் நடனக் காட்சி என்ற தொடரில்  அடுத்து என்பது நடைபெறும் என்பதற்கு அடைவாக வந்தபடியால் அஃது வினை எச்சம் ஆகும்.

ஒன்றற்கு அடுத்து இன்னொன்று நிகழுமானால் அது விரைவாக நடைபெறுதலைக் குறிப்பதனால்,  அது விரைவு குறித்தது.  ஆகவே அடுத்தது விரைவுமாகும்.

இதிலிருந்து,   அடு>  சடு >  சடு+ இது + இ >  சடிதி என்ற சொல் பிறந்தது.  இடையீடு இன்றி அடுத்து வருதலை உடையது எனவே, விரைவு ஆகும்.

சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றுமாகி விரைவு குறிக்கும்,

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பீடு மன் > பீடுமன் > பீமன் ( வீமன்).  பீடுடைய மன்னன். 


சடுதி அல்லது சடிதி என்பது ஜல்தி என்று திரிந்து விரைவு குறித்தது. சடுதி அல்லது சடிதி என்பது மூலச்சொல் ஆகும்.  அடுத்து நிகழ்தலால் கால தாமதம் இன்றி நடைபெறுதல் குறித்தது.

காலம் தாழ்த்தாமல் ஒன்று நிறைவேறினால்,  காலம் தாழ்த்தி மதிப்புறவில்லை என்று பொருள். ஆகவே,  தாழ்+ மதி >  தாமதி என்பது காலம்தாழ்வுறுத்தலைக் குறித்தது.  தாழ் என்ற சொல்லில் ழகர ஒற்று கெட்டது.

தாழ் + கோல் > தாழ்க்கோல்> தாக்கோல்.   கதவில் தாழ ( கீழ்ப்பகுதியில் உள்ள) கோல்.

இங்கும் ழகர ஒற்றுக் கெட்டது. 

தாழ்க்கோல் என்பது தாட்கோல் என்றும் திரியும். தாட்பாட்கட்டை என்றும் வரும்.  தாட்பாள் என்றும் வந்துள்ளது.

தாழ்க்கோல் என்பது தாழக்கோல் என்றுமாகும்.

இக்கோலைச் செறிக்கும் வாய் மூட்டுவாய் எனப்படும்.

கதவிற் சேர்ந்தபடி ஒரு மூட்டும் கதவுப்பலகைக்கும் மூட்டுக்கும் இடையில் ஒரு செறிவாயும் இருப்பதால்,  மூட்டுவாய் ஆயிற்று.

தாழ்ப்பாள் உ

ள்விழும் இரும்புக்கூடு "முளையாணி"  ஆகும்.

கதவை முடுக்கி இருத்தும் ஆரம்  ( வளைவு)  ஆதலால் அது முடுக்காரம் என்று அமைந்து  பின் முக்காரம் என்றும் ஆனது.

இனிச் சதி என்பதைக் காண்போம்.

அடுத்திருந்து செய்வதே சதி.

அடு > சடு >  சடுதி >  ( இடைக்குறைந்து )  > சதி.   ( அடுத்துக்கெடுத்தல்).

சதி > சதித்தல் ( வினையாக்கம்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 26 நவம்பர், 2022

திருட்டுப் போனால் என்செய்வது?பூசைக்குரிய நகை!

( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்) 


கோவி   லென்பது பொதுவிடம் --- அங்கேயும்

கோணல் புத்தியர் வருவதுண்டு!

ஆவி  போயினும் பிறர்பொருள் --- ஏலா

அன்பர்  தாமுமே  வருகின்றனர்.

திருடர் இயல்பு:

நீட்டும் கைக்கெது கிடைகுதோ  ---  எண்ணம்

நீங்கா முன்னதை எடுத்திடுவர்

பாட்டின் நல்லொலி திரும்புமுன் ---  எடுத்துப்

பக்கெனப் பைக்குள்  போட்டிடுவர்.

நகைகள்

அம்மன் போட்டிட  அணிசெய  ---   பற்றர்

ஆழ்ந்தும்  எண்ணியே  வாங்கினவே!

எம்மின் கண்களை மறைத்தவர்  --- திருடர்

கொண்டு   சென்றிடில் செய்வதென்னே?


போனவை போனவையே  ஆகட்டும் நீநெஞ்சே

ஆனவைக்கு  நீமகிழ்  ஆவன --- ஈனுபயன்

நீயறிந்து  மேற்கொள்வாய்  ஆயம்மை தானறிவாள்

ஓயாத தொண்டுசெய் வா.



 

பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.


கோணல் புத்தியர் -   நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.

ஆவிபோயினும்  - உயிர் இழக்க நேர்ந்தாலும்

ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்

எண்ணம் நீங்கா முன் -  திருடத் தீர்மானித்து,  வசதி இல்ல்லாமல் அதை

மாற்றிக் கொள்ளுமுன்.

பாட்டின் நல்லொலி :  பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்

மற்றவர்கள் பார்க்கக்கூடும்,  அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.

ஆழ்ந்தும் எண்ணியே -  நல்லபடி யோசித்து.

ஈனுபயன் -  பிறப்பிக்கும் பயன்.

ஆய் அம்மை -  துர்க்கை அம்மன்.


அறிக மகிழ்க

மெய்ப்பு   பின்னர்



புதன், 23 நவம்பர், 2022

உங்களின் போட்டியாளன்யார்? சொல்: சடுத்தம்.

 நீங்கள் வாழுமிடத்திலிருந்து  ஆயிரம் கல்தொலைவில் உங்களை அறியாத ஒருவன் வாழ்கிறான்.  அவனுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை.  அவன் உங்கள் எதிரியாக ஆகிவிடமுடியாது. உங்களுடன் கூடித் திரிபவன் தான் உங்களுக்கு எதிரியாக வருவதற்கு மிக்கப் பொருத்தமான இயல்புகளை எல்லாம் வெளிக்காட்டி, நாளடைவில் முழு எதிரியாக மாறத் தக்கவன்.

அடுத்திருக்கும் நண்பனே  உங்கள் எதிரி.  அதற்கான கால நேரம் வந்துவிட்டால் கணவனும் எதிரியாவான்; மனைவியும் எதிரியாவாள்.

ஔவைப் பாட்டி என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியும்.

" உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா;

உடன்பிறந்தே கொல்லும் வியாதி ----- உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு"

என்றது பாட்டியின் மூதுரை.  

உறவும் பகையாகிவிடும்; நட்பும் நஞ்சாகிவிடுவதுண்டு.   ஆகவே எதையும் ஒருகை நீட்டத்துக்கு எட்டவிருந்து கையாளுதல் எப்போதும் நல்லது.

இந்தக் கருத்து, சொல்லமைப்பிலும் இடம் பிடித்துள்ளது.

"அகலாது அணுகாது தீக்காய்க " என்கின்றார் தேவர்தம் திருக்குறளில்.  அது நண்பனுக்கும் பொருந்தும். 

இதையே தெரிவிக்கிறது சொல்லாய்வு.   

போட்டி பகைமையாகவும் மாறும்.   சடுத்தம்  என்பது அடுத்தியலும் போட்டி.

அடு (த்தல்) >  சடு >  சடுத்து + அம் >  சடுத்தம் ஆகிறது.

ஒரு காலத்தில் இச்சொல்வழங்கி  நல்ல வேளையாக இன்னும் நிகண்டுகளில் உள்ளது.  நம் நற்பேறுதான்.

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வீரம் பேசுவதும் சடுத்தம் பேசுதல் எனப்படும்.

இந்தியாவுக்கு அடுத்தது பாகிஸ்தான்.  அதற்கடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

உக்ரேன் ரஷ்யாவினின்று பிரிந்தது.  அடுத்துள்ளது.

இவையெல்லாம் பிறப்புக்கணிப்புகளின்படி தொடர்வது.

அடு > சடு என்பது உங்களுக்குத் தெரிந்த அகரச் சகரத் திரிபு.   அமணர் > சமணர் என்பது போலும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்