திங்கள், 7 நவம்பர், 2022

தருபார் அல்லது அரசவை.

 அரசனுக்கு இரண்டு வேலைகள் முதன்மை வாய்ந்தவை.

ஒன்று  இல்லை என்று வந்து கையேந்தி நின்றார்க்கு வழங்கி அருள்புரிவது.

இதைத் "தருவது" அல்லது தருமம் என்போம்.  

தரு+ ம் + அம்  = தருமம்.  பிறருக்குத் தருவது,  கொடை.  ம் என்பது இடைநிலை.

இதே போல் அமைந்த இன்னொரு சொல்  அறிக:   பரு(த்தல்) + ம் + அன் > பருமன்.

இர் இர் இர் என்பது ஒலிக்குறிப்பு.   இதிலிருந்து இரு என்ற ஒலிக்குறிப்பு அடிச்சொல் வருகிறது.

இரு+ ம் + உ -  இருமு>  இருமுதல்.

இரு +  (உ)ம் + அல் =  இருமல்.

"ம்" என்பது உம் என்பதன் முதற்குறை ( தலை இழப்பு).

கொடை/ தருமம்:

இவ்வாறு சும்மா வாங்கிக்கொண்டு போகும் நபர்கள் நாட்டில் பலர் இருப்பர். இல்லையென்றால் அது " உலக அதிசயம்"  அல்லது ஞாலவியப்பு ஆகும்.  இதை அரசின் வேலையாக, இங்கு சொல்லப்படுவது அவ்வாறான  கருத்துகள் முன் இருந்தமையால். இற்றைநாள் அரசுகள் இலவசம் தந்து மகிழ்விப்பதுபோலுமிது.

அடுத்தது நாட்டுக் காரியங்களைப் பார்ப்பது. பார்ப்பது கண்பார்வை அன்று. இயக்குதல் முதலியன நிகழ்த்தி அரசு நடாத்துதல்.

இதைப் " பார்ப்பது" , நாடுபார்ப்பது என்னலாம்.

தமிழ் மன்னர்கள் தருவதும் பார்ப்பதுமாக அரசவையில் இருந்தனர்.  ஆகவே அது "தருபார்"  ஆனது.

இதை மற்ற மன்னர்களும் அம் முதனிலைச் சொற்களால் சுட்டினர்.

நாளடைவில் தருபார்  ( தர்பார்) என்ற கூட்டுச்சொல் உண்டானது.

இதில் வியப்பு ஒன்றுமில்லை.

பகவொட்டு என்ற இடுகையையும் பார்க்கவும்.

உருதுச்சொற்கள்:   இத்தகைய தமிழ் வழக்குகள் பலவற்றால் உந்தப்பட்ட சொற்களைக் கைக்கொண்டன.   உருது தொடர்பாக எழுதிய இடுகைகளைப் பார்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

மாதமும் மாசமும்.

 தகரம்  (  அதாவது த என்ற எழுத்து)  பலவிடங்களில் சகரம்  (  ச  எழுத்து) என்று மாறிவிடுவது இயல்பு  என்று  நாம் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.   புலவர்கள் என்போர் அரசு அமைக்கும் இடத்தில் விருந்தினராகத் தங்கிக்கொண்டு,  கவிகள் இயற்றி  அரசவையிற்   சென்று பாடும் ஏற்பாடுதான்   சங்கம்.   இது ஒரு திரிபுச் சொல். இதன் மூலம் தங்கு என்பது.   தங்கு -  சங்கு,  சங்கம் என்றானது இச்சொல். அரசன் "புலவர்களை நாளை பார்க்கிறேன்"   என்றால் நாளைதான் சங்கம்.  அதைத் தீர்மானிபவன் அரசன்.  இதுபோலும் ஏற்பாடுகள் எங்கும் நடக்கலாம்.  அவையெல்லாம் ஏன் சங்கம் என்று பெயர் பெறவில்லை?

இந்தச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்கள் கூட்டங்கள்  பிறவற்றை அவ்வாறு அழைக்கவில்லை.  நீங்களும்தாம்.

சங்கம் என்று பிறரால் அறியப்பட்ட  கட்டடங்கள் எவையும் இல்லை.  அரசவை ( அதுகூடி இலக்கியம் ஆயும்போது ) சங்கம்.  எல்லாவற்றுக்கும் அரசிறைவனே தனிநடுநாயகம்.

இத்தகைய த > ச திரிபு  மொழியிற் பரவாலாத் தோன்றும் ஒன்றாகும்.  மாதம் என்ற சொல் மாசம் என்று வருவதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.   தனிச்சிறப்பு உடைய சனிக்கிரகம் அல்லது கோள்,  தனி > சனி என்று  திரிந்ததும் அதுவாம்.

சகர முதற்சொற்கள் பலவும் முற்றடைவுகள்.  த என்று தொடங்கும் பல தொட்டமைவுகள். பண்டைத் தமிழில் தொடுதல் என்பது தொடங்குதல் என்றும் பொருள் தரு சொல்.  பலர் மறந்திருக்கலாம்.

அவள் மாசமாய் இருக்கிறாள் என்ற இடக்கரடக்கலையும் கவனிக்க.  இதற்கு மாதம் என்ற சொல்வடிவைப் பயன்படுத்துவதில்லை,

அறிக மகிழ்க

பின் செப்பம் செய்வோம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

தான்சானிய வானூர்தி விபத்து.

 பறவூர்தி ஏறுபய   ணிகளே அந்தோ

புறவேரிக்குள் நடந்து  நீந்திச் சென்று

பெறுகாப்பு  வெகுசிறப்பு  உறுதுன்  பங்கள்

கருதுமுனம் நடந்தத(ம்)மா கடந்த  தம்மா!


தான்சானி யாமக்கள் துயரம் தன்னைத்

தாமுணர்ந்த பெருமக்கள் கண்கள் நீரில்!

யானெனது கண்ணீரைச் செலுத்து  கின்றேன்

யாவரையும் எம்மிறைவன் காக்க வேண்டும்.


இறங்குதுறை சேராமல் ஏரிக்  குள்ளே

கறங்கிவீழ் வானூர்தி கவலை சேர்க்கும்

நொறுங்குவிபத் துக்களினி நடவா வண்ணம்

திறம்செறிந்த நலம்காக்க இறைவா நீயே.


பறவூர்தி  -  வானூர்தி

புறவேரி   -  பக்கத்து ஏரி

இறங்குதுறை -  வானூர்திநிலையம்

முனம் -  முன்னம்,  முன்னர்.


நீங்கள் ஆக்குதிரைக்குள்   [[compose mode ]    தவறி நுழைந்துவிட்டால்

எதையும் மாற்றாமல் வெறியேறிவிடுங்கள். அதற்கு

எங்கள் நன்றி.