By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 23 அக்டோபர், 2022
தீபாவளி வாழ்த்துகள்.
சனி, 22 அக்டோபர், 2022
சமுகம்
சமுகம் என்ற சொல், அதன் அமைபு பற்றி , இருவேறு வகைகளில் விளக்கப்பட்ட சொல் ஆகும். நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிற அமைபுகளும் எடுத்துக்காட்டப்படுதல் உண்டு. ( அமைபு என்ற சொல்லுக்குத் தானே அமைதல் என்று பொருள் கொள்ளவேண்டும். " தமிழ் அமைபு" என்றால் தமிழ் தான் அமைந்த விதம் என்று பொருள். அமைப்பு என்பது வேறு சொல், வினைப்பகுதி ஒன்றாயினும்.)
சம் என்பது தம் என்பதன் திரிபு. தனிச்சிறப்புகள் பல உள்ள சனி என்ற கோளின் பெயரும் இவ்வாறே தனி என்பதனின்று திரிந்ததே. கோள் அல்லது கிரகங்களிலே சனி மட்டுமே ஈசுவரப் பட்டம் பெற்றதென்று கூறப்படுதல் காண்க. இதற்கு இறைமைப் பண்புகள் உள என்று இதன் பொருள்.
சமுகம் என்பதே சொல். சமூகம் அன்று என்று ஆசிரியர்கள் சொல்வர்.
மனிதர்கள் பெரும்பாலும் தாம் பிறந்து வளர்ந்த கூட்டத்தைத் தாம் விரும்பிச் சேர்ந்திருப்பர். சிறு கூட்டமாயினும் பல கூட்டங்கள் கொண்ட மாநிலம் ஆயினும் ஒரு நாடாயினும் தம் கூட்டத்தையே தாம் உகப்பது மனித இயல்பு. விலங்குகள் இயல்பும் இஃதே ஆகும். தம் + உகம் > சம் + உகம் > சமுகம் ஆயிற்று. இஃது ஒரு தமிழ்த் திரிபுச் சொல். இது தமிழ்ப் பேச்சு வழக்கிலிருந்து வேறு மொழிகட்கும் சென்றேறிய சொல்.
தமிழே மூலமொழி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
ஞாயிறு, 16 அக்டோபர், 2022
யாப்பியல்: மூன்றசைகளா நான்கா?
யாப்பியலில்:
கவிதையை எழுதும்போது அசை, சீர், தளை, தொடை என்பவெல்லாம் பார்த்து எழுதுவது தமிழ்ப்பாவலர்களின் செயல்பாடு ஆகும். புதுக்கவிதைகளில் இவை எல்லாம் இல்லை ஆகையால், இத்தகைய கவிதைகளை எழுதுவோர்க்குத் தொல்லைகள் குறைவு.
" எந்த இடத்திலும் தேடுவானே தேடியது
கிட்டும் வரைக்கும்"
என்ற கவிதை வரியில்,
தேடுவானே என்பது தேடு- வானே என்று சற்றுப் பிரிந்தொலிக்கிறது. இதைத் தற்கால முறையில், தே- டுவா- னே என்று (நாலசைகளாக இல்லாமல்) மூன்றே அசைகளாகப் பிரித்து அலகிடலாம். அது நன்றாக இல்லை; காரணம், டு-வா என்று ஈரசைகளாகக் கொள்வதே ஒலியமைப்புக்கு ஏற்றதாகும். இது இயல்பாகும். இந்த வரிகளின் ஓட்டத்துக்கு அஃதே பொருத்தமாகிறது.
தேடு-வானே ( தே-டு வா-னே ) என்று நாலசைகளாயின, வெண்பாவுக்கு ஒக்குமோ வெனின், வெண்பாவில் நாசைச்சீர்களும் வரும் என்று பண்டித வேங்கடசாமி நாட்டார் முதலிய யாப்பியலறிஞர்கள் கூறுகின்றனர். அஃது உண்மையுமாகும்.
ஆகவே தேடு-வானே என்று பிரிந்தொலிக்கும் நாலசைச் சீர் என்று முடித்து வெண்பாவில் நாலசைச் சீரும் வரும் என்று கொள்வது சரியென்று முடிக்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்