புதன், 31 ஆகஸ்ட், 2022

கோயில் ( தமிழ்), கொய்ல் ( மலாய்). தமிழ்ச்சொல்.

 கோயில், கோவில் என்பன தமிழில் வழங்கும் சொற்கள்.  கொய்ல் என்பது நம் சைவ வைணவத் தொழுகை இடங்களுக்கு மலாய் மொழியில் வழங்கும் பெயர். 

கோ என்றால் அரசன்.  இல்     என்பது   இடம், வீடு என்றெல்லாம் பொருள்தரும் சொல்.  முன் காலத்தில் அரசர்களே கோயில்களைக் கட்டினார்கள்.  அதனால் இவ்விடங்கட்குக் கோயில் என்று பெயர்  உண்டாயிற்று.

முன் காலத்தில் மலாய் மக்களும் இந்துக்களாகவே இருந்தனர்..  ஆகையால் அவர்களுக்கு இந்தச் சொல் சொந்தமில்லை என்று உடனே சொல்லிவிட முடியாது.   ஆய்வு செய்யவேண்டியது கடன்.  ,ஆனால் கோ, இல் என்ற சொற்கள் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.  போலினிசிய நாகரிகமும் நீண்ட காலம் தொடர்ந்துவரும் நாகரிகம்தான்.   

 போலினிசிய மொழிக்குடும்பத்தில்   (Keiki ) கெய்க்கி என்ற சொல் இளவரசனைக் குறிக்கிறது. இது ஒலியில்  கோ (அரசன் ) என்பதற்கு நெருக்கமான சொல் என்று கொண்டாலும்,   "கோ"  என்பதற்குச் சற்று தொலைவிலிருப்பது என்றே கூறவேண்டும்..  அரசி என்பதற்கு மோ ஈ என்பர்.

இந்தோனீசிய மொழியிலும் மலாய் மொழியிலும்  ராஜா என்பதே அரசனைக் குறிக்கும்.   ராஜா என்றும்  ர>>>ஜா என்று ரகரத்தை இழுத்தும்  (இந்தோனீசிய மொழியிலும் )  சொல்லப்படும்.  போலினிசியத்தில் கோ என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

              

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நீரைச் சேமிக்கும் வழிகள்

 சொட்டுச்சொட்  டென்றுகுழாய் வடிக்கும் நீரை

பட்டுப்போல்  பாத்திரத்தில் சேர்த்து வைப்பாய்!

கொட்டுமழை நீரெனினும்  அதிலே கொஞ்சம்

குடிதழைக்கக் குடிநீரை ஆக்கிக் கொள்வாய்

மட்டகலத்  துயர்செறியும் உலகின் மக்கள்

மறைவாக வடிக்கின்ற கண்ணீர் ஏனோ/

குட்டைகுளம் வயமுள்ள துளிகள் வற்றிக்

குடிநீரோ இல்லாமற்  போயிற்  றென்றே.


முட்டையென விழிபிதுங்கி மக்கள் நின்றார்

மூலைமுடுக் கெங்கிலுமே  ஓலம் ஓலம்.

கட்டையாகி விடுமோஇவ்  வழகு மேனி,

கத்தும்குரல்  இவ்வாறே காதில் கேட்கும்,

வட்டவட்ட மாய்ச்சுழலும் வாட்டம் வேண்டாம்,

வந்திடுவீர் நீர்ச்சேமிப் பறிந்து வாழ்வோம்,

சொட்டனைத்தும் சேமிப்பீர் சோரும் சோகம்

சூழலிலாச் சொகுசியன்ற உலகைக் காண்போம்.


நீர் தேக்கும் வழிகாண்பீர்

மெய்ப்பு பின்னர்.

  

பிரான்ஸ் சுற்றுலா

 நம்  வலைத்தள அன்பர்கள் திருவாளர்கள் ரூபன் சாருகா இருவரும் ஒரு திருமணத்திற்காக பிரான்ஸ் நாட்டுக்குச்  சென்றிருந்தனர்.  அத்திருமணம் ஒரு மாதாகோயிலில் நடைபெற்றது. பிரான்சிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.சுற்றுலாவிலும் உலக நோக்கும் புவியியல் அறிவும் வளரும் வாய்ப்பு உள்ளன. இந்தப் படங்களில் நம் அன்பர்களைக் காணலாம்.







வெண்பா

பற்றில்லார் இவ்வுலகில் என்றால் படுத்துறங்கி
எற்றுக்கென் றீர்ப்பிலார் ; நன்றேநாம்  ----- சுற்றுலாச்
சென்றிடங்கள் கண்டு மகிழ்தல்;   செலவினால்
வென்றிட வேண்டும்  அறிவு.

செலவு -  பயணம் செல்லுதல்
சுற்றுலா - பயணம்.
பற்று -  உலக  மேல் உள்ள பற்று.
எற்றுக்கு - எதற்கு
ஈர்ப்பு  -  உலகின்மேல் உள்ள ஆசையினால் உந்தப்படுதல்.

மகிழ்வீர்.
மெய்ப்பு : பின்பு.