புதன், 25 மே, 2022

காட்டம் - சொல்லின் வினை எது?

அவர் காட்டமாகப் பேசினதால் சுற்றி  இருந்தவர்கள்  ஆடிப்போய்விட்டார்கள்  என்று பேச்சுவழக்கில் வருவது காண்கிறோம்.  சுற்றியிருந்தவர்கள் ஆடிப்போனதால் பேசியவர் மந்திரிபோன்றவராக இருந்திருக்க வேண்டும்.  இதைப் பற்றிக்  கவலைப்படாதீர்கள். காட்டம் என்ற சொல்லைத்தான் நாம் எடுத்துக்கொண்டுள்ளோம்.

நீங்கள் நினைப்பதென்ன?  காட்டம் என்பது  காட்டுவிலங்கு என்பதில் உள்ள காடு என்ற சொல்லோடு தொடர்புடையது என்பதா?  அதை உங்களுடன் யாமும் இணைந்து இப்போது ஆய்வு செய்ய  முனைவோமாக. 

கடுமை என்ற சொல்லே காட்டம் என்பதனுடன் உறவுகூறப் பொருத்தமான சொல். கடுத்தல் என்ற வினையும் இச்சொல்லுக்குப்  பொருட்பகிர்வு உடையதேயாகும். 

கஷ்டம் என்ற சொல்  அன்றாட வழக்கிலுள்ள தென்றாலும்,  காஷ்டம் என்பதை அண்மையில் கேள்விப்பட்டு ஆனந்திக்க இயலவில்லை.

காட்டம் என்பதற்குரிய பொருளாவன:

விறகு;

நாவிற்கு அல்லது மோந்துபார்க்க ( முகர்தல்) ,  கடுமையானதாய் இருத்தல்

வெண்கலப் பொருள்

கோபம். மிகுதி.

இவையே அறியப்பட்டுள்ளன.


விறகு என்பது கடிய பொருள்.  வெண்கலமும் கடியது.   கோபம் ஒன்றே மனவுணர்ச்சியைக் குறிப்பது  இந்தப் பொருளில் இது வழக்குவிரிவான சொல்.

காஷ்டம் என்ற சொல்லும் விறகுகட்டையைக் குறிக்க உதவும்.


கடு அடிச்சொல்.

கடு+ அம் - காட்டம் ( முதனிலை நீண்டு திரிபுறுதல் ).


இதுபோல் திரிந்த இன்னொரு சொல் தோட்டம் என்பது.

தொடு(தல்) வினைச்சொல்.

தொடுதல்:  பொருள்  தோண்டுதல்.  ( தொட்டனைத் தூறும் மணற்கேணி , குறள்.  தோண்டியவுடன் நீர் ஊறும்.....)

தொடு + அம் >  தோட்டம்.   ஒருவன் தோண்டி நட்ட செடிகொடிகள் மரம் உள்ள நிலம்).

ஆகவே ஒப்பாய்வில் புரிந்துகொள்ளுங்கள்.

காட்டம் என்பதற்குரிய வினைச்சொல் என்ன என்பது இப்போது நேரடியாகச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்.


--------

இவற்றை ஆய்வில் ஈடுபடுத்துங்கள்:

ஆனந்தித்தல்.

தொடர்புடையவை:  பிரம்மானந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_10.html

ஆனந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_10.html

விகாரம் https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_25.html

திங்கள், 23 மே, 2022

மாதா கெஞ்சுசொல், கொஞ்சுசொல்.

 மாதா  என்ற சொல்லை முன்பு விளக்கியுள்ளோம்.

அதில் ஒன்றை ஈண்டுக் காண்க. 

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_14.html

அம்மா என்பதில்  மா என்பதும்  தாய் என்பதன் தலையெழுத்தும் இணங்கி அம்மாவுக்கு இன்னொரு சொல் அமைந்திருப்பது முற்றிலும் பொருத்தமே.

நாம் உலக அம்மாவாகிய அம்மனிடம் அல்லது நம் பெற்றதாயிடமே இவ்வாறு சொல்லடுக்குகள் செய்து, வருணனை மேற்கொண்டு கெஞ்சுவோம். இல்லாவிட்டால் ஒருவகையில் அதைக் கூறியதுகூறலான சொல் என்று தாழ்த்திவிடலாம். 

அம்மா!+  தாயே!  கடைக்கண் பாரம்மா,  எனது இன்னல் தவிர எனை ஆட்கொள்வாய்  என்று பாடி வேண்டுவது  அம்மனிடம்தான்.

கடவுள் என்பது பால்பாகுபாடு அற்று இயல்வதொன்று.  எனினும் உலகைப் பிறப்பித்தமையினாலும்,  பிறப்பித்தலென்பது  அம்மாவின் அன்பு என்பதனாலும்,  உலகை உண்டாக்கியது இவ்வன்பு போன்றது என்பதனாலும் ஒப்புமையால் உவமைத்தன்மையால் உலகப்   படைப்பருளுடையது இவ்வாறு குறிக்கப்பெறுகிறது.

இவ்வாறு கெஞ்சுதன்மையால் உண்டான சொல்  மாதா என்பது.

சங்கதம் கடவுட்புகழுரை மொழியாதலின்,  சொல் மொழிக்கு ஒத்துவருகிறது.

கெஞ்சுமொழியிலும் கொஞ்சுமொழியிலும் கூறியதுகூறல் இயல்பு.

இதை "மீமிசைப் பகவொட்டு"  என்பர்.  A repetitive portmanteau.

தமிழருள் சொல் விளையாட்டில் ஈடுபட்ட மொழியறிஞர்,  இதுபோல் சொற்களைப் படைத்துப் பேசிக்கொண்டு மகிழ்வாயிருந்தனர் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். ஒருவர் மொழியறிஞரா அல்லரா என்பதற்கு  விளம்பரம் ஒரு காரணமாகாது என்பதையும் உணர்க.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

பவானி என்ற பெயர். மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 பவனி என்பது ஓர் அழகிய சொல்.  தமிழில் இச்சொல்லும் வழங்குகிறது.  ஊர்கோலம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இது ஊர்வலம் என்றும் வழங்கும். ஊரைக் கோலி வருவது ஊர்கோலம்.  கோலிவருதல் என்பது இப்போது அவ்வளவாக வழக்கில் இல்லை. பாட்டிமார் காலத்தில் பெரிதும் அறியப்பட்ட சொல் அது. இன்று முதியவர்களாகிவிட்ட சிலர்,  அவர்கள் பாட்டிகாலத்துச் சொல் என்று இதைக் குறிக்கிறார்கள்.

முதலில் பவனி என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்:

பவனி ஒரு தாக்கத்தை .....இடுகைத் தலைப்பு



ஊர்வலம் என்பது ஊரை  வலமாகச் சுற்றிவருவது என்போர் ஊர்கோலம் என்பதை ஊர்வலம் என்பதன் திரிபு என்றும் கருதுகிறார்கள்.

இச்சொற்கள் பல ஆண்டுகட்கு முன்னரே வழக்குடையன ஆகிவிட்டபடியால், ஆய்வின் மூலமே இதை முடிவுசெய்தல் வேண்டும். இது நிற்க:

பவானி என்பதும் அழகிய சொல்லே.

பவானிக்கும் பவனிக்கும் பரவுதற் கருத்தே ஒரு பொதுமையைத் தருகிறது.  அந்தப் பொதுமை .வேறன்று.

பவானி அம்மனுக்கு இன்னொரு பெயர்.  பாவானி எங்குமுள்ளதாகிய தெய்வத்தின் பெயர்.

பரவலாகச் சுற்றிவருவது  பரவு அணி,  இதில்  ரகரம் இடைக்குறையாகி, பவ அணியாகி,  பவ அனியாகி, பவஅனி > பவனி   ஆனது. 

அணி என்பது அண்மி ( அடுத்தடுத்து)  நிற்றல்.

அண்> அணி.   

நாம் அன்புகொள்ளும்போது, அடுத்துச்செல்கிறோம்.

அண்<> அன்    

அடுத்தலில் உடலால் அடுத்தல், மனத்தால் அடுத்தல் என்று இரண்டும் அடங்கும்.

அன்> அனை> அனைவர் என்று மக்களைக் கூட்டிச் சொல்கையிலும் அனைத்து என்று பொருளைக் கூட்டிச் சொல்வதிலும் இந்தக் கருத்து மறைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்க.   

பவ + அன் + இ >  பவ ஆன் இ >  பவானி.

எங்கும் பரவி இருப்பவளும் அம்மை; நம்மை அடுத்திருப்பவளும் நம் அம்மை.

இதனோடு கடவுள் என்பதை ஒப்பிடுக:

யாவையும் கடந்து நிற்பதும் கடவுள். யாவினும் உள்ளிருப்பதும் கடவுள்.

அன் >  அன்பு.   அன்>  அனி   என்றாலும் அடுத்தல் கருத்து வரும்.

ஒரு நூலாகவும் எழுதலாம்.  இடுகைகள் சுருக்கமாக இருத்தலே நன்று.

இன்னொருகால் இங்குச் சொல்லாமல் விட்டவற்றைச் சற்று விரிப்போம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.