சனி, 9 ஏப்ரல், 2022

அமைதி, பருத்தி, உறுதி. விருத்தம்,

 பருத்தி  அமைதி. உறுதி  

சொற்கள் சிலவற்றில்  புணர்ச்சியிற் போல வலிமிகுந்து வருவதைக் காணலாம். சிலவற்றில் வலிமிகுவதில்லை.   வலி மிகுதல் என்றால் வல்லலெழுத்து மிகுந்து வருதல். 

பஞ்சு விளையும்போது,  அதிக இடத்தைக் எடுத்துக்கொள்ளுதல் "போல" ( பஞ்சு) பருத்து விரிந்து பறக்கத் தொடங்கிவிடுகிறது.  பருத்து விரிந்து பறத்தலினால்  அது பரு+ தி > பருத்தி என்று பெயர் பெற்றது. ஆனால் ஒரு தலையணை உறை போலும் சிறிய இடத்திற்குள் அதை அடக்கிவிடமுடியும். அது பின்னர் அடக்கப்படுவது, கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.   ஆகவே பெயரமைப்பில் கவனிக்கப்படா  தொழிந்தது.

இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைந்தது யாதெனில்,  இச்சொல் இப்போது  "பருதி"  என்று  வழங்கவில்லை. இன்றுகாறும் இச்சொல் "பருத்தி" என்றே உள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல் பருதி என்று வழங்கி,   பரிதியைக் குறித்தபடியினால் , இச்சொல்  பருதி என்ற முற்பட அமைந்து பின்னர் ருகரம் ரிகரமாகி பரிதி என்று மாறி,  சூரியனைக் குறித்ததென்பது தெளிவு   ஆகும்.  இதில் நாம் கூறுவது, இச்சொல் பரிதி என்றான போதும்  வலிமிகவில்லை. பருதி என்றிருந்த  போதும் வலிமிக்கு வரவில்லை என்று உணர்க.

பருந்தலை  ( பருத்ததலை)  என்ற சொல்லில் ஒலி மெலிந்துள்ளது. மெலிந்து தலையின் பருமை குறிக்கிறது.  பருத்தலை என்று வருவதில்லை. பருத்த உடலுள்ள பறவை,  பருந்து ஆயிற்று. ஒலி மிகவில்லை.

பரிதி என்பதிலும் வலி மிகவில்லை.  ( பரித்தி அன்று).

அமைதி  என்பது அமைத்தி என்றாவதில்லை;  உறுதி உறுத்தி ஆவது இல்லை

சொல்லமைப்பு  மிக்கக் கவனமுடன் செய்யப்பட்டுத்   தமிழ்மொழியில் வந்துள்ளது என்பது இவற்றை நோக்குவார்க்குப் புலனாகும்.

விரித்தல் என்ற சொல்லுடன் தொடர்புடையதே விருத்தம் என்ற விருத்தப்பாவின் பெயர்.  விரித்தம் என்று அமைந்து பின் விருத்தம் ஆயிற்று என்க.  அகரம் இகரமாகும்.  அது பரிதி> < பருதி என்பதில் தெரிந்திருக்கவேண்டுமே.    மொழி முதலிலும் இஃது வரும்.  இதழ் -  அதழ் என்பதிலும் காண்க. விருத்தி என்பதும் அது.

You may ask us to explain  if it is difficult to understand.  Pl enter up your comment.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அடுத்தநகர் செல்ல ஆலோசனை.

 என்னாகும்  ஏதாகும்  என்கின்ற  கவலை 

இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற  தாலே

பின்னாளில் நோய்வந்தால்  என்பட்டு  விழுவோம்

எனுஞ்சிந்த  னைவந்து  எழுந்திட்ட  தாலே

முன்போகும் வீரர்கள் போகட்டும் திரும்பி

முன்வந்து  சொன்னால்பின் எழுவோமே  செல்வோம்

என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,

இருப்பேனே  என்றிங்கே இருந்தோரே பல்லோர்.


உரை:  

என்னாகும்  ஏதாகும்  என்கின்ற  கவலை  ---  என்ன ஆகுமோ, எதிர்பாராதது எதுவும் நடந்துவிடுமோ என்ற மனக்கவற்சி

இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற  தாலே--- சிங்கையில் வாழ்நருக்கு ஏற்பட்டுவிட்ட தால்;

பின்னாளில் நோய்வந்தால்  என்பட்டு  விழுவோம்  --  இனிவரும் நாளில் நோய் வந்துவிட்டால் என்ன ஏற்பட்டு  நாம் போவோம் 

எனுஞ்சிந்த  னைவந்து  எழுந்திட்ட  தாலே ----  என்ற எண்ணம் வந்துவிட்டதாலும், 

முன்போகும் வீரர்கள் போகட்டும்---நமக்கு முன் போவோர்    செல்லட்டும்,


முன்வந்து  சொன்னால்பின் எழுவோமே  செல்வோம்  ------செய்திகளை முதலில் தெரிந்துகொள்வோம்   அப்புறம் போகலாம்,

என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,--- எனக்குப் புது இடைஞ்சல்கள் வேண்டாம்; 

இருப்பேனே  என்றிங்கே இருந்தோரே பல்லோர்--- நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்  இங்கு பலர் இருக்கிறார்கள்@  என்றபடி.

இருப்பேனே -  போகாதவர்  ஒவ்வொருவரும் சொல்வது

அடுத்த நகருக்குச் செல்லும் வழிகள் திறந்துள்ளன என்றார்க்கு, இப்போது அவசரமில்லை என்று கூறியது.

"ஒருகுரன்மை' ஏற்பட்டுவிடாமல் இருக்க,  அசைகள் வேறுபட வந்தன:  எ-டு:

தாலே - விழுவோம்,  கவலை - தாலே,  திரும்பி -  செல்வோம், என.

ஒருகுரன்மை  = monotony. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

@இச்சொல் திருத்தப்பட்டது

வியாழன், 7 ஏப்ரல், 2022

நகரில், ஒவ்வொரு ஆவின் தயிரையும் சுவைக்கலாமே!

 

வீட்டின்பின் கொட்டகை விதத்துக்கு நாலாகக்

கன்றுடன் ஆக்கள் நின்றால்

காட்டிடும் போதினில் வாய்த்திட்ட பெருமிதத்தை

கணக்கிடல் ஆவ தாமோ  1


ஒவ்வொரு தாய்ப்பசுவும் பால்தயிர் வெண்ணெயென்று

தரத்தர உண்டு மகிழ்வோம்,

ஒவ்வொரு ஆதந்த ஒவ்வொரு தயிருக்கும்

சுவையெனில் தனிச்சு வைதான்!   2


இந்நாளில் எங்குபோய் ஆவினை வளர்ப்பது.

இஃதொரு பெரிய நகரே,

பொன்னான தயிர்தன்னை ப் பல்கடைத் தொகுதியில்

போய்வாங்கி அருந்தத் தரமே. 3


ஒவ்வொரு குழும்பினரும் உருவாக்கி வெளியாக்கும்

ஒவ்வொரு தயிர் அடைப்பாவும்

வெவ்வேறு நம்மாடு என்றெண்ணி உண்டுவிடில்

மாடின்மை வருத்தாமை காண். 4



ஆக்கள் - பசுக்கள்

ஆவதாமோ  - இயலாது

குழும்பினர்  ( கம்பெனியார்)

பல்கடைத்தொகுதி ---  "ஸுப்பர்மார்க்கட்"

அருந்தத்தரம்-   அருந்த இயல்வதே

அடைப்பா -  டப்பா  (  அடைத்து வைக்கும் சிறு பாத்திரம் )

மாடின்மை  --  வீட்டில் கொட்டகையில் மாடு இல்லாமல் வாழ்தல்

பொன்னான தயிர் -  விரும்பப் படும் தயிர்.


தொடர்புடைய  இடுகைகள்:

டப்பா டப்பி

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_43.html

இது ஒரு பல்பிறப்பிச் சொல்:

அடைப்பி   >  டப்பி எனினுமாம் (  அடப்பி  > டப்பி )

தடு >  தடுக்கர், இது இடைக்குறைந்து  "தக்கர்"/

தடுக்கை >  இது இடைக்குறைந்து  :  தக்கை

இறைவனின் பெயரான அரங்கன் என்பது ரங்கன் என்று மாறிற்று.

அறு + அம் + பு + அம் = அறம்பம் > றம்பம் > ரம்பம் என்று  திரிந்தது.

இறுதி அம் விகுதி.   இதர இடைநிலைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.