என்னாகும் ஏதாகும் என்கின்ற கவலை
இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற தாலே
பின்னாளில் நோய்வந்தால் என்பட்டு விழுவோம்
எனுஞ்சிந்த னைவந்து எழுந்திட்ட தாலே
முன்போகும் வீரர்கள் போகட்டும் திரும்பி
முன்வந்து சொன்னால்பின் எழுவோமே செல்வோம்
என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,
இருப்பேனே என்றிங்கே இருந்தோரே பல்லோர்.
உரை:
என்னாகும் ஏதாகும் என்கின்ற கவலை --- என்ன ஆகுமோ, எதிர்பாராதது எதுவும் நடந்துவிடுமோ என்ற மனக்கவற்சி
இருக்கின்ற சிங்கையர்க் கிருக்கின்ற தாலே--- சிங்கையில் வாழ்நருக்கு ஏற்பட்டுவிட்ட தால்;
பின்னாளில் நோய்வந்தால் என்பட்டு விழுவோம் -- இனிவரும் நாளில் நோய் வந்துவிட்டால் என்ன ஏற்பட்டு நாம் போவோம்
எனுஞ்சிந்த னைவந்து எழுந்திட்ட தாலே ---- என்ற எண்ணம் வந்துவிட்டதாலும்,
முன்போகும் வீரர்கள் போகட்டும்---நமக்கு முன் போவோர் செல்லட்டும்,
முன்வந்து சொன்னால்பின் எழுவோமே செல்வோம் ------செய்திகளை முதலில் தெரிந்துகொள்வோம் அப்புறம் போகலாம்,
என்பாலும் புதிதாக யாதொன்றும் வேண்டாம்,--- எனக்குப் புது இடைஞ்சல்கள் வேண்டாம்;
இருப்பேனே என்றிங்கே இருந்தோரே பல்லோர்--- நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் இங்கு பலர் இருக்கிறார்கள்@ என்றபடி.
இருப்பேனே - போகாதவர் ஒவ்வொருவரும் சொல்வது
அடுத்த நகருக்குச் செல்லும் வழிகள் திறந்துள்ளன என்றார்க்கு, இப்போது அவசரமில்லை என்று கூறியது.
"ஒருகுரன்மை' ஏற்பட்டுவிடாமல் இருக்க, அசைகள் வேறுபட வந்தன: எ-டு:
தாலே - விழுவோம், கவலை - தாலே, திரும்பி - செல்வோம், என.
ஒருகுரன்மை = monotony.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
@இச்சொல் திருத்தப்பட்டது