ஆலாபனம் என்னும் சொல்லை அணுகி அறிவோம்.
பண்டைத் தமிழ் என்பது முத்தமிழாக இருந்தது. இவை, இயல், இசை மற்றும் கூத்து அல்லது நாடகம் என்பன.
இக்காலங்களில் படுத்துக்கொண்டும் சிலர் ஆடுகின்றனர். மேடையில் படுத்துக்கொண்டு ஆடினால், பார்க்கத் திரண்டவர்கள் அதனைக் கண்டு களிப்பதென்பது சற்றுக் கடினமாகிவிடும்.பெரும்பாலும் நின்றுகொண்டுதான் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஆகவே நட்டு நின்றுதான் தொடங்கி, அதன்பின் அங்குமிங்கும் அசைந்து ஆடுதல் எளிது. நடு> நட்டு; நடு> நடி. நடு > நட என்பன உன்னுக. படுத்துக்கொண்டும் இருந்துகொண்டும் அசைவுகளை உண்டாக்கி நடனம் செய்தலும் கூடுமெனினும் அது பெரும்பான்மையன்று. சொல்லாக்கத்தில் கவனிக்கப்படுவது நின்றசைதலே.
எனவே, நடு > நடம்; நடி என்று சொற்கள் அமைந்தன.
நடனம் என்பதை, நடி + அன் + அம் > நடனம் என்று காட்டுவது சரிதான். மனிதனுக்கு நடு என்பதிலிருந்து நட என்பதை அறியச் சிறிது காலம் கடந்தது. நட என்பதிலிருந்து நடி என்பது சொல்லிலும் செயலிலும் தோன்றச் சிறிது காலம் சென்றது. மனித இனம் கண்டறிந்து செய்த இவற்றை இன்று நாம் ஒரு குழந்தயைக் கவனிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை தவழ்ந்து, பின் எழுந்து நின்று பட்டறிவின்மையால் விழுந்து எழுந்து நட்டு நின்று மெல்லவே நடக்கிறது. பின்னாளில் ஆடுவோரைக் கண்டு அதுவும் ஆடத் தொடங்கிவிடுகிறது.
நடனம் என்பதை நடு என்ற மூலத்திலிருந்தே காட்டினால் அதனால் உண்டான ஒரு முரண் இன்மை காண்பீராக. நடு என்பதே நடி என்பதற்கும் நட என்பதற்கும் சொல்லுருவாக்கத்தில் அப்பன் பாட்டன் போலாம் என்பதை உணர்க. கிழக்காசியாவில் உள்ளவர்கள், மிகப்பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு மூதாதையைக் குறிக்கும் சொல்லைக் குடிப்பெயராய்ப் போட்டுக்கொள்கிறார்கள். அப்பனின் பிள்ளை என்று குறுகலாக த் தெரிவிக்காமல், ஒரு பெரு மூதாதையின் பிள்ளைகள் நாங்கள் என்று சொல்வதற்கொப்பதே அதுவாகும். ஏதும் தவறில்லை; அடையாள விரிவுதான் இது என்று உணரவேண்டும். இதுபோல் நடு> நடி என்று காட்டினாலும் அது அடையாளவிரியே ஆகும். ஆகவே இஃது அடைவிரி உத்தி.
இவற்றை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் தமிழ் முத்தமிழானதால் அது மூத்த தமிழ் என்றும் உணரப்படும். தமிழில் இசைநூல்கள் பல இருந்தன. அவை காப்பாற்றுவாரற்று அழிந்தன. பெரும்பேராசிரியர் சாமிநாதையர் போலும் மொழிக் காவ லறிஞர்கள் முற்காலத்தில் தோன்றாமற் போயினமையே காரணமாகும்.
ஆலாபனம் என்ற சொல் இன்று தமிழிலும் பிற மொழிகளிலும் வழங்குகிறது. இதற்குக் காரணம் இசைப்பயிற்சி விரிந்தமையே ஆகும். அங்கும் தமிழ்வழி வந்த சொற்கள் வழங்குவது நம் நற்பேறு என்போம்.
ஆலாபனம்:
பாடும் இராகத்தின் அகலத்தை அல்லது விரிவினைக் கேட்போருக்குச் சென்று சேர்க்க, தாளம் முதலியன இன்றிப் பாடிக்காட்டுவது ஆலாபனம். இது காரண இடுகுறி. ஏன்? இராகத்திற்காக என்ற பொருள் சொல்லில் மறைவாய் உள்ளது. வழக்கில் அறியப்படுகிறது. அதனால்தான்.
இதில் ஆல் என்பது அகல் என்பதன் திரிபு. இராகத்தின் அகலம் காட்டுவது.
ஆபு என்பது ஆதல் . நிறைவேற்றுதல் . ஆ: வினைச்சொல். பு: தொழிற்பெயர் விகுதி. இச்சொல் தனித்து வழங்கவில்லை. இச்சொல்லில் உள்ளுறுப்பாய் உள்ளதை அறியலாம். ஆ, பு என்று தனித்தனி கொண்டாலும் விளைவு ஒன்றே ஆகும்.
ஆபி என்ற இன்னோர் உள்ளுறுப்புச் சொல்லையும் இன்னொரு கால் கவனிப்போம்.
அன் - சொல்லிடைநிலை.
அம் - விகுதி.
இராகத்தின் விரிவு உணர்த்தும் பாட்டின் பகுதி.
இதனை, ஆல் ஆ பன்னம் > ஆலாபனம் என்று காட்டினால் அஃதே. பன்னுதலாவது மீண்டும் மீண்டும் சொல்லுதல். ( விரிசொற்றல்). பன்னு அம் > பன்னம் > பனம் இடைக்குறை.
பன்னுதல் என்பது: பல் > பன் > பன்னுதல். பலமுறை வெளித்தருதல். இச்சொல் ஆலாபனம் என்பதில் வெளித்தோன்றியதுபோலவே, சொற்பனம் என்பதிலும் தோன்றிற்று. தூங்கும்போது சொல்லைப் பன்னுவதாகும். பின்னர் சொல்லைப் பன்னியவாறு உறங்குதலுக்கும் உறங்குகையில் கனாக் காணுதற்கும் பெயரானது என்பதறிக
மனிதன் தன் மனப்போக்குக்கு ஒப்ப எவ்வாறு திரித்துக்கொண்டாலும் சொல்லிக்கொண்டாலும் உண்மை இதுதான், சொற்பன்னுதல் தான். போந்த வடிவங்கள்: சொற்பன்னம், சொற்பனம், சொப்பனம், சொப்நம், ஸ்வப்நம், வேண்டியாங்கு திரித்துக்கொள்க. அகலாகுபன்னுதலும் அவ்வாறே.
சொல் திரிந்து பொருள் திரியாமை ஒருவகை; சொல் திரிந்து பொருளும் திரிதல் இன்னொரு வகை.
தொகுத்தலையும் குறைச்சொல்லையும் இங்கு குறை ( முக்குறை) என்றே குறிப்போம். இவற்றை வேறுபடுத்துவது இலக்கணத்தில் வேண்டியது. இங்கு வேண்டாதது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
தட்டச்சு பிறழ்வுகள் பின்னர் திருத்தப்பெறும். நீங்கள்
காண்பனவற்றையும் பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.