அகலிகை என்ற பெயரை முன்னர் ஆய்ந்து சொன்னதுண்டு. அது இன்னும் உள்ளது. அதை இங்குக் கண்டுகொள்க.
https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_30.html
இப்போது பத்துமினி என்ற சொல்லினுட் புகுந்து வெளிவருவோம்.
தமிழில் பற்று என்ற மூலச்சொல்லே சிற்றூர் வழக்கில் பத்து என்று திரியும்.
பற்று என்பது மனம் பற்றிக் கொண்டிருப்பது. தீப்பற்றுவது போல, அன்பும் பற்றிக்கொள்கிறது. இது ஓர் ஒப்புமைப் பொருளாக்கமாகும்.
பற்று என்பதற்கு மூலம் பல் என்பதுதான். புல்லுதல் என்பது பொருந்துதல் என்னும் பொருளது, புல் என்பது பல் என்று திரியும். பல் என்பதும் பொருந்துவதையே குறிக்கிறது. பல் என்பது வாய்க்குள் எலும்பு சதை ஆகியவற்றுடன் பொருந்தி இருக்கின்றது. அதனால்தான் அதற்குப் பல் என்று பெயர். பல் என்பதைப் பல தருணங்களில் விளக்கியுள்ளோம். சிலவேனும் பழைய இடுகைகளில் அகப்படும்.
பற்றுதல் என்பதும் இணைந்து பொருந்துதல்தான். பல் + து > பற்று. இங்கு வரும் து என்னும் துண்டு, அது இது என்பதில் வரும் அதே து என்பதுதான். பல் து என்று இணைந்து, வினையும் பெயரும் ஆகும். அப்புறம் ~தல் விகுதி பெற்று பற்றுதல் என்று மாகும். இதே விளக்கம் வேறு தொடர்புடைய சொல்லில் வருமானால், வாசிக்கும்போது தவிர்த்துக்கொண்டு நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்,
றகர தகரத் திரிபிற்கொப்ப, பற்றினி என்பது பத்தினி ஆகும். கணவன்பால் பற்று மாறாதவள்தான் பற்றினி என்னும் பத்தினி. சிற்றூர்வழக்குத் திரிபு.
மரத்தடியில் வழங்கிய சொற்கள்தான் பின் தொகுத்து நன்றாக ஆக்கபட்டு, சமத்கிருதமாயின. பழங்காலத்தில் சாமி கும்பிடும் இடங்கள் மரத்தடிகளாய் இருந்தன. ஆல் என்ற மரத்தின் பெயரடிப் பிறந்த ஆலயம் என்ற சொல்லும் மரத்தடி என்று பொருள்தரும் பழங்காலச் சொல்தான். ஆல்+ அ+ அம் : ஆலமரத்தடியில் அங்கு அமைந்திருக்கும் (கூடுமிடம்) என்பதே அது. தமிழகத்து வழங்கிய இத்தகைய சில சொற்கள் அயல்வழக்குக் கொண்ட காலை, அயலார் அதற்கு ஒரு கதை புனைந்து, அச்சொற்களை மேற்கொண்டதுடன், அவற்றின் தொகுதியை இந்தோ ஐரோப்பியம் என்றனர். அவையாவும் வெறும் புனைவு. இச்சொற்கள் இத்துணைக்கண்டத்தன ஆகும்.
சமத்கிருதத்தில் உள்ள பல சொற்கள் சிற்றூர்களில் வழக்குப்பெற்றவை. பற்றினி என்பது பத்தினி என்றும் வழங்கியது போலவே ஆகும்.
பற்று + உம் + இன் + இ என்றால், அதுவே பற்றுமினி என்றுமாகி, பத்துமினி ஆகி, இடையில் உள்ள து என்ற எழுத்தை நீக்கிவிட, இனிக்குமாறு "பத்மினி" ஆகிவிட்டது.
எல்லாச் சொற்களும் பயன்பாட்டுக்காக உண்டாகினவைதாம். அவற்றின் பெருமை அல்லது மகிமை என்பது, அவற்றின் பயன் கருதியமைதான். ஒலியை உணர்ந்து மகிழ்தலும் உண்டானமையால், ஒலியையும் சுவைத்து, கொண்டாடிக்கொள்ளுங்கள். இசை என்பது ஒலியின் பாற் பட்டதே ஆகும்.
மகிமை என்ற சொல்லும் இங்கு முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையாக நாம் அறிந்து, பின் "பற்றும்" என்று அமைந்து. "பத்தும்" என்று திரித்து, இன் இ என்றோ இனி என்றோ இணைதல் கொண்டபின், சொல்லினுள் ஏற்றுவித்து, பற்று இனி > பத்துமினி என்று வருவிப்பின், அது பத்துமினி> பதுமினி> பத்மினி என்றுமாம். இது மரத்தை இழைத்து தச்சனார் செய்வதுபோலும் செயல்பாடே ஆகும். தச்சனார் நன்றாகச் செய்துவிட்டால், உண்டாக்கிய பொருளை வாங்கிச் சென்றவர், தன் மதிப்பைக் கூட்டிக்கொள்ள, ஐரோப்பாவில் வாங்கிவந்தது என்று சொல்லிக்கொள்ளலாம். உலகம் போலியானது. செய்தவனின் புகழை மறைத்து எங்கோ இருப்பவனிடம்கூட அதனைக் கொண்டு சேர்க்கிறது. இங்குக் காட்டிய எல்லா வடிவங்களும் தமிழின்றேல் இல்லையாம் . என்றுமுளது தென்றமிழ்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
தட்டச்சுப் பிறழ்வுகள் காண்புறுமாயின், பின்னூட்டம் செய்க.