ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நோய்த்தொற்றில் எடை கூடுதல்

நம் அன்பருக்கு உடலெடை கூடி முதுகு வலி வந்துவிட்டது. தொற்றுப் பரவலால் வெளியில் ஒன்றும் செய்ய இயலவில்லை. உங்கள்

ஆலோசனையை வழங்குங்கள் 


இக்கவிதை நடமாட்டக் குறைவினால் ஏற்படும் விளைவுகளை

முன்வைக்கின்றது.


 மகுடமுகி உலவுதொற்றில் மனையைப் பூட்டி

மக்கள்தொடர் பேதுமின்றி உட்கி டந்தேன்.

வெகுநலமே தந்திடுவீட்  டுணவி   னாலே

வீக்கமொத்த சதைபோட்டு உடல்க   னத்து

தகுபயிற்சி  ஒன்றுமின்றித் தவிக்கின் றேனே

தசைகொழுப்பு தணிபதற்கோ வசமி  ழந்தேன்

நகுபகடி செய்திடாது கருத்தை என்பால்

நல்லபடி  சொல்லிடுவீர் இல்லம் வெல்க!


உடலெடை குன்றவே  உண்டோ  மருந்து

படுகின்ற  என்புவலி  ஏறித்    -----  தொடர்ந்திடவே

யான்துன்பம்  கொண்டேனே  என்னதான் செய்வது

தான்தன்னில் தீராத  நோய்.


நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள். பின்னூட்டம் செய்யுங்கள்


பொருள்:  மகுடமுகி ---  கொரனா வைரஸ்.  

உட்கிடந்தேன் -  உள்ளே இருந்தேன்.

வீட்டுணவு -  வீட்டில் சமைத்துத் தரும் உணவு.   

கனத்து - எடை கூடி

வசமிழந்தேன் -  வழியில்லாமல் போய்விட்டேன் 

 நகுபகடி -  சிரித்துக் கேலி கிண்டல் (செய்யாமல். )

 என்பு - எலும்பு.  தான் தன்னில் - தானாகவே



நம் நேயருக்கு முதுகுவலி
எடை கூடிவிட்டது.
கொரனாவால் வீட்டைவிட்டு  வெளிப்பயிற்சிகள் செய்ய
இயலவில்லை.

மெய்ப்பு: 14022022

சனி, 12 பிப்ரவரி, 2022

கருத்துத் திருடர்கள்

 சிலர் மொழியாய்வு  செய்து புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பாவம் எதை ஆய்வு செய்வது என்று தெரியவில்லை. நாம் எழுதிய ஆய்வை எடுத்து , அதில் சில மாற்றங்களைச் செய்து வெளியிடுகிறார்கள். அப்புறம் அவர்களுக்கே அச்சமோ நாணமோ வந்து,  வெளியிட்ட தேதியை ஓர் இருவாரங்களுக்கு முன் போட்டுச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்ற ஒன்றை இன்று பார்க்க  நேர்ந்தது.

இத்துணை சூனியமானவர்களெல்லாம் ஏன் எழுதப் புறப்படவேண்டும்?

தேதியை மாற்றி எழுதினாலும் காவல் துறையினர் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆதலால் இதைச் செய்யக்கூடாது.

மடையன் என்பதும் ஒரு சொல்தான். அதையே ஆராய்ச்சி செய்வது நல்லதன்றோ?

Warning :  Things you delete are not completely erased. These can be retrieved in forensic examination by  law enforcement.  When something is published, there may be others who copy and keep it, with date of publication. When you change the date later, ..............!

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பகிஷ்கரித்தல் - விலக்குறுத்தல்.

விலக்கிவைத்தல், ஒதுக்கிவைத்தல், ஒதுக்கிவைத்துத் தரம்தாழ்த்துதல் என்றெல்லாம் பேச்சுவழக்கில் பொருள்தருவது --  பகிஷ்கரித்தல் என்னும் என்னும் வினைச்சொல். சங்கதம் என்று இதைக் கருதலாம்,  இச்சொல்லில் "  ஷ்  " வந்திருத்தலே அதற்குக்  காரணமாகும். 

ஆனால் " ஷ் " வந்துவிட்டாலே அது சங்கதம் ஆகிவிடாது.   நம் புலவர்கள் சங்கதம் என்று சொல்வது "  சமத்கிருத"  மொழியை.

மனத்தை ஒன்றிலோ அல்லது ஆடவனொருவன்பாலோ  இடுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அதற்கு ஒரு புதுச்சொல் வேண்டுமானால்,  இடு+ அம் > இட்டம் > இஷ்டம் என்ற சொல்லைப் படைத்துக்கொள்ளலாம். ஊர்மக்கள் இதை இசுட்டம், இஸ்டம், இஷ்டம் , [ (  அயலொலி நீக்கி ) :  இட்டம் ( இது புலவர் அமைப்புச் சொல்)]  எனப்பலவாறு ஒலித்து வழங்குவர்.  இந்திய விடுதலைக்குப் பிறகு மக்கள் படிப்பு மேன்மை அடைந்துள்ளபடியால்,  சில வடிவங்கள் மறைந்திருக்கவேண்டும்.

இன்னொரு சொல்லும் இருந்தது.   இடு>  இடுச்சி(த்தல்) > இச்சி> இச்சித்தல் என்பது.  அதுவும் ஒருபுறம் இருக்கிறது.  இங்கு டு என்ற கடின ஒலி விலக்குண்டது.  இச்சொல்லிலும் மனம் இடுதலே அடிப்படைக் கருத்து.  ஒரு டு-வை எடுத்துவிட்டால்  ஏதோ சிங்கியாங் நிலப்பகுதியிலிருந்து வந்த புதுச்சொல் போல இது  புலவனையும்  மருட்டவல்ல சொல்.---- அமைப்புபற்றி ஆய்கின்றபொழுது.

இத்தன்மைபோல்,   "பகிஷ்"  என்பதில்வரும் ஷ் ஒரு வெற்றுவேட்டுதான்.

பகு + இஷ் + கு + ஆரம் என்று பிரிக்கவும்.  அதாவது வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று நம் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களைப் பிரித்துவிட்டால்,  --  இங்கு காட்டப்பட்ட சொல்லையே பயன்படுத்திச் சொல்வதானால் :  " பகுத்துவிட்டால் ",    அத்தகைய வேண்டாதவர்களை ஒரு புறத்தே  இட்டு வைத்துவிடுவோம்.  கு என்பது சேர்தல் அல்லது அடைதல் குறிக்கும் இடைநிலை.  இது ஒரு வேற்றுமை உருபாகவும் வேறிடங்களில் இருக்கும்.  இங்கு அதற்கு அந்த வேலை இல்லை.  ஒரு சேர்ப்பு அல்லது இணைப்பு குறிக்கும். மேற்கண்டவாறு பகுக்கப்பட்டோர், ஒன்றாகுவர் அல்லது ஒன்றாக்கி இடப்படுவர்.  இப்போது, பகு, இடு, கு எல்லாம் விளக்கிவிட்டோம். ஆரம் என்பது நிறைவு என்று பொருள்படும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இப்போது பாருங்கள்:

பகு+ இடு + கு + ஆரம் >  பகிடுகாரம்,  இதை மெலிவு செய்ய, ஒரு ஷ்.  பகி(ஷ்)காரம் >  பகிஷ்காரம் ஆகிவிட்டது.  பகுத்து ஒதுக்கப்பட்டோர் இந்தச் சொல்லுக்கு ஏற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.

எழுதவேண்டும் என்று யாம் நினைத்த சில, சுருக்கம் கருதி, எழுதவில்லை. இவ்வளவில் நிறுத்தம் செய்வோம்.

நாம் எதையும் இயன்றவாறு பகுக்கலாம்.  கோயிலில் கிட்டிய ஒரு வடையை இரண்டாகக் கிள்ளி,  அருகில் நிற்கும் பையனுக்கு ஒரு பங்கு கொடுத்துவிட்டு, மிச்சத்தை வாயில் போட்டுக்கொள்வதும் "பகுத்தல்"தான்.  ஆனால்  இந்தப் பகுத்தல் வினை,  நிலத்தில் பதுங்குவதற்குப் பள்ளம் தோண்டி அதில் பதுங்கியவர்கள் இன்னும் நிலவேலை செய்தவர்கள் அமைத்த சொல்லென்று நாம் அறிந்துகொள்ளலாம்.  பள்ளம் என்ற சொல்லில் அடிச்சொல் பள்.  ஒரு பள்ளம் வெட்டி, நிலத்தை இரு பாகமாக்க, அல்லது தேவைக்கு ஒரு குழி உண்டாக்க ,  "பள்குதல்"  செய்வர்.  பள்ளம் உண்டாக்கி, இருகூறு செய்வர். அல்லது பள்ளத்தில் பதுங்கிக்கொள்வர்.  ( படையணியினர்,  திருடர்,  வயல்வேலைகளில் ஈடுபடுவோர் முதலியோர் இது செய்வர். )  இச்சொல்,  பழ்குதல் என்றும் உலவியதுண்டு.

பள் > பள்ளம்.

பள் >  பள்கு >  பள்குதல்.

பள்குதல் >  ( ள் இடைக்குறைந்து ) பகுதல் > பகுத்தல் ( பிறவினை).

பழ்கு > பகு எனினுமாம். இடைக்குறை.

நேரம் கிட்டினால் இதை இன்னோர் இடுகையில் ஆழ்ந்து ஆய்வு செய்யலாம்.

பகு இடு கு ஆரம் என்பதை ஓரளவு விளக்கமாக்கியுள்ளோம். பகிடுகாரம்.

பகிடி, பகடி, பகிடிக்கதை ---  இவற்றையும் விளக்க நேரமிருக்குமா என்று பார்க்கலாம்.

அறிக மகிழ்க.   

மெய்ப்பு பின்

[அம்மாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தபின், நேற்றிலிருந்து சளி, காய்ச்சல், தும்மல் உள்ளன. எழுத்துபிழைகள் இருந்தால் திருத்திக்கொண்டு வாசிக்கவும்  நமக்கு உதவும் திருமதி ஷீபா  அவர்களுக்கும் உடல்நலம் சற்று குன்றியுள்ளமையால் ஓய்வில் உள்ளார். நன்றி .]