வியாழன், 3 பிப்ரவரி, 2022

சீராட்டும் ஐயப்பன்

 ஐயப்ப சாமியைக் கும்பிடுவாய் --- பல

அன்றே நலம்வரும் நம்பிடுவாய்.


கோயிலானாலும் குடியிருப்பானாலும்

கும்பிடுவாய் நம் ஐயப்பனை!

ஆயிஅப்பன் பிள்ளை  குட்டிகள்

அத்தனை பேரையும் காப்பாத்துவான்,

மாயமும் இல்லே மந்திரம் இல்லே

மனத்திலே வைத்தாய் அன்பதனால்

தாயின்நாட்டில் மலைக்குப் போய்வர

தடையிருந்தால் வீட்டில் தாள்பணிவாய்.


மலையில் பார்த்தாலும் அழகானவன்

ஊரில் பார்த்தாலும் அழகானவன்

சிலையில் பார்த்தாலும் அழகானவன்---- உன்னைச்

சின்னப் பிள்ளைபோல் சீராட்டுவான்.





சிலையில் இருப்பதோர் அழகு ---  அதைச்

சிந்தித்து  அடங்கிச் செவ்வனே பழகு..


( எந்த வீட்டுச் சிலை என்று தெரியவில்லை.

எங்கிருந்தாலும் ஐயப்பனே.)


தாயின் நாட்டில் -  தாயின் இன் நாட்டில் :  தாய் பிறந்த இனிய நாட்டில்.

  

புதன், 2 பிப்ரவரி, 2022

அடுக்குமாடி வீட்டிலும் பசுமை



 


அடுக்கு மாடி வீட்டினில் வாழ்பவர்கள் ----   அவை

விடுத்தே  எங்கும் செல்லுதற் காவதில்லார்,

ஒடுங்கி  ஆங்கே உள்கிடப்  பாரெனினும்---- சட்டிச்

செடிகள் வைத்துச் சீர்பெறற்  கானவரே.


சட்டிச் செடிகள் பட்டென வளர்ந்தனவே ----   தம்மில்

கட்டிப் பிடித்து  நிற்புறும் நெருக்கமுடன்,

ஒட்டிப்  பசுமை  உற்றுநிற் கிறபடியால் --- காண்மனம்

எட்டிப் பிடிக்கும் எல்லையை மகிழ்வினிலே. 


பொருள்:

விடுத்து -  விட்டு நீங்கி 

செல்லுதற்காவது இல்லார் --  செல்ல முடியும் நிலைமை இல்லாதவர்.

ஒடுங்கி உள்கிடப்பார் ---  அந்த வீடுகளுக்குள் நடமாட்டமின்றி இருப்பவர்கள்

பட்டென -  பட்டுத் துணி போல

நிற்பு - நிற்கும் நிலை

உறும் -  அடைகின்ற 

மகிழ்வினிலே -  களிப்பின்மூலமாக.

இது ஆசிரியத்தளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிச்சொற்கள்

வந்துள்ளன.  வெண்டளை விலக்கப்படவில்லை.









காலை எழுந்தவுடன் உள்ளக் கனிவுடனே

சோலைப்  பசுமைதனைச் சொந்த  அகத்ததன்முன்

வேலை  அழுத்தமெனும் வேண்டாத் துயரமில்லா

மாலைச் சரமகிழ்வை மாந்தத்  தருவனமே. 


பொருள்:

அகத்ததன்முன் ----  வீட்டின் முன்பக்கத்தில்

வேலை அழுத்தம்  - -- நீங்கள் செய்துமுடிக்கும்வரை உங்களை வருத்தும்

சோலிகளின் சுமை.

மாலைச் சர மகிழ்வை --- பூமாலை  அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டுக்

காட்சிதரும் களிப்பைப் குறிக்கும் தொடர்.

தரு -  தருகின்ற

வனமே -  பசுந்தோட்டம் ஆகும்.


இது செப்பலோசை  தழுவி வெண்டளையில் பாடப்பெற்றுள்ளது.

மாந்தத் தருவனமே என்பதை   மாந்து என்று நிறுத்தினால் ,  இது இன்னிசை

வெண்பா போல் சென்று முடியும்.  ஆனால் துள்ளலோசை பிறக்க 

முடிந்துள்ளது. இது  சீர்கள் நிரலால் எழுகிறது.






செடிச்சட்டிகளின் படம்.

அறிவீர் மகிழ்வீர்.

மீள்பார்வை பின்னர்.

திங்கள், 31 ஜனவரி, 2022

மாலை 4 மணிக்குச் சிற்றுண்டி

(பஃறொடை) 


எந்தநன்  னாளும் எமக்கினிய நன்னாளே

சொந்தவே  லைகளைச் சூழ்ந்து முடித்தபின்

நாலுமணி மாலையில் நல்ல  படியமர்ந்து,

காலுகை கட்குக் கருதியே  ஓய்வுதந்து,

நல்ல கொழுந்துநீர் யாம்விழையும்  சிற்றுண்டி

வெல்லம் இலாதபடி உண்டு மகிழ்வேமே.

இங்குப் படத்தில்   மகிழ்வீர்  இதுகண்டு

பங்குபெற வாரீர் விரைந்து.


கொழுந்துநீர் -  தேநீர்.

எந்த நன்னாளும் -மானிடர்க்கு இடரில்லா எந்த நாளும்

எமக்கினிய நன்னாளே - எமக்கும் இனிமைதரும் நல்ல நாள்தான்.

சூழ்ந்து -  ஆலோசித்து.  சூழ்தல் - ஆலோசனை செய்தல்.

மகிழ்வேமே  = மகிழ்வோமே

ஏம் வரின் எம்மனோரை மட்டும் உளப்படுத்தும். 

முன்னிலையாரை உளப்படுத்தாத முற்றுவினை.

இங்குப் படத்தில் மகிழ்வீர் இதுகண்டு --  இதை "இங்கு 

படத்தில் இது கண்டுமகிழ்வீர் " என்று உரைநடையாக்கிக்கொள்க.







 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்