செவ்வாய், 25 ஜனவரி, 2022

மூர்க்கன்.

 எதிலும் ஒருவன் தன்  நிற்பிலிருந்து மாறிகொண்டிருக்கக் கூடாது.  அதேவேளையில், மாறுவதற்குரிய தன்மையை நல்லோர் எதிர்நோக்குங்கால், மாறியமைய வேண்டும்.  அதாவது பிடிவாதமும் கூடாது.  எதிலும் நிலைநிற்பதும் மாறுவதும் சிறந்த காரணங்களுக்காக இருக்கவேண்டும்.  மக்களாட்சியில் ஒருவன் பணம்பெற்றுக்கொண்டு வாக்களிப்பது போலும் நிகழ்வுகள் ஒரு குறைபாட்டையே சுட்டிக்காட்டுகிறது.

இது நிற்க, மூர்க்கன் என்பவன் முரடன் என்ற கருத்தும் மக்களிடையே இருப்பதாகத் தெரிகிறது.

அறியாமை என்னும் நிலையில் மூழ்கிக் கிடப்பவனே மூர்க்கன்.  இதுவே இச்சொல்லின் தொடக்கப் பொருளென்பது தெளிவு.  அதாவது அறிந்து கொள்ளவேண்டியவற்றை அறியாமல் தன் போக்கில் தான்  மூழ்கிக்கிடப்பது.

இப்போது சொல்லைக் காண்போம்.

மூழ் >  மூர்.

மூர் >  மூர்க்கன்  என்பது திரிபுச்சொல். பொருளும் அமைப்புக்குப்பின் விரிந்துள்ளது.  நட்பின் திறமறியான் மூர்க்கன் என்பது இதன் இன்னொரு பொருள்.

முரடு என்ற சொல்லுக்கும் முர் என்பதே அடியாதலால் முர்- மூர் என்ற திரிபும் இவ்வாய்வில் இடங்கொள்வதாகும்.

முர் + அடு என்பதனோடு முர்-மூர் என்பதையும் ஒப்புவைத்தல் கூடுவதே. ஆதலின் மூர்க்கன் என்பது ஓர் இருபிறப்பி என்பதையும் மறத்தலாகாது.

முகிழ் என்பதும் மூர் என்று திரிந்து மேற்குறித்த சொல்லுடன் ஒருமுடிபு கொள்ளும்.

முகிழ் > முகிழ்த்தல்  ( தோன்றுதல்).

முகிழ் > ( முகிர் )>(மூர் )> மூர்த்தி,

ஓரிடத்துத் தோன்றி அருள்பாலிக்கும் தெய்வம்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

பகிர்தல் வினை.

பகிர்தல் >  பார் > பார்த்துண்ணல் > பாத்தூண்.

பகுத்துண் > பாத்தூண் என்பதும் ஏற்புடைத்தே..


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கரு ( கர் ) என்ற அடிச்சொல்.

 இவ்வடிச் சொல்லை  ("கர்")  முன்னர் சிறிய அளவில் ஆங்காங்கு குறித்துள்ளோம்.  எழுதிக்கொண்டே சிந்தித்து எப்படி சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்பதை ஆய்ந்துகொண்டே, ஈண்டு உரைத்து முடிப்போம்.

கர் என்பது கரு என்று ஒரு முழுமையாய் வடிவெடுக்கும். கர் என்பதன் வளர்ச்சியே கரு என்னும் அடிச்சொல்.  குழந்தைகள் வளர்தல் போல் சொல்லினடியும் வளரும். இதுபோல் வளர்ந்த இன்னோர் அடிச்சொல்:

விர்:  அடிச்சொல்.

விர்  > விரு    (ஓ.நோ: கர் > கரு ).

விர் > விய்.   

அமைந்த சொற்கள்:  விர்> விரு.   விரு+ தி  >  விருத்தி

தி என்பது தொழிற்பெயர் விகுதி. 

இவ்விகுதியில் அமைந்த சொற்கள்:  செய்தி, உய்தி,  கைதி ( கையில் அகப்பட்டவன்).   கைது>கைதி எனினுமது.

விர் > விய் > வியன்:  விரிவு என்பது பொருள்.

எ-டு:  வியனுலகு,

வியாபாரம்  : உண்மையில் இது விரிந்து பரத்தல் என்று பொருளுடயது.பொருட்கள் விலைப்பொருட்டு விரிந்து கொண்டுசெல்லப்பட்டு ஆங்காங்கு பரவுதல்.    வியாபாரம் எனில் விரிந்து ஆகும் பரவல் முறை. விய்+ஆ+பர(வு) + அம்.  பர அம் > பாரம், முதனிலை நீண்ட தொ.பெ.

இவ்வெடுத்துக்காட்டு மூலம், விர்> விய் திரிபு விளக்கமுறுகிறது.

ஆகவே  இப்போது கர்  > (கய்) > கை என்பது புரிகிறது.  இதன்மூலம்  அர்> அய் >ஐ என்பதும் புரிந்துவிடும். 

இதன்மூலம், 

அர் > அரன்,

அர் >  அரி

அர் > அய் > ஐ. என்பன புரியும்.  ஐ உயர்வு என்னும் அடிச்சொல் இவ்வாறு உருவெடுக்கிறது.  இதன் பல்வேறு திரிபுகளை இங்கு விளக்கவில்லை. எல்லாம் எழுதினால் அது இடுகையாய் இருக்காது.  இங்கு நாம் நூலெழுதவில்லை. குழப்பமும் தவிர்க்கவேண்டியுள்ளது.

கை என்பது செய்யும் உறுப்பாதலின், கர் என்பது செய்தல் என்னும் ஆதிப்பொருள் உடைய ஓர் அடியே ஆகும்.

கர் > கய்> கை எனலால்,  கை>கய் > கர் என்பதும் அதுவேயாகும்.

ஆகவே,  கர்> கார் என்ற திரிபிலிருந்து,

கார்> காரணம்,

கார் > காரியம்.

கர் > கரு > கருவி

கர் > கரணம்.

கர் > கரணி.

கர் > கார்> காரணி

என்பனவும் இன்னும் இயைத்துக் கூறப்படாதனவும் பொருளுணர்ந்து இன்புறலாம்.

கல் > கர் என்பது பழைய இடுகையில் கூறப்பட்டது. ஆங்குக் காண்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 22 ஜனவரி, 2022

இல்லம்தோறும் ஐயப்ப பூசை

[ஓமிக்ரோன் தொற்று ஒழிய ஐயப்ப பூசை.]

[இது பதினோரடிகள் கொண்ட இன்னிசைப் பஃறொடை வெண்பா.]

 


படிபூசை   ஏற்றப்  படிதோறும்  மேவ

ஒருநாள் மறவாத் திருவாளர்  பல்லோரும்

இல்லமே தூகுவித்(து) இன்போடு பாடியே

உள்ளமே மீகுளிர ஒன்றாகக் கூவினர்

ஐயப்ப  ஐயப்ப ஐயன் சரணமென்று!

தோரணங்கள் மாலைகள்  நீறொடு சந்தனம்

ஆரத் திருவூண் அனைத்தும் அமைய,

படத்திலே பார்க்க  உடனிருப்பார் பற்றை;

இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால்,

சரணம் சரணமென்  ஐயப்ப  நீயே

வரணும் வணங்குமிவ் வீடு. 













  உரை:

படிபூசை  ---  படிகளுக்குச் செய்யப்படும் பூசையானது, 

 ஏற்றப்  படிதோறும்  ----  ஏறி மேற்செல்லும் ஒவ்வொரு  படிக்கும் 

மேவ ---இயற்றப்பட, 

 ஒருநாள் மறவாத் திருவாளர்  பல்லோரும்  ---- பூசைநாளை மறந்துவிடாத உயர்வுடைய பல பற்றர்களும், 

இல்லமே தூகுவித்(து) -- வீட்டைச் சுத்தப்படுத்தி, 

இன்போடு பாடியே  -  இன்பத்துடன் பாட்டிசைத்து, 

உள்ளமே மீகுளிர---  மனம் மிகவும் குளிரும்படியாக, 

ஐயப்ப  ஐயப்ப ஐயன் சரணமென்று!  ---  இவ்வாறு அவன் பெயர் சொல்லி,

ஒன்றாகக் கூவினர்  ----  சேர்ந்து  குரலெழுப்பினர்;


தோரணங்கள் மாலைகள்  நீறொடு சந்தனம் ஆரத் திருவூண் அனைத்தும் அமைய   ---  இப்பொருள்களெல்லாம் பூசையிலும் அது நடைபெறும் அறையிலும் வைத்து,

படத்திலே பார்க்க  உடனிருப்பார் பற்றை  -----  அப்போத் பங்கு கொள்வோர் பற்று வெளிப்படுத்துதலைப் படத்திலே பார்க்க;

இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால்  ----  பத்தி எங்கும் இக்காலத்திலே பரவும்;

சரணம் சரணமென்  ஐயப்ப  நீயே   --  ஐயப்பனே, நீயே சரணம் என்றோம்,

வரணும் வணங்குமிவ் வீடு.  -  உன்னை வணங்கும் இவ்வீட்டுக்கு வரவேண்டும்.

படம் திருவாட்டி சி லீலா.


மெய்ப்பு:  பின்னர்