வெள்ளி, 7 ஜனவரி, 2022

தவளை - தவணை - முதனிலைக் குறுக்கம்.

 முதனிலை அல்லது முதலெழுத்துக் குறுகி அமைந்த தொழிற்பெயர்கள் பல உள்ளன. நாம் சில காட்டியுள்ளோம் - பழைய இடுகைகளில்.

தாவு > தவளை

இங்கு,  தாவு என்பது தவ என்று குறுகியதால், முதனிலை குறுகித் திரிபடைந்தது என்பது அறிக.

இதுவேபோல், தவணை என்பதும் குறுகியே அமைந்தது என்பதும் அறிக.

தாவு + அணை.

தாவித் தாவிச் செல்வது போலும் ஒரு கட்டண முறை.

முன் இடுகைகள் இங்கு உள்ளன. Pl click and read for wider discussion.

https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_6.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


நோய்த்தொற்று அச்சம். தடுக்கும் வழிகள்

 கெட்டுவிட்ட உலகத்தை நன்றே  ஆக்கக்

கிட்டுமொரு வழிதேடி அலைகின் றோமே!

பட்டுவிட்ட மரம்போல மக்கள் வீழ்ந்து

மடிகின்றார் நோய்த்தொற்றால், பரிந்து நல்லோர்

ஒட்டுறவும்   பல்குடியும் காத்துக் கொள்ள

உலகின்முனம் பட்டறியாப்  பாடே பட்டார்!

மட்டிலவாய்த் தடுப்புபல   மேவித்  துன்பம்

மட்டுறுத்தும் வழிகளையே தொட்டாய்ந்  தாரே.


கெட்டுவிட்ட - சீரழிந்துவிட்ட

கிட்டும் - கிடைக்கும்

பட்டுவிட்ட - பட்டுப்போன, காய்ந்துபோன

பரிந்து -  அதுதாபம் கொண்டு

ஒட்டுறவு - சார்ந்திருப்போரை மேலும் உறவினரை

பல்குடி  - மக்களை

முனம் -  முன் காலத்தில்

பாடே - துன்பமே

மட்டிலவாய் - மிகவான

மேவி - மேற்கொண்டு

மட்டுறுத்தும் - குறைத்துக் கட்டுக்குள் கொண்டுவரும்.

தொட்டாய்ந்தாரே - ஆரம்பித்து ஆராய்ச்சி மேற்கொண்டாரே


[Gov.sg அனுப்பிய தகவல் – ஜனவரி 6]


ஓமிக்ரான் கிருமிவகை: ஆக அண்மைய சுகாதார நடைமுறைகள்


😷 அறிகுறிகள், உடல்நிலை ஆகியவற்றின் கடுமைத்தன்மை அடிப்படையில் நோயாளிகள் பரிசீலிக்கப்படுவார்கள். ஜனவரி 6 முதல்:


1️⃣ உடல்நலமில்லை: மருத்துவரைப் பார்க்கவும்

🔹 கடுமையாக நோய்வாய்ப்பட்டோருக்கும் அபாய நிலையில் இருப்போருக்கும் தடுப்பூசி நிலை அடிப்படையில் 10/14 நாள் தனிமை உத்தரவு

2️⃣ நலமாக இருப்போர், மிதமான அறிகுறிகள் உள்ளோர்: சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டு, 72 மணிநேரத்துக்குப் பின், கிருமித்தொற்று இல்லையென உறுதியானால், வெளியே செல்லலாம் 

3️⃣ நெருங்கிய தொடர்பு: 7-நாள் சுகாதார அபாய எச்சரிக்கை


🔗 covid.gov.sg


✅ முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையைத் தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் (Booster) தடுப்பூசி தேவை

🔷 பிப்ரவரி 14 முதல், 18 வயதிற்கும் மேற்பட்டோர், முதல் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு 9 மாதம் வரை, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோராகக் கருதப்படுவர்

🔷 இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னர், 5 முதல் 9 மாதத்திற்குள் கூடுதல் தடுப்பூசியைப் (Booster) போட்டுக்கொள்ளவேண்டும்


சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம்: 08012022 1212

அறிக மகிழ்க.

மீள்பார்வை பின்.





இருவடிவச் சொல் "மாற்றுருத்தம்" " மாற்றுறுத்தம்"

 ஒரு ஈராயிரம் ஆண்டுகட்குமுன் மனிதன் காகிதம் என்னும் தாளை  அறிந்திருக்கவில்லை,  அதைச் செய்து பயன்படுத்தவும் தெரிந்திருக்கவில்லை. மரம் செடி கொடிகளை அரைத்துத் தாள்செய்யும் கலையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர் என்று சொல்வர்.  "பேபிரஸ்" என்ற தாவரத்திலிருந்து "பேப்பர்" என்னும் தாளைச் செய்துகொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் எகிப்தியர்கள் அறிந்தனர்.  தமிழர்கள் அறிந்துகொண்டது, ஓலைகளில் எழுதுவதற்குத்தான்.

ஓலைகள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின்  தம்  திட்பத்தினை இழந்துவிடும் ஆதலின் புதிய ஓலைகளைத் தயார்செய்து முன் எழுதியிருந்ததைப் பெயர்த்தெழுதி வைக்கவேண்டும். இப்படி எழுதும்போது  எழுதிக்கொடுப்போர் செய்த தவறுகளாலும் சொற்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு.  சில ஓலை நூற்படிகளை ஒப்புநோக்கி உண்மையான சொல் வடிவம் எது என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருத்தல் கூடும்.

ஒரு தவறான வடிவம் வழக்குப் பெற்றுவிட்டால், அது பல நூல்களிலும் இடம்பிடித்துக்கொண் டிருக்குமாதலால், இது  போல்வனவற்றைத் திருத்தி அமைத்துக்கொள்வது எளிதன்று.  தவறான வடிவமே தொடரட்டும் என்று விட்டுவைத்தலே அறிவுடைய செயலென்பர்.  இத் தவறுகள் வழுவமைதிகளாய் விடும்.

மரக்குழம்பை தாளாகச் செய்வது ஒரு மாற்றுருத்தம். ஆகும் .  ( அதாவது ஓர் ஓலையைத் தாளாக  மாற்றுருவில் தருதல்.)

உரு என்பது உருவம் எனவும் படும்.  உருத்தல் - தோன்றுதல்.

உருத்துதல் -  உருவிலமைத்தல்.  அதாவது இன்னொரு தோற்றமுடையதாக்குதல்.

"ஊழ்வினை உருத்துவந்  தூட்டும்  என்பதும்

சூழ்வினைச் சிலம்பு காரணமாக "

என்ற சிலப்பதிகார வரிகளில், உருத்து என்ற சொல்வடிவம் வந்திருப்பதை அறிக.  நல்லவேளையாக தமிழுக்கு இச்சொல் காணாமற் போகாமல் இன்னும் கிடைக்கிறது. நமக்கும் மகிழ்ச்சிதான்.

உருத்தல் - தன்வினை.

உருத்துதல் - பிறவினை.

ஆகவே, மாற்றுருத்தம்  ( மாற்று உருத்து அம் ) என்பது processing என்ற சொல்லுக்கு ஈடானது.

மாற்றுறுத்தம் -  வேறு உருவில் அமைத்தல் என்றும் பொருள்காணும்படியாகக் கையாளலாம்.  மாற்றுறுத்தினர் எனின் மாற்றுருவினது ஆக்கினர் என்பது.

எனவே, மாற்றுருத்தம், மாற்றுறுத்தம் என்பன இரு வடிவிலும் ஏற்கத்தக்க வடிவங்களாய் உள்ளன. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.