தோண்டு என்பது ஒரு வினைச்சொல். ஒரு வினைச்சொல்லிலிருந்து ஒரு பெயர் அமைந்தால் அதை "வினையிற் பிறந்த பெயர்" என்று சொல்லலாம், ஆனால் இலக்கணியர் " தொழிற்பெயர்" என்று குறித்தனர். தொழில் என்பதும் வினை என்பதும் செயலைக் குறிப்பன. வினைப்பெயர், செயற்பெயர் என்றெல்லாம் வேறுபெயர்களால் குறிக்காமல், இத்தகு பெயரை இலக்கணியர் குறித்தது போலவே நாமும் தொழிற்பெயர் என்றே குறிப்போம்.
தோண்டு என்பது குறுகி, தொண்டை என்று அமையும். ஒரு தோண்டப்பெற்ற குழாய்போல அமைந்திருப்பதால், தொண்டை என்று அமைந்த சொல், நெடில் குறிலாக அமைந்த தொழிற்பெயர். இதுபோலக் குறுகி அமைந்த இன்னொரு சொல் வேண்டுமாயின் , சா(தல்) > சா+ அம் > சவம் என்பதை எடுத்துக்காட்டலாம்.
வினைமட்டுமின்றிப் பெயரிலிருந்தும் இன்னொரு பெயர் தோன்றுவதுண்டு. கீழ் மேல் என்பன இடப்பெயர்கள். இவற்றிலிருந்து:
கீழ் > கிழங்கு,
கீழ் > கிழக்கு
என்பன அமைந்துள்ளமை காண்க
கீழ்த்திசை --- கிழக்குத் திசை.
மேல்திசை ---- மேற்குத் திசை.
. கிழக்கு என்று வல்லழுத்து வருவது திசையையும், கிழங்கு என்று மெல்லொற்று வருவது ஒரு வேரையும் குறித்தது காண்க. புணர்ச்சி வேறுபாட்டில் விளந்த வெவ்வேறு சொல்லுருக்களை வெவ்வேறு பொருட்குப் பெயராய் இட்டுள்ளமை, ஒரு சிக்கன நடவடிக்கை என்றே உணர்க.
ழகரம் டகரமாய்த் திரியும். கீழ் > கிழங்கு > கிடங்கு என்பது கீழ்நிலம் குறிக்குங்கால் வேறுசொல்லாய் அமையும். பொருள்கள் கிடக்கும் ஒரு கூடாரத்தைக் குறிக்கையில் கிட(த்தல்) > கிடங்கு என்று அமையும். வெவ்வேறு சொற்பகுதியிலிருந்து ஒரு முடிபு கொண்ட சொற்கள் இவை.
கிட+ அங்கு + இ = கிட்டங்கி என்ற மலேசிய சிங்கப்பூர்த் தமிழரின் சொல், துறைமுகத்தில் பொருட்கூடாரமாகப் பயன்படுத்தும் இடத்துக்குப் பெயர். இது கிட அங்கு என்பவான சொற்களிலிருந்து திரிந்தமை, கி - ga, ( ) , ட் அங்கு இ > டங்கி > dong, என அதனின் விளைந்து, gadong என்ற மலாய்ச்சொல் அமைந்தது. இது ஆங்கிலத்தில் godown என்று திரிந்தது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கப்பலில் வந்து சரக்குகளை இறக்கி அடைத்துவைத்தவர்கள் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்கள். அவர்கள் இட்ட பெயர்தான் கிட்டங்கி. கிட்டங்கிகள் இருக்கும் தெரு, கிட்டங்கித் தெரு என்ப்பட்டன. செட்டியார்கள் கடைகள் வைத்து வணிகம் நடாத்தினர்.
சில இவ்வாறு இரட்டித்து அமையும். இவற்றை ஒப்பாய்க:
மக + கள் > மக்கள். ( இரட்டித்தது).
தக + அள் + இ > தக்காளி. ( இரட்டித்தது). தகதகவெனக் கண்களை அள்ளும் தன்மை உடைய பழம். அள் என்பதின்றி , ஆள் - ஆளுமை என்பதும் உண்டு.
பகு+ அம் > பக்கம் என்பதும் காண.
தகு + அது > தக்கது என்பதுமது. தகுவது எனினுமாம்.
ஒப்பு நோக்க:
கரியநிறம் தோன்றுமாறு வறுத்தெடுப்பதற்கு garing என்று மலாய் மொழியில் சொல்வர். கரியங்கு > காரிங்க்.
கருக்கு> கரிங்கு > காரிங் எனினும் அமையும். சற்று கருப்பு நிறம் வரும்படியாக வாணலியில் புரட்டி எடுத்தல்.
இவற்றிலிருந்து கற்றுக்கொள்க. சொற்களை அமைப்பது இலக்கணத்தின் வேலையன்று. திருத்தமாக மொழியைப் பேசவும் எழுதவும் திறனுண்டாக்குவதே அதன் நோக்கம்.
இங்கு வேறு சில பொருத்தங்களை நாம் கண்டுமகிழ்ந்தாலும், யாம் சொல்ல விழைந்தது யாதெனின், கீழ் என்ற நெடில்முதலாய் வந்த சொல் குறுகி, கிழக்கு என்று அமைந்ததுதான். கிழங்கு என்பதும் அன்னது ஆகும். அதாவது வினையல்லாத பகுதிகளினின்றும் இவ்வாறு அமைதல் காண்க.
முன் ஓர் இடுகையில், காண் ( காணுதல்) என்பதிலிருந்து முதலெழுத்து குறுகி, கண் என்ற சினைப்பெயர் அமைந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
இவற்றை மறவாமல் இருத்தல் தமிழறிய இன்றியமையாதது ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்