கள் என்பது கருப்பு என்று பொருள்தரும் அடிச்சொல். இச்சொல்லை நம் முன் தமிழ் ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர். அவர்கள் ஆய்வின்படி, காளி என்ற சொல்லும் கருப்பம்மை என்ற கருத்தறிவிக்கும் சொல்லாகும். கள் என்பது அடியானால் அது காள் என்று முதலெழுத்து நீண்டு, இகர விகுதி பெற்றுப் பின்னர்தான் காளி என்றாகும். முதலெழுத்தை இலக்கணத்தில் முதனிலை என்பார்கள். ( a technical term in grammar ).
கள் என்ற அடிச்சொல், காள் என்று திரிந்தது போலவே, சுள் என்பது சூள் என்று திரிந்துள்ளது. சுள் என்ற அடிச்சொல்லின் பொருள் "வெம்மை" என்பதாகும்.
சுள் > சுள்ளை.
இது மட்கலம் சுடும் சூளையைக் குறித்தது. சுள் + ஐ என்று ஐவிகுதி பெற்றுள்ளது. இது வெள் > வெள்ளை என்பதுபோலும் விகுதிப்பேறுதான்.
சுள் > சூளை.
இது மேற்குறித்தவாறே நீண்டது, விகுதியும் பெற்றது. சூளை என்பதும் சூடு மிகுத்து செங்கல் முதலியன சுடும் இடமே ஆகும். இதைக் காளவாய் என்றும் கூறுவதுண்டு.
காளவாய் என்ற சொல்லில் "காள்" என்ற ஒரு சொல்லும் வாய் என்ற இன்னொரு சொல்லும் கூடியுள்ளன. " வாய்" என்பது இடம் என்று பொருள்தரும் சொல். காள்+வாய் = காளவாய் என்பதில், அகரம் இடைநிலையாய் வந்துள்ளது. இதை "அவாய்" என்று பிரிக்கவேண்டாம். நெருப்பு எரிந்து புகை எழும்பிக் கருப்பாவதால், கருப்பு என்ற பொருள்தரும் சொல்லுடன் வாய் என்பது இணைந்து இச்சொல் அமைந்தது பொருத்தமாகும். ( A furnace where bricks are made by heat.)
படுசூளை என்பது வட்டமான சூளை. மூடியது போன்ற சூளை மூடுசூளை எனப்படும் என்று அகரவரிசைகள் தெரிவிக்கின்றன. இப்போது செங்கல் செய்யும் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தச் சொற்கள் இப்போது வழக்கத்தில் இருக்கக்கூடும். அறிந்தோர் பின்னூட்டம் செய்க. மால் என்பது திருமால் என்னும் கடவுளைக் குறிப்பதுடன், காளவாயையும் குறிக்கிறது. மால் என்பது கருவலான நிறம். சூட்டினால் இந்நிறம் ஏற்படுவதால், மால் என்பது காளவாயையும் குறித்தது. இது (மால்) இப்போது இப்பொருளில் எங்கும் வழங்குவதில்லை என்று தெரிகிறது.
சுள் - சுடு என்றும் சூள் - சூடு என்று திரியும் தொடர்புடையவை. சுடுதல் என்ற வினை, முதனிலை நீண்டு சூடு ஆகும் என்றும் அறிக.
கிணறுபோல் வெட்டப்பட்ட காளவாய் "கைக்காளவாய்" என்பது.
கை> கய் > கயம். கயமென்பது நிலக்குழியில் நீர் நிற்கும் பகுதியாகும். அதாவது குளம் ஆகும். கை என்ற சொல்லுக்கு உள்ள பல பொருளில் நிலக்குழிவு என்பது ஒரு பொருள். இப்பொருளைக் "கைக்காளவாய்" என்பதன் மூலம் மீட்டெடுக்க இச்சொல் வசதி செய்கிறது. இனிக் "கைலாசம்" என்ற சொல்லையும் காண்க.
கைலாசம் https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_26.html
ஒரு மலையிலிருந்து கீழ் நோக்கின், அதன் கை - அதாவது, பக்கங்கள் கீழ்நோக்கி இறங்குவன ஆகும். இதுவும் ஒரு நிலக்குழிவே ஆகும். கைலாசம் என்பது உச்சியிலிருந்து நோக்கக் கீழ்ப்பகுதியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மலையிறக்கம் என்பது. ஆகவே கை என்பது குழிவு குறிக்கும் என்று தெரிகிறது. மேலும் அது கயம் என்பதனுடன் பொருந்துகிறது.
குழி என்பது வட்டமாகவோ நாற்கோணமாகவோ இருக்கலாம். இஃது உண்மையில் தரையில் உள்ள குழிவுதான். நம் கைகளும் தோளிலிருந்து கீழிறங்குவனவே யாகும். கயம் அல்லது குளம், நிலமட்டம் ஒரு புறத்து இறங்கி இன்னொரு புறத்து மேலேறி வரும். நடுவிற் குழிவு. கையுடன் ஒப்பிட , கைகளில் எலும்பு சதை நரம்புகள் முதலிய உள்ளன. கயத்தில் நீர் இருக்கும்.
இதனால் கை > கய் > கயம் என்பது உறுதியாகிறது.
எனினும், கைலை அல்லது கைலாசம் என்பது மலையின் இறக்கத்தில் உள்ள பகுதி என்பது முன்னர் இருந்த எழுத்துரைகளில் காணப்பட்டது. அது இப்போது கிட்டவில்லை. கைலாசம் என்பது மலையுச்சியைக் குறிக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் மக்கள் செல்லத்தகும் நிலப்பகுதிகளையே குறித்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
குறிப்பு:
[ ஒரு கலைச்சொல்லையோ அறிவியற் சொல்லையோ பயன்படுத்தினால் அதை எப்படி அவற்றைக் கற்றோர் பயன்படுத்தினரோ அப்படியே பயன்படுத்தவேண்டும். வேறு பொருளில் அதைப் பயன்பாடு செய்வது தவறே ஆகும். காரணம் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் தவிர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, mutatis mutandis, prima facie, fee simple முதலான சட்டத்துறைச் சொற்கள்.]