திங்கள், 11 அக்டோபர், 2021

அட்சதை , அடுதல் வினை.

 தொடக்கத்தில் மந்திரங்கள்  தன்னிகரற்ற கடவுளை  ( The One without a Second ) வணங்கப் பயன்படுத்தப்படவில்லை.  பேய்கள் விரட்டவும் மற்ற வியப்புக்குரிய செயல்களைச் செய்யவுமே பயன்பட்டன.  அட்சதை என்பது பெரும்பாலும் மந்திரித்த அரிசி ஆகும்.

மனித வளர்ச்சி நூலின்படி ( anthropology  ) மனிதன் வேளாண்மை விளைச்சல் செய்யும் திறன்பெற்ற பின்னர்தான் அரிசியின் பயன்பாடு பேரளவில் வந்து மந்திரம்  செய்வதற்கும் அது பயன்பட்டிருக்கமுடியும்.  ஆகவே மந்திரம் செய்யும் திறனை மனிதன் பெற்றது உழவுதொழில் முன்னேறி வளர்ச்சி அடைந்த பின்புதான்.

ஓடும் உடும்பை நிறுத்தும் திறன்பெற்ற  இந்தோனேசிய வழியினரான ஒரு மந்திரம் செய்யும் பெரியவரை,  பெக்கோக் என்னும் மலேசிய ஊரின் காட்டுப்பகுதியில் நம் திரு மா மணி அவர்கள் கண்டு அளவளாவியிருக்கிறார்.

இன்னும் சில மந்திரங்கள் பற்றிய அறிதல்கள் உள. எனினும்  இது சொல்லாய்வு ஆதலின் அதனுட் செல்லவில்லை. 

ஒரு பேராத்மா பற்றி மனிதன் அறிய சற்றுக் காலம் சென்றிருக்கவேண்டும்.

பேயை அல்லது பிற  ஆவிகள், மற்றும்  விலங்குகளை அடக்க மந்திரித்த அரிசி பயன்பட்டது.

அடுதல் என்பது எதிரியை அடக்குதல் என்றும் பொருள்படும்.  அடு, அடக்கு என்பன ஒரு மூலத்தவை.

அடு  +  அ + தை  >  அட்டதை >  அட்சதை எனச் சொல் அமைந்தது.

அட்டதை > அச்சதை.   இங்கு  தை விகுதி.  ( து + ஐ)

அட்ட, அட்டு என்பன வினை எச்சங்களாகவும் வரும்.

அடு அ  மற்றும் அடு உ  என்பன டகரம் இரட்டித்து அமையும்.   சுட்ட என்பது போலவே.

சமஸ்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சங்களிலிருந்தும் சொல் அமையும். 

படு + ஆ + சு >  பட்டாசு.  ( பட்டு, அதாவது தீபட்டு,  செயல்படுவது.)  சு என்பது பரிசு என்பதில்போல விகுதி ஆகும்.

அடலேறு என்பதில் அடுதல் உள்ளது தெரிகின்றதன்றோ?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஓய்வுபெற்று வீடுவாங்குதல்

 செல்வத்தைச் சேர்த்துவைத்தீர் செய்யும் வேலை

சீரான ஓயும்பொற் காலம்  தொட்டீர்.

பல்வித்தை நீரெவையும்  பயில வேண்டாம்

பார்த்துமெல்ல ஒருவீடு வாங்கிப் போட்டால்

மல்யுத்தம்  போல்வாழ்வு மாறி  டாமல்

மதிப்போடு  மேன்மைபெற வழியுண்  டாகும்.

சொல்பத்தும் காசாகும்  சூழல்  தன்னில்

சொகுசாக  ஊணுறக்கம்  கொள்வீர் நீரே.


இது யாம் சொல்வதன்று.  ஒரு வீடு வாங்கி விற்பவர் தம் விளம்பரத்தில்

தந்துள்ள "வாழ்க்கை ஆலோசனை".  யாம் கவிதையாக்கி உள்ளோம்.

இது உண்மைதானா?  வாங்கிப்

 போட்டுவிட்டால் வீட்டைப் பிள்ளைபோல் பார்த்துக்கொள்ள வேண்டுமே.

அதற்கும் அணியமாக ( தயார் )  இருக்கவேண்டும். யாரையும் வீட்டில் 

வாடகைக்கு வைத்து அவர் புதிய வீட்டைப் பழைய வீடாகத் 

திருப்பிக்கொடுப்பாரே.  புதிப்பிப்பு வேலைகளுக்கு இங்கு அதிகம் 

செலவாகிறது. வீடுவாங்கும் வாய்ப்பும் நோக்கமும் இருந்தால் நீங்கள்

 கருதும் இடத்தில் வாங்கிப் போடுங்கள். இந்த விளம்பரம் சிந்தனையைக் 

கிளறியது.   அது ஒரு சிறு கவியாயிற்று.  நன்றி.


தொட்டீர்  - தொடங்கினீர்

இங்கு ஓயும்காலத்தைப் பொற்காலம் என்கிறார்கள்.

பல்வித்தை -  பணம்பண்ணும் கலைகள்.

மல்யுத்தம் -  மற்போர்.  வாழ்க்கை போராட்டம்போன்றது என்பது.

உது - உத்து > உத்தம்  முன்செல்வது. ( சண்டையிட ) இது

யுத்தம் ஆயிற்று.  ஆனை> யானை என்பதுபோலும் திரிபு.

சொல்பத்தும் -  சொல்வது பலவும்.  பத்து என்பது பல என்ற்பொருட்டு.

சூழல் - சுற்றுச்சார்பு.

சொகுசு  -   சிறப்பு.

சொக்குதல் வினைச்சொல்.  சொக்கு + சு ( விகுதி) >  சொக்குசு, இது

இடைக்குறைந்து சொகுசு ஆயிற்று.  கண்டோரை மயக்கும் சிறப்புத்

தன்மைகள்.













ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கோலாகலம் - பதம்பிரித்தல் எவ்வாறு.

 கோலாகலம் என்ற சொல்லைப்  பார்த்தமட்டில்,  அது இருசொற்களாய் இருந்து இணைக்கப்பட்டு ஒருசொல்லானது என்பது புரியும்.  இத்தகைய சொற்களைக் கூட்டுச்சொல் என்பர்.   அதாவது இரு சொற்களின் இணைப்பு.

இதைப் பிரித்து அந்த இருசொற்களையும் காண்போர்,  கோலம் + கலம் என்று பிரிப்பதே பெரும்பான்மை.

கலம் என்பதன் பொருள் வருமாறு:-  1. பாத்திரம் , ஏனம்.   2.  புட்டி.  3.  குப்பி.   4. தேறல்.   5. கப்பல்  6. மரக்கலம்   7.நட்சத்திரம்,  பூரம், பரணி, இரேவதி.  8. ஆபரணம்.  9.யாழ்   10.  உழுபடை  11. ஆயுதம்  12.  பனையோலையில் எழுத்து.  13.  ஓர் முகத்தலளவு. 14 காகிதம்.

கோலம் எனில் அழகு.   கோலாகலம் என்பது அழகிய மேற்கண்ட  14  பொருள்களில் ஏதேனும் ஒன்று.  எனவே  இப்பொருள் கூறல் மனநிறைவை அளிக்கவில்லை!

விழா கோலாகலமாக நடைபெற்றது என்னுங்கால்,  மேற்கண்ட எதுவும் அத்துணைப் பொருந்துவதாகத் தெரியவில்லை. கலம் - கல+ அம் , கலவை என மேற்கொண்டு,  " அழகுகளின் கலவை " ( கலம்பம் > கதம்பம்) என ஏன் பொருள் விரித்தல் ஆகாது ? -  என்னும் கேள்வி உங்கள் மனத்துள் எழவும் கூடும். இங்கு அதனுட் செல்லவில்லை.

கோலாகலம் என்பதற்குத் தனிப்பொருள் உள்ளது.  அது  ஒழுங்குமுறையற்ற கண்டபடியான ஆனால் பெரும்பாலும் மகிழ்சியான கூக்குரல் என்பதாம்.

கோலம் எனின் அழகு,  உருவம்,  ஊர்கோலம்,   நிறம்,  வெளித்தோற்றம்,  பிறவி (...என்றும் வருமிடம் " மானிடக் கோலம்"),   முயற்சி  ( கோலுதல் வினை: கோலு+ அம்)  ,  நீரோட்டம். இன்ன பிற.

இங்குக் கலம் என்பதைக் கூட்டினால்,  செயற்கிளர்ச்சி அடக்கத்தில் நின்றுபோனது போலும் ஓர் உணர்வைத் தரக்கூடும். 

இவ்வாறின்றி அலம்புதல் என்ற சொல்லின்  அலம் என்ற அடிச்சொல்லைக் கொண்டு இணைப்பதனால் இன்னும் சிறந்த பொருளைப் பெறலாம்.  அலம்புதல் என்பதற்கு,  அலட்டுதல்,  ஆரவாரித்தல்,  குழப்படி, வீணானவை செய்தல், பிதற்றுதல் என்று சற்றும் அடங்கிப்போகாத செயல்களைக் காட்டும் பொருள் உள்ளது.  இன்றைப் பேச்சு வழக்கில் இப்பொருளெல்லாம் இல்லாவிட்டாலும் நிகண்டுகளில் உள்ளன.  ஆகவே:

கோலம் + ஆகு + அலம் >   கோல + ஆகு+ அலம் >  கோலாகலம் என்று சரியாக அமைகின்றது.

எனவே இதனைக் கவனித்துப் பதம் பிரித்தல் மேலானது என்பதை முன்வைக்கின்றோம்.

கலம் என்பதற்கு மேற்கண்ட பொருள்களைக் கொள்ளாமல்,  கலத்தல்  (  கல+ அம் > கலம்,  கலாட்டா போல  : கல+ ஆட்டு+ ஆ)  எனின் ஒருவகையில் பழைய பதப்பிரிப்பைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.  இஃது ஒர் இருபிறப்பி  என்பது இதன் மூலம் தெளிவாகலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

குறிப்புகள்:



K. kala, M. kalam, Tu. kara.

தெலுங்கு: கலமு.