திங்கள், 4 அக்டோபர், 2021

கோவிட்19 சிங்கப்பூர் இன்று ,04102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 4]

 

அக்டோபர் 3, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,337 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 250 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.1%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.5%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 2 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 3 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,057 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh031021

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

அத்துப்போனவனா அத்தான்?

 மொழி அனைத்துமே ஒரு திரிந்தமைவு என்று தமிழறிஞர் ஒருவர் அறிந்துரைத்தார்.  அதாவது இருந்த சொற்களே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து உருக்கொள்ளுதல் என்று  திரிந்தமைவினை விளக்கலாம். இதையே உளசிறப்பு என்று மாற்றுவழியிலும் கூறலாம்,  உளசிறப்பாவது உள்ளன சிறந்தமைதல். `1

அற்று எனற வினையெச்சம் பேச்சுமொழியில் அத்து என்று வரும்.  அத்து,  அற்று என்பவை அறுந்து (---போதல்)  என்று பொருள்படுவதால்,  அத்தான் என்ற சொல்லை  அத்து+ ஆன் என்று கூறுபடுத்தினால் அது பொருளியைபு உடையதாய் இராதொழியும். ஆகவே சொல் அவ்வாறு அமைந்திலது என்று நாம் அறிந்துகொள்கிறோம்.  அத்தன் என்பதிலிருந்துதான் அத்தான் என்று  திரிந்தது என்றாலும் ஏன் அத்தன் என்று வந்தது என்ற கேள்வி எழுமாதலின்,  அதுவும் மனநிறைவு அளிக்காது.  ~~  எனற்பாலது மட்டுமின்றி,  மணவிலக்குப் பெற்றவன் என்றும் பொருள்கொள்ளப்பட்டு இழியும்.

அகம் என்பது வீடு  அல்லது குடியிருக்குமிடம்.  பெண்ணுடன் அகத்திலிருப்பவனே  அகத்தான், இது இடைக்குறைந்து  அத்தான் ஆகிறது.  ககரம் இடைக்குறை.  இத்தகு முறை இல்லாதவன் பெண்ணுடன் ஓரில்லத்தில் இருக்க,  குமுகாயத்தில் தடை அல்லது ஏற்காமை இருந்தது என்று இதன்மூலம் தெரிந்துகொள்கிறோம்.

அத்து என்பதைப் பகுதிபோலும் பாவித்துக்கொண்டு,  பெண்ணுடன் இல்லத்திலிருக்கத் தடை அத்து(அற்று )ப் போனவன் என்றாலும் இயைவது போல் தோன்றினும்  அகத்தான் > அத்தான் என்பதே சிறப்பு  ஆகுமென முடிக்க. இவ்வாறு காண, இச்சொல் ஓர் இருபிறப்பி என்பது உணர்க.

தமிழ் இலக்கணியர் இடைக்குறையையும்  முதற்குறை கடைக்குறைகளையும் அறிந்து விளக்கியுள்ளனர். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

குறிப்புகள்:

` 1.  உள்ளது சிறத்தல் -   திரு.வி.க. அவர்கள் வழங்கிய சொற்றொடர்.


தடுப்பூசி இட்டாலும் தப்ப இயலாமையா?

 தடுப்பூசித் தளைபெற்றார்  அன்னார்  போனார்,

தடுப்பூசி பெறார்தாமும் விண்ணே பெற்றார் 

விடுப்பேது உமக்கென்று காலன் வந்தான்

வேற்றுமைகள் காணாமல் ஏற்றிச் சென்றான்.

கொடுப்பேனோ உமக்கிங்கு  நேரம் என்றான்

கொடுமையிது கொடுமைதான் கூறு வோமே

உடுப்பினையே கழற்றிவைத்த பெற்றி  போல

உலகினையே விலகினரே உற்றோம் துன்பம்.


உரை: 

தளை - கட்டுதல். 

அன்னார் -  அத்தகையோர்

போனார் -  இறந்தார்

விண்ணே  - சொர்க்கமே,  இறப்புலகமே

விடுப்பேது -  விடப்படுதல் இல்லை

காலன் -  எமன்

ஏற்றி -  கொண்டு

பெற்றி  -  தன்மை

உடுப்பினையே  -   ஆடையையே

உலகினையே விலகினர் -  இவ்வுலக வாழ்வை நீத்தனர்

மெய்ப்பு  பின்னர்