பல சொற்களை அணுகி ஆராய்ந்த பின்புதான் அடிச்சொல்லைக் கண்டுபிடிக்க முடியும். முடியுமென்றால் சிலவேளைகளில் முடியாமற் போவதையும் அது உள்ளடக்க வேண்டும். இதற்குக் காரணம், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் உலகில் நடந்துவிடுவதில்லை என்பதுதான்.
நந்தவனம் என்று குறிக்கும் ஓர் இடத்தில் காடுபோல பெரிய மரங்கள் இருப்பதில்லை. செடிகள், கொடிகள், தாழ்வாக வளரும் சில சிறுவகை மரங்கள் இருக்கலாம். காடு எது, நந்தவனம் எது என்பது பெரும்பாலான மக்களுக்கு எடுத்துச்சொல்லாமலே புரியக்கூடியது என்பது எம் துணிபு.
தவனம் என்பதென்ன என்பதும் ஆய்வுக்குரியது.
தாவு + அள் + ஐ என்ற உள்ளுறைவுகளையே தவளை என்னும் சொல்லுக்குக் காட்டியுள்ளோம். தாவு அளை எனினும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.
தாவு என்பதற்கும் தவழ் என்பதற்கும் தொடர்பு உள்ளது. இவை இரண்டும் முற்செலவு குறிக்கும் சொற்கள். இவைதமக்குள் நுட்பவேறுபாடு வழக்கில் ஏற்படுவது ஆகும். தாவுதலில் தாவும் எதுவும் தவழ்தலினும் மேலெழுந்து பின் தரைக்குச் செல்லும் என்பதுதவிர, முற்செலவில் வேறுபாடு ஒன்றுமில்லை. எனினும் இவற்றுள் இருக்கும் செயல் வேறுபாட்டினும் தரையில் முற்செலவு என்ற பொதுக்கருத்தினை உன்னவேண்டும்.
தவளை என்ற சொல்போலவே தவணை என்ற சொல்லிலும் ஒரு தாவல் கருத்து உள்ளுறைந்துள்ளது. ஒரு தொகையைக் கொடுத்து, அப்புறம் இடையீடு விட்டு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்து இவ்வாறாக, தாவுதல் போலவே இச் செயலும் அமைந்துவிடுதல் காணலாம்.
தவறு அல்லது தவறுதலும் எப்போதும் ஏற்படுவதில்லை. ஒருமுறை பிசகியும் அப்புறம் அதனின்று வழுவாமலும் அப்புறம் வழுவியும் மாறிமாறி இதுவும் ஏற்படும். கால்தவறுதல் என்ற வழக்கைக் காண்க. எப்போதாவது ஒருமுறை கால் தவறுகிறது.
தப்புதலும் எப்போதும் நடவாமல் எப்போதாவது நடப்பதுதான். இதிலிருந்து தபு என்ற சொல் இடைக்குறைந்து தோன்றுகிறது. அதில் அம் விகுதி இணைந்து தபம்> தவம் ஆகிறது. ப > வ போலியால் ஏற்படும் மாற்றம் இது. தவம் என்பதும் ஒரு குறிப்பிட்ட காலம் நடைபெற்று அப்புறம் முடிவதுதான். அதன் முடிவு ஒரு வெற்றி என்றும் கூறப்படும். வேண்டியதைப் பெற்ற மனநிறைவுடன் அது முடிகிறது.
இந்தச் சொற்களிலெல்லாம் தவ, தப என்ற அடிச்சொற்கள் இடையீட்டுடன் நடைபெறுதலை அடிச்சொல்லின் உள்ளுறை பொருளாகக் கண்டு உண்மையை உணரவேண்டும்.
இதைப் பின்னர் விரித்துணர்வோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.